தாந்தாமலையின் முதலாவது பட்டதாரி

0
5380

      –  படுவான் பாலகன் –

 ஊருக்குள் முதலாவது பட்டதாரியாகின்றாள் ஜீவரெத்தினம் ஜீவராணி என மகிழ்ச்சியோடு கூறுகின்றனர் மலைகளும், வயல்களும், வனப்புகளும் நிறைந்த அழகிய  தாந்தாமலைக் கிராமமக்கள். முதலாவது பட்டதாரியா? இதுவெல்லாம் ஒரு வரலாறா? என நகர்புறத்தில் வாழும் மக்கள் நினைக்கலாம். உண்மையில் இங்குள்ள மக்களுக்கு, முதலாவது பட்டதாரி உருவாகியுள்ளமை வரலாறுதான். இதனை ஏன் சொல்லுகிறேன் என்பதை தொடர்ந்து படித்துபாருங்கள், புரியாதது, தெரியாததெல்லாம் புரிந்து, தெரியவரும்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓர் எல்லைப்பகுதியில் குறிப்பாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில்தான் ஜீவராணி வாழும் தாந்தாமலைக்கிராமம் அமைந்திருக்கின்றது. இங்குதான் வரலாற்றுச் சிறப்புமிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயமும் அமையப்பெற்றுள்ளது. தாந்தாமலை என்று அழைத்தாலும், தாந்தாமலை கிராமசேவையாளர் பிரிவிற்குள்தான் ரெட்வானா, 40வட்டை, நெல்லிக்காடு, வீரக்காடு, மக்களடிஊற்று, அலியார்குளம் போன்ற கிராமங்களும் உள்ளடக்கியிருக்கின்றன.

கிராமங்கள் என்றால்? நெருக்கமான மக்கள் தொகையும், அருகருகிலும் அமையப்பெற்றதல்ல. ஆங்காங்கு வீடுகளும், ஒரு கிலோ மீற்றர் இரு கிலோமீற்றர் தொலைவில்தான் கிராமங்களும் அமைந்திருக்கின்றன. இம்மக்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் அகப்பட்டு தற்போதுதான் எழுந்துவருகின்றனர்.

278 குடும்பங்களையே கொண்ட இக்கிராமத்திற்கென நாற்பதுவட்டையில் ஓர் பாடசாலை அமைந்துள்ளது. அப்பாடசாலையில்தான் 7 கிராம மாணவர்களும் கற்கின்றனர்.

பாடசாலை என்றால்? நகர்புறங்களில் உள்ள நூற்றாண்டை கண்ட பாடசாலை போன்றதல்ல இப்பாடசாலை. 1990ல்தான் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகின்றனர். தற்போது 172 மாணவர்கள் இப்பாடசாலையிலே கல்வியைத் தொடருகின்றனர்.

 

கற்பதற்கு இங்குள்ள மாணவர்களுக்கு ஆர்வமிருந்தாலும், கற்பதற்கான சூழல், வசதிகள் தற்போதுதான் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இதனால்தான் பட்டதாரியொருவரை உருவாக்குவதற்காக 2017ல் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஒரு மாணவரை நாற்பதுவட்டை கிராமம் அனுப்பி வைத்து மகிழ்ச்சி கொண்டுநிற்கின்றது. 

 

வசதியென்று கூறுவது பாடசாலை அமையப்பெற்றமையே தவிர, இன்னமும் இப்பாடசாலையில் கணிதம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாத பிரச்சினைகளும் இருக்கதான் செய்கின்றந. அதேவேளை உயர்தரம் கற்பதற்கு 20 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைகளுக்குதான் சென்று கற்கவேண்டிய சூழலும் இருக்கின்றதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். 20கிலோ மீற்றர் தூரம் செல்வது ஒன்றாக இருந்தாலும், போக்குவரத்து செய்யும் வீதி, உரிய நேரத்திற்கு போக்குவரத்து செய்யமுடியாமை, மழை ஏற்பட்டால் போக்குவரத்து தடை, இரவில் யானையின் தாக்குதல் என அன்றாடம் பிரச்சினைகளோடு வாழ்வதாக இங்குள்ள மக்கள் எந்த தயக்கமும் இன்றி கூறிக்கொண்டனர்.

 

யானையை கண்டால் பயமில்லையா? என்றுகேட்டபோது,  ‘பயந்தால் வாழமுடியுமா?’ ‘அதுவும் அடிக்கிறதான் நாமளும் வாழுறதான்‘. ‘விதியென்றா போறதான்‘. என்று துணிவுடன் அவர்கள் கூறிய வார்த்தைகள்தான் அவர்களின் மனஉறுதியை வலிமையாக்கி நின்றதாக தென்பட்டன.

பாடசாலையை மட்டுமே தமக்கான கல்வி வளமாக நினைத்துக்கொண்டு இங்குள்ள மாணவர்கள் வாழ்கின்றனர். உண்மையில் பாடசாலையை மட்டுமே நம்பி வாழவேண்டிய நிலைதான் இங்கும் இருக்கின்றது.

 ஏன் அவ்வாறு கூறுகின்றேன் என்றால், சிலருக்கு புரிந்திருக்கும். இங்கு பிரத்தியேக கல்வி நிலையங்கள் இல்லை. 1990ல்தான் பாடசாலை ஆரம்பித்தது. இதனால் இங்குள்ள பெற்றோர்களும் பட்டறிவு கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனாலும் இரண்டுபேர் அரசாங்கத்தில் வேலைசெய்கின்ற அரச ஊழியர்களாக இருக்கின்றனர். கற்பதற்கு மாணவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதேவேளை திறமையானவர்களாகவும் இருக்கின்றனர். இதனை 2012ம் ஆண்டு இப்பாடசாலை படைத்த சாதனை சான்றாக்குகின்றது.

குறிப்பாக கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 100வீத சித்தியை பெற்றிருந்ததுடன், கணித பாடத்திலும் விசேட சித்தியைப் இப்பாடசாலை மாணவன் ஒருவன் பெற்றிருந்தான். இவ்வாறான கிராமத்தில், இப்பாடசாலையில், கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் வரை கற்று சித்தியடைந்த ஜீவராணிதான் இன்று கிராமத்தின் முதல் பட்டதாரியாகின்றாள்.

arangam