ராஜீவ் காந்தி கொலை மற்றும் சில முன்வைப்புக்கள்.

0
544

தனது தந்தையைக் கொன்றவர்களை, தானும் தனது தங்கையும் மன்னித்து விட்டோம் என்று, அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல் காந்தி சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே அவர் மனப்பூர்வமாக அப்படிச் சொல்லியிருந்தால் அது வரவேற்கத்தக்கது தான். பலவகைப்பட்ட சிந்தனைகளை, கேள்விகளைக் கிளர்த்தியிருக்கிறது இந்தச் செய்தி.

ராகுல் காந்தியின் நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிலும் இந்திய அரசின் நிலைப்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவருமா? திரு.ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு இன்னமும் நீண்டகாலச் சிறைத்தண்டனை அனுபவித்துவருகிறவர்கள் விடுவிக்கப்படுவார்களா? ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய மோசமான படுகொலைகள் மற்றும் அனர்த்தங்கள் இந்திய அரசு மட்டத்தில் விசாரிக்கப்படவோ ஏற்றுக்கொள்ளப்படவோ சாத்தியமுள்ளதா?

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இன்னமும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், வெளிப்படையாக இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு கொலையில் நேரடியான தொடர்பு உள்ளது உறுதிப்படுகிறது. ஈழத்தில் இந்தியப் படைகள் நிகழ்த்திய மோசமான படுகொலைகள் மற்றும் அனர்த்தங்கள் போன்றவற்றுக்கான பழிவாங்கலாகவே அந்தக் கொலை பெருமளவில் அறியப்பட்டிருக்கிறது. எது எப்படியிருந்தாலும், ஈழ விடுதலைப் போராட்டம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் ராஜீவ் காந்தி கொலையானது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பாரிய ராஜதந்திரத் தோல்விகளில் ஒன்றாகவே ராஜீவ் காந்தி கொலை பார்க்கப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அத்தகைய நூல்கள் நான்கினை, சென்னை புத்தகக் காட்சி நிகழ்வில் அண்மையில் வாங்கியிருந்தேன். ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் அதில் ஒன்று. சிறைவாசியான இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூலானது, பலவகைப்பட்ட எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகளுக்கு இருப்பதாக நம்பப்படும் நேரடித் தொடர்பை மறுக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கே.ரகோத்தமன் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ என்ற இன்னொரு நூல் மிகுந்த கவனிப்புக்குரியதாகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், திரு. அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், ராஜீவ் காந்தி கொலை குறித்த கேள்வி ஒன்றுக்கு ‘அது ஒரு துன்பியல் நிகழ்வு’ என்று பதிலளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருந்தாலும், மிகவும் சக்திவாய்ந்த விடுதலைப் போராட்ட இயக்கமாகப் பன்முகப்பட்ட வளர்ச்சியடைந்த விடுதலைப் புலிகள் இயக்கமானது, ராஜதந்திரச் சறுக்கலாக நிகழ்த்திய ‘துன்பியல் நிகழ்வுகளில்’ ஒன்றாகவே ராஜீவ் காந்தி கொலையினைப் பார்க்க முடிகிறது.

கேரளாவில் நிகழ்த்தப்பட்ட எனது யுத்தகால ஒளிப்படக் காட்சிப்படுத்தல்களின் போது, என்னிடம் சில நேர்காணல்கள் செய்யப்பட்டன. அப்போதெல்லாம் ‘முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்’ தொடர்பிலான கேள்விகளோடு, ஈழத்தில் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை தொடர்பிலான கேள்விகளும் என்னிடம் கேட்கப்பட்டன. அவை தொடர்பில் சரியான அல்லது ஆழமான பார்வைகள் இந்தியாவில் மக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் இன்னமும் பெருமளவிற்கு ஏற்படவில்லை என்பதை, தொடர்ச்சியான சில உரையாடல்களில் நான் புரிந்துகொண்டேன். ஈழத்தில் எனது சொந்த ஊரில் இருந்த, முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு. அண்ணாதுரை யின் சிலையொன்றினை இந்திய இராணுவம் மோசமாகத் தாக்கி உடைத்தமை பற்றியும், உடைக்கப்பட்டிருந்த அந்தச் சிலையை நான் பிற்காலத்தில் ஒளிப்படமாக்கியிருந்தமை பற்றியும், ஒரு உதாரணத்திற்காக சிலரிடம் சொல்லியிருக்கிறேன்.

தனது தந்தையைக் கொன்றவர்களை, தானும் தனது தங்கையும் மன்னித்து விட்டோம் என்று சொன்னதோடு, ராகுல் காந்தி மேலும் சொல்லியிருக்கும் சில விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.

”கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை தொலைக்காட்சி வாயிலாக நான் அறிந்து, அவரின் உடல் கிடத்தப்பட்டு இருப்பதையும் பார்த்தேன். அப்போது என் மனதுக்குள் இருவிதமான எண்ணங்கள் ஓடின.

முதலாவது, பிரபாகரன் கொல்லப்பட்டதை ஏன் இவ்வளவு அசிங்கப்படுத்துகிறார்கள், கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதும், இரண்டாவது, பிரபாகரனின் குழந்தைகள் என்ன ஆகப்போகிறதோ?, அவரின் குடும்பத்துக்கு என்ன கதி ஏற்படுமோ?, அவர்கள் மனிதநேயத்துடன் நடத்தப்படுவார்களா? என்ற கவலை எனக்குள் ஏற்பட்டது.

உடனடியாக, எனது சகோதரி பிரியங்காவுக்கு தொலைபேசியில் அழைத்தேன். நம் தந்தையை கொன்ற பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். ஆனால், எனக்கு ஏன் மகிழ்ச்சி ஏற்படவில்லை. அது ஏன் என்பது தெரியவில்லை என்றேன். அவரும் என்னிடம் எனக்கும் எந்தவிதமான மகிழ்ச்சியும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

என் தந்தையை கொலை செய்த குற்றத்தில் சிறையில் இருக்கும் 7 குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக முதல்வரும் மறைந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு முடிவு செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால், என்னுடைய சொந்த கருத்தை கூறுங்கள் என்றார்கள். நான் இதில் கூற முடியாது என மறுத்து, இது அரசின் முடிவு என்று தெரிவித்தேன்.”

ராகுல் காந்தி யின் இத்தகைய சொல்லாடல் நுட்பமான கவனிப்பிற்குரியது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனாகிய பாலசந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் அதன் காட்சிபூர்வ ஆதாரங்களையும் ராகுல் காந்தி அறியாமலிருக்க நியாயமில்லை. அத்தகைய பல்வேறு படுகொலைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் சிறிலங்கா அரசு நேரடிக் காரணமாக இருந்தாலும், இந்திய அரசு மறைமுகக் காரணமாக இருந்திருப்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, அதற்கான பரிகார நீதியை வழங்கக்கூடிய அரசியலை ராகுல் காந்தி முன்னெடுப்பாரா? மேலும், மோசமான அரசியல் ராஜதந்திர உள்நோக்கத்தின் அடிப்படையில் இந்திய அரசும் சிறிலங்கா அரசும் பிரபாகரனின் இறப்பை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாமல் இழுத்தடிப்பதை அவர் கேள்விக்குள்ளாக்குவாரா?

எது எப்படியிருந்தாலும், இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் ஈழத்தமிழர் நலன்களும் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களும் சிக்கலுக்குரியதாகவே இருக்கும் என்று கருத முடிகிறது. இடையில், சிறிலங்கா அரசின் ராஜதந்திர நகர்வுகள் வழக்கம் போல நயவஞ்சகமாகத் தொடர்வதாகவே தெரிகிறது. விடுதலைப் புலிகளின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் இந்திய அரசின் தலையீடு பல்வேறு வகைகளில் இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் சிறிலங்கா அரசுக்கு உதவிய இந்தியாவானது, இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழருக்கான நீதியையோ நியாயமான நிரந்தர அரசியல் தீர்வையோ ஏற்படுத்த முன்வரவில்லை. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை சார் நகர்வுகள் இதுவரையிலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன. தொடர்ந்தும் இந்திய அரசு ஈழத்தமிழர் விவகாரங்களைத் தவறாகக் கையாளும் போக்கினையே அவதானிக்க முடிகிறது. ஈழத்தமிழரின் சுய நிர்ணய உரிமையும் விடுதலைப் போராட்டமும் இந்தியாவிற்கு எதிரானதல்ல. இந்த யதார்த்தமானது, சரியான முறையில் இந்திய அரசினால் இனியாவது புரிந்துகொள்ளப்படுமாயின், அது வருங்கால இந்திய ராஜதந்திர அரசியலை ஆரோக்கியமான வழியில் இட்டுச்செல்லக் கூடும்.

-அமரதாஸ்
2018-03-11

முகப்புத்தகத்திலிருந்து.