ஆலயங்கள் சமூகச்செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட வேண்டும்

0
1171

பாடசாலைகளைசார்ந்த அதிபர் ஆசிரியர்கள்,இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் அறநெறிப்பாடசாலை மாணவர்களின்; அறநெறிக்கற்பித்தலுக்கு உதவுதல் வேண்டும். இன்று அறநெறிப்பாடசாலைகளில் பங்குகொள்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக வுள்ளன.
இதனை அதிகரிக்க விஷேடமாக பாடசாலை அதிபர்கள் முக்கியமான கடமையை ஆற்ற முடியும் என தம்பலகமம் பிரதேச செயலாளர் திருமதி .ஸ்ரீபதி அவர்கள் வேண்டுகோள்விடுத்தார்.
மாவட்டரீதியிலும் தேசியரீதியிலும் அறநெறிப்பாடசாலைகளூடாக 2017 க்கான போட்டிகளில் ஆக்கத்திறனை,திறமைகளைக்காட்டிய மாணவர்களுக்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தியது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.அருந்தவராஜா தலமையில் திருகோணமலை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு பலரும் அறநெறிக்கல்வியின் அவசியம் மாணவர்கள் அறநெறிக்கல்வியில் பங்கு பற்றமை.? மற்றும் இந்து சமய நடவடிக்கைளில் காணப்படும் பின்னடைவுகள்,சவால்கள் பற்றி பல்வேறு வித மான கவலைகளை வெளியிட்டனர்.?
இதன்போது சிறந்த, உற்சாக மான கருத்துக்களை திருமதி ஸ்ரீபதி அவர்கள் முன்வைத்துப்பேசினார்.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள பாடசாலை நிருவாகத்தினர் பங்களிப்பை நல்கமுடியும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார்..
அவர் இங்கு மேலும் கருத்துவெளியிடுகையில்,இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் எமது சமய பண்புகள், கலாசாரம், பண்பாடுகள் போன்றவற்றை எடுத்துக்கூறுபவையாக இருக்கின்றன.
உண்மையில் எங்களைப்பொறுத்தளவில் 1983இற்கு பிற்பட்ட காலத்தில் பல இடர்பாடுகளையும், இன்னல்களையும், பல துன்பகரமான சூழ்நிலைகளையும் சந்தித்து விட்டு, தற்போது வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற சமூகமாக நாங்கள் இருந்துகொண்டிருக்கின்றோம்.
இருந்தாலும் 2009 இற்குப்பிற்பாடு ஒரு மாற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.குறிப்பாக தொழில் நுட்பத்தோடு எமது இளம்சமூதாயம் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற காலமாக அது உருவெடுத்துள்ளது.இதுவும் சவால்மிக்க காலமாகவே உள்ளது.
நானும் ஒரு முன்னாள் ஆசிரியராக இருந்தவர் என்ற அடிப்படையில் ஆசிரியர் ஒருவரால் முடியாத விடயம் இருக்க முடியாது என நான் கருதுகின்றேன்.
நான் மாணவப்பருவத்தில் இருந்த காலத்தில் எனக்கு கிடைத்த ஒரு அறநெறியை ஒத்த கல்விச்செயற்பாடு இன்றும் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.என நான் உணர்கின்றேன். அந்தக்காலத்தில் நாங்களும் பல இடம்பெயர்வுகளைச்சந்திதோம். பின்னர் பல பாடசாலைகளில் கற்க வேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டது. குறித்தகாலத்தில் இவ்வாறான அறநெறிப்பாட வசதிகள் எங்களுக்கு கிட்ட வில்லை.ஆனாலும் அதனை ஒத்த ஒரு சந்தர்பம் சாயி சமித்தி மூலம் எனக்கு கிட்டியது.
அதன்மூலம் எனக்கு கிடைத்த அந்த கல்வி இன்றும் கூட எனது வாழ்வில் மறக்கமுடியாத பயன்பாட்டிற்குரிய விடயமாகவுள்ளன. அந்த விடயத்தில் குறித்த ஆசிரியர்கள் எங்களுக்கு ஏற்படுத்திய ஒழுக்கங்கள் விழுமியங்கள் இன்றும் எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன. அவர்கள் சொல்லித்தந்த அறிவுரைகள் ,சிறிய வயதில் கிடைத்த அந்த அனுபவம்,எங்களுக்கு நம்பிக்கை தருவனவாக , வழிகாட்டியாக அமைந்துள்ளன.
ஆகவே உங்களிடம் கிடைத்திருக்கின்ற குழந்தைகள் மிகச்சிறிய வயதில் இருந்த வருகின்றார்கள்.தம்பலகாமத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றார்கள். ஏறத்தாள 400 மாணவர்கள் வரையே அறநெறிக்கல்விக்கு வருகிறார்கள். அந்தவகையில் உங்களை நம்பி வருகின்ற இந்த மாணவச்செல்வங்களை சரியான முறையிலே வழிநடத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.
உண்மையில் இந்தக்காலத்தில் எமது இளம் சமூதாயத்திற்குத்தேவையான விடயங்கள் சரியான முறையிலே புகுத்தப்படுவதில்லை.
இந்த அறநெறி என்ற விடயம் சிறார்களின் உள்ளத்தோடு, மனதோடு, அவர்களது எதிர் காலத்தோடு தொடர்பபட்டவிடயமாகவுள்ளன. பாடசாலையில் சமய பாடம் ஒரு மனனம் செய்கின்ற பாடமாகவே காணப்படுகின்றது. அறநெறியில் அவ்வாறு இல்லை. அதனை ஒரு பயன்தரு விடயமாக மாற்றவேண்டியது அசிரியர்களாகிய உங்களது கைகளில் தான் உள்ளது.
ஆகவே பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் இந்த அறநெறிப்பாடசாலைகளை ஊக்கப்படுத்த , மாணவர்கள் பங்குபற்றச்செய்ய உதவவேண்டும்.
பரீட்சைக்காகவும் போட்டிக்காகவும் கற்பிக்கின்ற பாடமாக இருந்த எமது சமயக்கல்வியை தற்போது எமது கலாசாரத்திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் அவர்களும் அவரோடு இணைந்த திணைக்கள உத்தியோகத்தர்களும் மாற்றியமைத்து வருகிறார்கள். எமது குழந்தைகளை ஆளுமைமிக்கவர்களாக மாற்ற முயற்சித்த வண்ணமுள்ளனர்.
எமது மாவட்டத்தில் சில இடங்கள் பின்தங்கிய இடங்கள.; சில இடங்கள் மாற்று இன மக்கள் அதிகமாக வாழும் இடங்கள். குறிப்பாக பாட்டாளிபுரம் போன்ற இடங்கள் மிக மோசமாக யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட இடங்களாக இருக்கின்றன. அவர்களைப்பொறுத்தவரை அவர்களது வாழ்வாதாரம்,காணிகள், பண்பாடு, அவர்களது சமயம,கலைகலாசாரம்; உள்ளிட்ட எல்லா விடயங்களும் இழக்கப்பட்ட, சிதைந்த நிலையில் உள்ளன.
அந்தப்பகுதிகளில் உள்ள சிறார்களை நாம் வலுவுள்ளவர்களாக மாற்ற வேண்டிய நிலமைகளில் இருக்கின்றோம்.அதற்கு பலரது பங்குபற்றுதல்கள் அவசியமானதாகவுள்ளன.என வலியுறுத்தினார்.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண பண்பாட்டல்வல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி இரவீந்திரன் அவர்கள் குறிப்பிடுகையில், இத்தகைய விழாக்கள் எமது சமயத்தையும், பண்பாட்டையும் மாணவர்கள் மத்தியில் வளர்க்க உதவுகின்றன.
இங்கு எனக்கு முன் பேசியவர்கள் பலவிடயங்களைச் சுட்டிக்காட்டினார்கள். அத்தனையும் உண்மையான விடயங்கள் தான்.
தற்போதைய தொழில் நுட்பக்காலம் மற்றும் அந்த தொழில் நுட்ப யுகத்தினால் எமது சமயம் பண்பாடு கலாசாரம் என்பன பாதிக்கப்பட்டு வருகின்றன. அருகிப்போய்கொண்டிருக்கின்றன.எமது மாணவ சமூதாயம் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் கல்வியில் மட்டுமே அதிக காலத்தை செலவளிக்கிறார்கள்.
பெற்றார்களும் தங்களது பிள்ளைகளுக்கு கல்வியை மட்டும் கற்பித்தால் போதும் என்ற மன நிலையில் அதிகம் முயற்சிக்கின்ற நிலமையை உணர முடிகின்றது.
ஏனைய இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலோ, விளையாட்டுக்களிலோ, மாணவர்கள் நேரத்தைச்செலவிடமுடியாத நிலமைகள் ஏற்பட்டு வருகின்றது.
இவ்வாறான விழாக்கள் மற்றும் அறநெறிக்கல்வி ஊடாக இந்து சமய கலாசார அமைச்சு மற்றும் திணைக்களங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இன்று தேசிய ரீதியில் மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாட்டிற்கான சந்தர்பங்களை இந்த அமைப்புக்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தியன் காரணமாக மாணவர்களின் திறன்கள் ஆற்றல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன. அது தேசியமட்டத்திலும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இவ்வாறான மாணவர்களின் ஆளுமைகள் தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும். பண்பாடு கலாசாரம் என்பன பாதுகாக்கப்படவேண்டும்.இங்கு கதாபிரசங்கத்தை செய்த கந்தளாய் அறநெறிப்பாடசாலை மாணவன் சமய த்தில் உள்ள பல்வேறு அறக்கருத்துக்களை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
அதன்மூலம் அவரது ஆற்றலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான தேசிய மட்டத்திலான ஆளுமை விருத்திக்கான சந்தர்பங்கள் மாணவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் பண்பாட்டையும் வலுப்பெறச்செய்யும். கல்வியோடு கூடிய அவனது பண்பாடுமே ஒரு மனிதனை ஒரு பூரணமான மனிhதனாக்கவல்லது. கல்வி மட்டும் ஒருமனிதனிடம் தனியே இருந்தால் அவனை அது ஒரு மனிதனாக்காது.
உதாரணமாக “ஒரு வைத்தியர் என்னதான் படித்திருந்தாலும் சிறந்த பண்புடன் மக்களை அணுக முடியாதவராக இருந்தால். அவரது வைத்தியம் முழுமையான பலனை நோயாளிக்கு வழங்காது” “.நோயாளியுடன் பண்பாக பேசினாலே பாதி வருத்தம் குறைந்து விடும்” என்பார்கள்.
எனவே இக்காலத்தில் மாணவர்கள் எமது சமய , பண்பாட்டுவிழுமியங்களை தரவல்ல இந்த அறநெறிக்கல்வியையும் கற்று தமது ஆளுமைகளை பண்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான சந்தர்பத்தை பெற்றார், மற்றும் சமூக அமைப்புக்கள் வழங்க பின்நிற்கக்கூடாது. எனவும் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய இவ்விடயத்திற்கு பொறுப்பான உதவி மாவட்டசெயலாளர் நடராஜா பிரதீபன் குறிப்பிடுகையில்,
இந்த மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வருகின்றன. அதிலும் இந்து மக்களின் எண்ணிக்கை இன்னும் குறைவடைந்த நிலையில் உள்ளன.இதற்கு யுத்தம், இடம்பெயர்வு மற்றும் பல்வேறு காரணங்களை நாங்கள் கூறமுடியும்.அடுத்த காரணமாக மதமாற்றம் இடம்பிடித்துள்ளது.
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குக்கிராமங்களை நாங்கள் சென்று பார்த்தால் அங்கு மத மாற்றங்கள் மிகத்தீவிரமாக நடைபெறுவதனைக்காணலாம்.நாங்கள் மிக அண்மையில் இந்து சய கலாசார திணைக்களத்தில் இருந்து ஒரு பட்டியலைப்பெற்றிருந்தோம். 1983ம்ஆண்டிற்குப்பிறகு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட 85 அமைப்புக்கள் அந்தப்பட்டியலில் இருந்ததனை காணமுடிந்தது.
ஆனால் கவலைக்குரிய விடயம் அதில் 10 கூட இன்று இயங்குவதாக இல்லை.
நிறைய இந்து இளைஞர் மன்றங்கள் பதியப்பட்டிருக்கின்றது.சைவ கழகங்கள் பதியப்பட்டிருக்கின்றன. பல இந்து அபிவிருத்தி அமைப்புக்கள் பதியப்பட்டிருக்கின்றன.ஆனால் தற்போது அவை இயங்குவதாக இல்லை.
ஆகவே இந்து மக்களுக்காக சிறார்களுக்காக குரல் கொடுக்க கூடிய அமைப்புக்கள் திருகோணமலையில் இல்லை.
திருகோணமலை மாவட்டத்தில் இந்துக்களுக்கெதிராக, நிறுவனங்களுக்கெதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றன அதற்காக மாவட்டத்தில் எவருக்குரல் கொடுத்தாக நான் காணவில்லை.
அக்குறை;நதாக பத்திரிகைளிழல் கூட ஒரு கண்டன அறிக்கை ஒரு இந்து அமைப்பு சார்பாக விடுக்கப்பட்டதாக கூட காணவில்லை.
ஆகவே நாங்கள் அனைவரும் ஒரு சுயநலப்போக்கில் செயற்படுவதாகவே கருத முடிகிறது. சிலர் நினைக்கிறார்கள் எமது பிள்ளைகள் மட்டும்படித்து டாக்டர் இன்ஜினியரானால் போது மென்று.அயலில் உள்ள பிள்ளையின் நிலமை எதுவாக இருந்தாலும் பறவாயில்லை என்ற நிலமையில் தான் நாம் செயற்படுகின்றோமா? என எண்ணத்தோன்றுகிறது.
இப்படியான பல எண்ணங்கள் சிந்தனைகள் காரணமாக பல அழிந்து போhன கிராமங்களை நாம் காண்கின்றோம்.முற்று முழுதான சைவத்தமிழ் கிராமங்கள் தற்போது வேறு சமூகம் வாழும்கிராமங்களாக காணப்படுகின்றன.இதற்கு நல்ல உதாரணம் மூதூர் நகர் பகுதியாகும்.
மூதூரில் நல்லூர், பாட்டாளிபுரம், குச்சவெளியில் திரியாய் போன்ற கிராமஙகளின் நிலமைகளைப்பார்த்தால் நிலமை நன்றாக புரியும்.ஆகவே தற்காலத்தில் நாம் மிகவும் முக்கியமாக சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
முக்கியமாக ஆசிரியர்கள், அதிபர்கள், விஷேடமாக சமூக அமைப்புக்கள் இந்த விடயங்களில் தமது கவனத்தைச்செலுத்த வேண்டும்.
நாங்கள் காலம் கடந்த பிறகு ஆளுக்காள் குற்றச்சாட்டை வைப்போம். பெரிய விடயங்களை சந்தித்து பிறகு விமர்சனங்களை வைப்போம். நிறைய விடயங்கள் அப்படித்தான் நடக்கின்றது. அந்த நேரத்தில் அந்த காலத்தில் அதனைச்சரியாகச்செய்யாமல் பொறுப்புக்களை தட்டிக்களித்து விட்டு, பல வருடங்கள் சென்ற பிறகு இடங்கள் பறிபோய் விட்டது என்று புலம்பவதில் பயனில்லை.
அந்ததந்த விடயத்தை அந்ததந்த நேரத்தில் அரசியல் தலைவர்களும் சமய அமைப்புகளும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதேபோன்று பெற்றார்களும் மாணவர்களும் கடமைகளை புரிந்து செயற்பட வேண்டும்.அது காலத்தின் கட்டாயமாகும்.உங்களது மாணவர்களை மேலதிக கல்விக்கு அனுப்புங்கள் பிரச்சனையில்லை. ஆனால் அறநெறிக்கல்வியும் மிகமுக்கியமாகும்.
அந்த அறநெறியினூடக எமது தமிழ் சைவச்சிறார்கள் ஆளுமை மிக்க சமூதாயமாக எதிர் காலத்தில் உருவாக வேண்டும்.அவர்களுக்கொரு சமூக அக்கறை வரவேண்டும். அருகில் இருப்பவர்களுக்குதவவேண்டும் என்ற உணர்வு வரவேண்டும்.
எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நிதி வராது. எமக்கு நாமே உதவவேண்டும்.
கிழக்கு மாகண கல்வி அமைச்சினால் அண்மையில் ஒரு சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஞாயிறு தினங்களிலநண்பகல் ஒரு மணிவரை தனியார் வகுப்பக்களை நடாத்த தடைவிதித்துள்ளார்கள்.
இது வரவேற்கத்தக்க விடயம்.இதன்மூலம் அறநெறி வகுப்பிற்கான சந்தர்பம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை சிறந்த முறையில் செயற்படுத்துவதற்கு பாடசாலை நிருவாகங்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.குறிப்பாக அதிபர்கள், அசிரியர்கள் இதற்குப்பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.ஏனெனில் தனியார் வகுப்பக்களை நடாத்தவது பாடசாலை ஆசிரியர்கள்தான்.
ஆகவே பாடசாலைக்கூட்டங்களில் உங்கள் ஆசிரியர்களை இதுதொடர்பில் அறிவுறுத்துங்கள். பாடசாலை அதிபர்கள், இந்த அறநெறிக்கல்வியின் முக்கியத்தவத்தையும் நீங்கள் ஆசிரியர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும் விநயமாக கேட்டுக்கொள்கின்றோம்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது இளம் சமூதாயம் எதிர் கொண்டுள்ள சவாலகளை வெற்றி கொள்ளச்செயற்படுவோம்.இதற்காக ஆலயங்கள் சமூகச்செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.
தொகுப்பு.. பொன் சற்சிவானந்தம்..