திரிபுராவில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த சர்க்காருக்கு சொந்த வீடில்லை

0
67

இந்தியாவின் திரிபுரா மாநில முதல்வராக கடந்த 20 ஆண்டுகளாக பதவியில் இருந்த மாணிக் சர்க்கார் தனக்கென சொந்த வீடு இல்லாததால் மனைவியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

திரிபுராவில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியை இழந்தார்.

திரிபுராவில் 25 ஆண்டு காலமாக நீடித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியை பாரதிய ஜனதாக் கட்சி முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவின் எளிமையான முதல்வர் என அழைக்கப்பட்ட மாணிக் சர்க்கார் இம்முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இவ்வளவு காலம் பதவியில் இருந்தாலும் அவருக்கென சொந்த வீடொன்று இல்லை. தனக்குக் கிடைத்த பணத்தையும் கட்சிக்கு ஒப்படைத்துவிட்டார்.

மனைவியின் வருமானத்தில் தான் அவரது குடும்பம் இருந்தது.

இந்நிலையில், 5 ஆவது முறையாக அரியணையில் ஏறும் வாய்ப்பை இழந்த மாணிக் சர்க்கார் முதல்வருக்கான வீட்டில் இருந்து வெளியேறினார்.

சொந்தமாக வீடு இல்லாததால் அவர் மனைவி பாஞ்சாலியுடன் கட்சி அலுவலகத்தில் தங்கியுள்ளார்.

உறவினர்கள் வீடு இருந்தும் அவர் அங்கு செல்லாமல் கட்சி அலுவலகத்திற்கு சென்று விட்டார். மேலும், அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் தங்கவும் விரும்பவில்லை.

மாணிக் சர்க்கார் தற்போது குடியேறிய கட்சி அலுவலகத்தில் இரண்டு அறைகளுடன் குறைந்தளவான வசதிகளே உள்ளன.

தனது பங்களிப்பு கட்சியோடு இருக்க வேண்டும் என்பதற்காக கட்சி அலுவலகத்திலேயே அவர் தங்கிவிட்டதாகவும் தமது கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள் தான் எனவும் திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பஜன்கர் தெரிவித்துள்ளார்.

65 வயதான சர்க்கார் தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை தங்கைக்கு தானமாகக் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.