பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை மாத்திரம் கட்டிக் கொடுத்தால் சரிப்பட்டு வராது

0
204

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை மாத்திரம் கட்டிக் கொடுத்தால் அவர்களது தேவைகள் பூர்த்தியாகிவிட்டது என்று அர்த்தமாகாது. நாடு எதிர்நோக்கியிருக்கின்ற இனவாதத்தை தீயை முதலில் அணைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர், மீராகேணி கிராமத்தில் கட்டார் நாட்டின் கட்டார் சரிற்றி நிறுவனத்தினால் நிதியளிக்கப்பட்ட தலா 8,50000 ரூபாய் பெறுமதியான 22 வீடுகள், உட்பட பள்ளிவாசல், கிளினிக் நிலையம், கடைத் தொகுதி, முன்பள்ளி ஆகியவற்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை 17.03.2018 பிற்பகல் இடம்பெற்றது.

அங்கு அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏறாவூரின் கடற்கரையை ஒட்டிய இந்தப் பகுதி பாலை வனம்போல் காட்சி தருகிறது. அதனை அவ்வாறே விட்டுவிடாமல் மரம் செடி கொடிகளை வளர்த்து பசுஞ் சோலையாக வனப்பைப் பேண வேண்டும்.

அந்த திட்டத்திற்காக இந்த ஆண்டில் சுமார் 1000 மரக்கன்றுகளை முதற் கட்டமாக நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக ஸக்காத் நிறுவனம் உதவி புரியும். அதேவேளை அந்த மரங்களுக்கு நீரூற்றிப் பராமரிக்கின்ற பொறுப்பை புதிய வீட்டுத் திட்டத்தில் உள்ள பயனாளிகளான குடியிருப்பாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, சத்தாம் ஹ{ஸைன் மற்றும் மிச் நகர் ஆகிய கிராமங்களுக்கு இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 2 கிலோமீற்றர் தொலைவுக்கு நீர் விநியோகிக்க சுமார் 80 மில்லியன் ரூபாய் பணத்தை நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு ஒதுக்கியுள்ளது.

எனவே, இந்தப் பிரதேசத்தில் வாழும் கிராம மக்களுக்கு தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படாது. குழாய் நீர் விநியோக இணைப்பையும் உதவி அமைப்புக்களின் அனுசரணையுடன் இலவசமாகவே செய்து தருவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இவை ஒரு புறமிருந்தாலும் நம் கண்முன்னே காணி, வீட்டு வசதிகள், வாழ்வாதாரம், குடி நீர் வசதி என்று பல சவால்கள் நிறைந்துள்ளன.

நாடு எதிர்நோக்கியிருக்கின்ற இனவாதத்தை தீயை முதலில் அணைக்க வேண்டும்.

இம்மாதம் 04ஆம் திகதி இனவாதத் தீ கண்டியில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது முதல் இன்று வரை எமது தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் அந்த மக்களுடனேயே இரவு பகலாக நின்று புகலிடம், பாதுகாப்பு, உணவு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்.

நாடடின் வெவ்வேறு பாகங்களில் அவ்வப்போது மூட்டப்படுகின்ற இனவாதத்தை தீயை அணைத்து இந்த நாட்டிலே நாங்கள் அச்சமும் பீதியுமின்ற வாழ்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்களாகிய நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், அதிலும் பல சவால்களை எதிர்கொள்கின்றோம், என்றாலும் நாங்கள் இந்த சவால்களைக் கண்டு ஒரு போதும் தயங்கப் போவதில்லை.

அதேவேளை, சிறுபான்மையினராகிய நாங்கள் நேர்மையாக பொறுமையாக, கவனமாக, உறுதி குலையாது நடந்து கொள்ள வேண்டும். நேர்மை தவறினால் குழப்பங்களைத் தவிர்க்க முடியாது போகும். எந்தவொரு சமுதாயம் நெறி கெட்டுப் போகிறது அந்த சமுதாயம் தறிகெட்டு அழியும்” என்றார்.