கிழக்கில் 20ஆயிரம் ஆசிரியர்களிருந்தும் இறுதிநிலை ஏன்?

0
384
கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் திசாநாயக்க கவலை!
(காரைதீவு   சகா)
 
கிழக்கு மாகாணத்தில் நிறைந்தஅறிவுள்ள 20ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் ஆளணிகள் இருந்தும் பொதுப்பரீட்சைகளைப்பொறுத்தவரை இலங்கையில் இறுதிநிலையில் கிழக்குமாகாணம்  இருப்பது கவலையளிக்கிறது. 
 
என்று கிழக்குமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.டி.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக்க தெரிவித்தார்.
 
சர்வதேச கல்வியகமும் நோர்வே ஆசிரியர் சங்கமும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் இணைந்து நடாத்திய திருகோணமலை கல்வி வலய அதிபர்கள் ஆசிரியர்களுக்கான செயலமர்வை ஆரம்பித்துவைத்துரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இச்செயலமர்வு  திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.டி.எம்.டபிள்யு.ஜி.திஸாநாயக்கவும் சிறப்பு அதிதியாக திருமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என். விஜேந்திரனும் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்துவைத்தார்கள்.
 
 ஆசிரியர்ளின் உரிமைகளும் கடமைகளும் சவால்களும் ஆசிரியர்கோவையினுள் அடங்கியிருக்கவேண்டியவை மற்றும் பெண்ஆசிரியைகள் எதிர்நோக்கும் சவால்களும் கல்விக்கான பங்களிப்பும் போன்ற தலைப்புகளிலான செயலமர்வை வளவாளர்களான முன்னைநாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அ.வேதநாயகம் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர்  நடாத்தினர்.
 
அங்கு செயலாளர் திசாநாயக்க மேலும்  உரையாற்றுகையில்:
 
ஆசிரியர் என்றார் யார்? அதாவது எம்மைப்பற்றி நாம் முதலில் அறிந்துகொள்ளவேண்டும். கல்விமைச்சின் செயலாளர் யார்  என்றால் திசாநாயக்க என்று பதிலளித்தால் மட்டும் போதுமா?
இல்லை எமக்குரிய தூரநோக்கு என்ன? இலக்கு என்ன? என்பதையறிந்துகொள்ளவேண்டும்.
 
செயலாளரைப்பொறுத்தவரை இலங்கையின் 9வது இடத்திலுள்ள கிழக்கு மாகாணத்தை ஒருபடிமேலாவது உயர்த்தவேண்டும் என்ற இலக்கு இருக்கவேண்டும்.அதற்கு நான்மட்டும் என்னசெய்யமுடியும்? இதற்கான முக்கிய பொறுப்பு  ஆசிரியர்களே.
 
உங்களைப்பொறுத்தவரை நிறைந்த அறிவுள்ளது. அதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் மனப்பாங்கில் மாற்றமேற்பட்டுள்ளதா? என்பதில் சந்தேகமிருக்கிறது.நான் என்னுடையது என்ற மனப்பாங்கே அதிகரித்துக்காணப்படுகின்றது.
 
நேற்றுமட்டும் என்னை 200 ஆசிரியர்கள் இடமாற்றம்கேட்டுச்சந்தித்துள்ளனர். தங்களை வீட்டிற்கு அருகிலுள்ள  பாடசாலைகளுக்கு நியமிக்குமாறு கேட்கின்றனர். 45வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் என்றால் அவர்களுக்கு குடும்பமிருக்கும் பிள்ளைகளிருக்கும். தனிப்பட்ட பிரத்தியேக பிரச்சினைகளிருக்கும். அதுநியாமானதாகவுமிருக்கும்;. 
 
அதற்காக எமது தொழிலை விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலமா? கிழக்கில் 20ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் நகரப்புறத்தில் கற்பிக்கவே விரும்புகின்றார்கள். வசதிவாய்ப்புகளை அனுபவிக்கவிரும்புகின்றார்கள். அப்படியெனில்  பின்தங்கிய பிரதேச மாணவர்கள் கற்பதில்லையா? அவர்களுக்கு கற்பிப்பது யார்?
 
நானும்  குடும்பக்காரன்தான்.எனக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஆனால் நான் ஒருபோதும் எனது பிரத்தியேக பிரச்சினைகளை பிறர்முன் ஒருநாளும் கூறுவதில்லை. செய்யும் தொழில் முக்கியம்.
 
 
தேசிய தேவைப்பாடு ஒன்றுள்ளது. தேசிய இலக்குள்ளது. 38லட்சத்து 50ஆயிரம் மாணவர்களுள்ளனர். அனைவரையும் நற்பிரஜைகளாக்கவேண்டியது ஆசிரியர்களது கடமை.
 
தேசத்தைக் கட்டியெழுப்புவர்கள் ஆசிரியர்களே. மாணவர்களை வழிநடாத்தவேண்டியவர்கள் நீங்களே. உங்களுக்கு முக்கியபொறுப்புள்ளது. என்னால் முடியாது. நான் ஒரு அரச நிருவாகி. ஆனால் உங்களால் முடியும். ஆசிரியர்கள் முன்மாதிரியானவர்கள். சமுதாய சிற்பிகள். மரியாதைக்குரியவர்கள்.
 
இந்த நாட்டு ஜனாதிபதிகூட ஆசிரியர்களை இறங்கிவந்து மதிப்பவர். ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால் சில இடங்களில் கூடுதலான ஆசிரியர்களுள்ளனர்.
இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்கு அவசியமா? நிச்சயமாக. தனது வாண்மைத்துவத்தை விருத்திசெய்யவும் இற்றைப்படுத்தவும் பயிற்சி அவசியம். இல்லையெனில் நாம் காலாவதியாகிவிடுவோம். நீண்ட வரலாற்றைக்கொண்ட இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கம் இத்தகையபயிற்சிகளை அளித்துவருவதை நானறிவேன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். என்றார்.
 
கலந்துகொண்ட அதிபர் ஆசிரியர்களுக்கு பிரசுரப்பொதியொன்றும் நூல்களும் வழங்கப்பட்டன.ஆசிரியர்களின் பின்னூட்டல்களும் பெறப்பட்டன.
உவர்மலை விவேகானந்தா மகா வித்தியாலய அதிபர் எஸ்.ரவிதாஸ் நன்றியுரையாற்றினார்.