சமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை

0
372

சமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு இஸிபத்தனை கல்லூரியின் நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.இந்த நீச்சல் தடாகம் ஆறு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இவற்றின் மூலம் பொருளாதாரத்திற்கும், கல்விக்கும், தொலைத்தொடர்பாடலுக்கும் கிடைக்கும் பங்களிப்பு அதிகமாகும்.

எனினும், இனவாத, பிரிவினைவாத மோதல்களுக்கு வித்திடவும், குரோதத்தை பரப்பவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கண்டி அசம்பாவிதங்களில் தெளிவாக தெரியவந்தது.

எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகளை தவிர்ப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் கூறினார்.

இணையம் காரணமாக புதியதொரு சமூக வலைப்பின்னல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார்கள்.

எனினும், இதனை கல்வி நடவடிக்கைகளில் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

நாளை பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகிறார்கள். இவர்களுடன் பேஸ்புக் வலைப்பின்னலை மேற்பார்வை செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.