மக்களின் பேராதரவுடன் ‘புதிய சுதந்திரன்’ யாழில் வெளியீடு

0
737

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீடு இன்று 14ஆம் திகதி புதன்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் அகிலன் முத்துக்குமாரசாமிடமிருந்து பத்திரிகையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்குப் பிரதிகளை வழங்கி வெளியிட்டு வைத்தார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும், உலகத் தமிழர் பேரவையின் தவைவர் இம்மானுவல் அடிகளார், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா மற்றும் இந்து, இஸ்லாமிய மதகுருமார், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ப பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தந்தை செல்வாவின் காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ‘சுதந்திரன்’ என்ற பெயரில் ஈழத்திலிருந்து பத்திரிகை வெளியானது . சுதந்திரனின் முதல் இதழ் 1947 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதியன்று வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன், 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 – 1961 காலத்தில் எஸ்.டி.சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன், பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. இனக்கலவரத்தை அடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் இந்தப்பத்திரிகை வெளியீடு 1983இன் இறுதியில் நிறுத்தப்பட்டது.

35 வருடங்களின் பின்னர் தற்போது அது புதிய பரிணாமத்தில்’ புதிய சுதந்திரன்’ எனும் பெயரில் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.