யாழில் விபச்சாரம்: ஒரு இலட்சம் தண்டம்!

0
1216
யாழ் நகரில் விபச்சார விடுதியை நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட  விடுதி உரிமையாளர் மற்றும் அதன் முகாமையாளருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன், அந்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என்று 3 பெண்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை எனத் தீர்ப்பளித்த நீதிவான் சி.சதீஸ்தரன் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.

யாழ்ப்பாணம் நகரில் பிரதான வீதியை அண்மித்த பகுதியில் இயங்கி வந்த விடுதியொன்றில் பாலியல் தொழில் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டி பொலிசார் அவ்விடுதியை சுற்றி வளைத்திருந்தனர்.

அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் விடுதியின் உரிமையாளர் மற்றும் பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் 2013ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி இடம்பெற்றது. சந்தேகநபர்களில் 3 பெண்களுக்கு எதிராக சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் என பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அத்துடன், விடுதி உரிமையாளர் மற்றும் பொறுப்பாளருக்கு எதிராக அனுமதிப்பத்திரமின்றி விடுதியை நடத்தினர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

வழக்கின் விளக்கம் நிறைவடைந்த நிலையில் நீதிவான் நேற்றுத் தீர்ப்பை வழங்கினார்.

இவ்வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த தவறியதால் எதிரிகள் இருவரும் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி
யாழ் தினக்குரல்