முஸ்லிம் சமூகம் சுய விமர்சனம் செய்து தங்களை சாதகமான முறையில் பலப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

0
304

இலங்கை முஸ்லிம் சமூகம் விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொண்டு சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.எஸ்.எம். நிராஸ் செவ்வாய்க்கிழமை 13.03.2018 தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் தூண்டி விடப்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எறாவூரிலிருந்து சேகரிக்கப்பட்ட 10 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 இலட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்து பாதிக்கப்பட்ட மக்களுடனும் பள்ளி வாசல் பிரதிநிதிகள், பொது அமைப்புப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டபின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இது பற்றி தொடரந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் பற்றி முஸ்லிம் சமூகம் சுய விமர்சனங்களை மேற்கொண்டு சாதகமான செயற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. இது சமகாலத் தேவைகளில் மிக முக்கியமானதாகும்.

முஸ்லிம் சமூக மட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரும் முதலில் விசுவாசத்தின் பற்றோடும், உறுதி குலையாமலும், தளர்ந்து போகாமலும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நாட்டின் தலை சிறந்த மனிதர்கள் என்ற நற்பெயரையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விழிப்புணர்வை முஸ்லிம் சமூகத்திலுள்ள எல்லா மட்டங்களுக்கும் ஊட்டவேண்டியிருக்கின்றது.

முஸ்லிம் சமூக அடிமட்டத்திலிருந்து முஸ்லிம் தலைமைத்துவங்கள், முஸ்லிம் நிறுவனங்கள், இஸ்லாமிய மார்க்க அமைப்புக்களைப் பற்றி உள்ளும் புறமும் அநேக விமர்சனங்கள் உள்ளன.

இந்த விமர்சனங்களை சாதகமான முறையில் எதிர்கொண்டு சிறப்பான செயற்பாடுகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மார்க்க விழுமியங்களைப் பேணி நடக்கின்ற அமைப்பிலே இருந்தால் இஸ்லாத்தின் தூய மார்க்க நெறி முறைகளை அடுத்தவர்களுக்கு எடுத்தியம்பி எத்தி வைக்க முடியும்.

தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளை சாதாhரண கிராம மக்கள் தொடக்கம், உயர் அதிகாரிகள் வரை கடைப்பிடித்து நடந்தால் இஸ்லாத்தின் மீதும் இந்த நாட்டின் முஸ்லிம்கள் மீதும் ஏனையோர் கொண்டுள்ள காழ்ப்புணர்வு தணிந்து போகவும் அதன் காரணமாக அவர்கள் விழிப்புணர்வு பெறவும் வாய்ப்பேற்படும்.

சமூக பலம் என்பது தூய இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வதனூடாகவே அடைந்து கொள்ள முடியும்.

தூய இஸ்லாமிய வாழ்க்கை முறைகளையும் அதன் போதனைகளையும் நடைமுறையில் காட்டாமல் அவற்றை ஒரு புறம் வைத்து விட்டு வெறும் இஸ்லாமியப் பெயர் தாங்கிகளாகவோ அல்லது ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் வாழ்கின்றோம் என்ற காரணத்தினாலோ நாம் எந்த வகையிலும் சிறப்படைந்துவிட முடியாது.

வியாபாரம், உத்தியோகம், கல்வி, அரசியல் உட்பட இன்னபிற பொருளாதாரத்தை ஈட்டும் கூலித் தொழில்களிலும் ஊழியம் வாங்குவதிலும் நாம் இஸ்லாமியப் பண்புகளைக் கடைப்பிடித்தாலேயன்றி வெற்றியும் கௌரவமும் ஒருபோதும் நமக்குக் கிடைக்கப்போவதில்லை.

எனவே, கிராம மட்ட அபிவிருத்தி தொடங்கி நகர அபிவிருத்தி வரை இடைப்பட்ட சமூக, கல்வி, அரசியல், பொருளாதார, கட்டுமான, வியாபார, விளையாட்டு, பொழுதுபோக்கு என அத்தனை துறைகளிலும் நாம் தூய இஸ்லாத்தின்படி வாழ்ந்து அந்த வாழ்க்கை முறையினை வார்த்தைகளிலன்றி நடைமுறையிலேயே அடுத்த சமூகத்தாருக்கு சொல்லி வைக்க வேண்டும்.

இதனூடாகவே முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் பிரதேசங்களும் நெருக்கடிகளைத் தவிர்ந்து கொண்டு நிம்மதியாக வாழ வழியேற்படும்;” என்றார். ‪