நோய்களைத் தவிர்த்தல் பற்றி நோயாளர்களை அறிவூட்டுவதே முக்கியமாகும் – வைத்திய நிபுணர் கே.அருள்மொழி.

0
499

நோய்களைத் தவிர்த்தல் பற்றி மக்கள் மற்றும் நோயாளிகளை அறிவூட்டுவதே வைத்தியத்துறையினருக்கு முக்கியமானது. அந்தவகையில் எங்களது இறுதி இலக்கு நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதேயாகும். அத்துடன், சமுதாய சேவைகளில் ஈடுபடுவது நமது சமூகத்தை மேம்படுத்தும் என்று மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.

முன்னாள் தலைவர் வைத்திய நிபுணர் கே.சிவகாந்தன் 2018ஆம் ஆண்டுக்கான புதிய தலைவரான வைத்திய நிபுணர் கே.அருள்மொழிக்கு பாரம்பரிய பதக்கம் அணிவித்து கடமைகளைக் கையளித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய நிபுணர் வி.விவேகானந்தராசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், 2019ஆம் ஆண்டுக்கான தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வைத்திய நிபுணர் எஸ்.சரவணன், செயலாளர் வைத்திய அதிகாரி மரியானோ ரூபராஜன், சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி வைத்திய நிபுணர் அஞ்சலா அருள்பிரகாசம், மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்களான வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட வைத்திய நிபுணர் கே.அருள்மொழி உரையாற்றுகையில்,

2018ல் வெற்றிகரமான செயற்பாடுகளுக்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். மருத்துவப் பணியென்பது ஒரு கூட்டுப்பண்புடையது, அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான மற்றும் உகந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்கான எமது குறிக்கோளை நாம் அடைந்து கொள்ளலாம்.

மருத்துவக் கல்வி மூலமே எங்கள் மருத்துவ சமுதாயம் வளர்ச்சியடைய முடியும். இந்த வளர்ச்சிக்கு வழிகாட்டியான இந்தப் பெறுமதி மிக்க மருத்துவ சங்கத்திற்கு தலைமையேற்பதில் பெருமை கொள்கிறேன்.

‘ஒரு மனிதனுக்கு ஒரு மீன் கொடுத்தால் அவர் ஒரு நாள் சாப்பிடுவான். ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக் கொடுத்தால், அவன் வாழ்நாள் முழுவதிலும் சாப்பிடுவான்.” அதே போன்று நோய்களைத் தவிர்த்தல் பற்றி மக்கள் மற்றும் நோயாளிகளை அறிவூட்டுங்கள். எங்களது இறுதி இலக்கு நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதேயாகும். அத்தோடு சில சமுதாய சேவைகளில் ஈடுபடுவது நமது சமூகத்தை மேம்படுத்தும்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். எங்கு தொடங்க வேண்டும் என்பது தெளிவானது, குறைந்தபட்சமான வளங்களைக் கொண்டிருக்கும் நாம் உயர்ந்த சுகாதார பராமரிப்பு முறையை உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும்.

அரசியல் துணிச்சலுடன் செயற்பட அரசாங்கங்களை நாம் அழைக்கையில், எமது தலைமைத்துவத்தில் தைரியமும் காட்ட வேண்டும். எங்கள் நடைமுறைகளில், எங்கள் சமூகங்களில், எங்கள் அமைப்புகளில், நோயாளிகள், முகவர்கள், பிற உடல்நல வல்லுநர்கள் மற்றும் அரசாங்கங்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுகையில், நேர்மறையான மாற்றத்திற்காகச் செயற்படும் தரகர்கள் மற்றும் முகவர்கள் நாங்கள் இருப்போம்.

இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் சமூகத்துடனான கடப்பாட்டினை நாங்கள் மதிப்போம். ‘நம்முடைய செயற்பாடுகளில் முக்கியம் பெற்றவர்கள் நோயாளர்களே” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் வி.விவேகானந்தராசா மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் இவ்வருடத்துக்கான தலைவர் வைத்திய நிபுணர் கே.அருள்மொழியால் கௌரவிக்கப்பட்டார்