சமூக அபிவிருத்தியும் பாடசாலையில் தொழில் வழிகாட்டல் ஆலோசனையின் தேவையும்.

0
668
21ம் நூற்றாண்டு காலகட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு நாட்டில் நிலையான அபிவிருத்தி என்பது ஒவ்வொரு சமூகமும் மாணவர்களிடம் வேண்டி நிற்கும் தவக்கால வரமாகும். அந்தவகையில் நவீன தொழில் உலகிற்கு ஈடுகொடுக்க முடியாத இளைய சமுதாயத்தினர் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். ஆகையால் மாணவர்களை இன்றைய பூகோள தொழிற் சந்தைக்குப் பொருத்தப்பாடுடையவர்களாக வளப்படுத்துவதற்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனையின் தேவை பெரிதும் வேண்டப்படும் ஒரு சேவையாக உள்ளது.

மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்குப் பொருத்தமான இடம் கல்விக் கூடங்களே. அந்தவகையில் ஆக்கபூர்வமான மாணவர் சமூகமொன்றை உருவாக்கும் பொறுப்பு பாடசாலையைச் சார்ந்ததேயாகும். ஒரு மாணவனை அவனது நேயத்திற்கேற்ப எதிர்கால சமூக அபிவிருத்தியின் பங்காளனாக மாற்றும் வகையில் தொழில் வழிகாட்டல் சேவையானது பாடசாலைகளில் வழங்கப்பட வேண்டுமென்பதே சமகாலத்தினரின் எதிர்பார்ப்பாகும்.
மாணவர் ஒருவர் தனக்குப் பொருத்தமான தொழிற் துறையை இனங்கண்டு, அதற்கேற்ப பாடநெறிகளைத் தெரிவு செய்யவும், தொழிலைப் பெற்று முன்னேற்றமடைவதற்கும், தொழில் சார் ஆற்றல்களில் உச்ச நிலையை அடைவதற்கும் ஆசிரியர், அதிபர் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட ஆலோசகர் ஆகியோரால் உதவி வழங்குதல் தொழில் வழிகாட்டல் ஆலோசனை ஆகும்.
மாணவர்கள் தமது ஆற்றல், திறமை, இயலுமை, விருப்பு ஆகியவற்றை அறிந்து எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளக் கூடிய  பாடநெறிகளைத் தெரிவு செய்யவும், பாடசாலையின் பின் பொருத்தமான கற்கை அல்லது தொழிலை சுயமாக தெரிவு செய்வதற்கான ஆற்றலைப் பெறச் செய்வதுமே தொழில் வழிகாட்டல் சேவையின் நோக்கம் என ஆதர் ஜெ.கொன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையின் பாடசாலைக் கட்டமைப்பினை நோக்கும் போது இடைநிலைக் கல்வியில் இத்தகைய தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்படுவது அவசியமானதொன்றே. ஏனெனில் இங்கு எண்ணிறைந்த பாடத் தெரிவுகள் காணப்படுவதால் மாணவர்கள் எப் பாடநெறி தமது எதிர்கால தொழில்மைய வாழ்வுக்குப் பொருத்தமானது என்பதை இனங்காண பெரிதும் இடர்படுகின்றனர். இவ் இடர்பாடுகளை இழிநிலையாக்க இடைநிலைக் கல்வியின் ஆரம்பத்திலிருந்தே இத் தொழில் வழிகாட்டலின் தேவை பாடசாலைகளில் பெரிதும் வேண்டப்படுகின்றது.
அந்தவகையில் 1981ம் ஆண்டு இலங்கையில் கல்வி வெள்ளை அறிக்கையில் 34-50 வது உறுப்புரைகளில் “கைத்தொழில் உலகிற்கு மாணவனை  ஆயத்தப்படுத்துவதுடன் அதனுடன் தொடர்புடைய ஒரு மனப்பான்மையையும் ஏற்படுத்துதல்” எனும் தேசிய இலக்கின் அடிப்படையில் “வாழ்க்கைத் தேர்ச்சி” என்ற ஒரு பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு 1982ம் ஆண்டு “ரியாவு மித்துரோ” எனும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து “செயன்முறைத் திறன்களும் தொழினுட்பத் திறன்களும்”,  2015ம் ஆண்டு முதல் “தொடர்பாடலும் ஊடகக் கல்வியும்” போன்ற பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இவ் ஏற்பாடுகள் யாவும் ஏட்டு வடிவில் உள்ளதே தவிர தொழில் உலகிற்கு மாணவனை ஆயத்தப்படுத்துவதாகவோ, தொழில்சார் வழிகாட்டல்களை  வழங்குவதாகவோ இல்லை. இன்று பாடசாலை மாணவர்கள் தொழில் பற்றிய எந்த அறிவும் அற்றவர்களாகவே வெளியுலகில் காலடி எடுத்து வைக்கின்றனர்.
கல்வித்துறை வளர்ந்து கொண்டே செல்லும் இன்றைய நிலையில் இடைநிலைக் கல்வி,  உயர் கல்வி மாணவர்கள் எந்தக் கற்கைத் துறையைத் தெரிவு செய்வது? எந்தத்  தொழிற் துறையைத் தெரிவு செய்வது? என்பது குறித்து திட்டமிடவும் சிந்திக்கவும் முடியாமல் கற்பனையில் தமது எதிர்காலத்தை இருட்டாக்கிக் கொள்கின்றனர். அனேகமான மாணவர்கள் தவறான பாடத்தெரிவின் மூலம் பரீட்சையில் தோல்வியுறுகின்றனர். சிலர் தற்கொலை வரை செல்கின்றனர். அத்துடன் இன்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களில் கூட பலர் தொழிற் துறைக்குப் பொருத்தமற்றவர்களாக  சமூகத்தில் ஓரங்கட்டப்படுகின்ற நிலையும் காணத்தக்கதே. இதன் விளைவே இன்று இலங்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளின் பட்டாளமாகும்.
இத்தகு நிலைக்கு அடிப்படைக் காரணம் இலங்கையில் தொழில் வழிகாட்டல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டும் அவை இன்றுவரை பாடசாலை மட்டத்தில் வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே ஆகும்.
தற்கால விஞ்ஞான தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றம், சனத்தொகைப் பெருக்கம், பொதுசன தொடர்பு சாதனங்களின் விரிவாக்கம், கைத்தொழில் விருத்தி போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் பாடத் தெரிவுகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் தொழில் தொடர்பாக சுய தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமை, குழுவாக பணியாற்ற இயலாமை, பல்துறை சார் ஆற்றலின்மை, ஆங்கில மொழித் தேர்ச்சியின்மை, நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியாத நிலை போன்ற ஏராளமான அம்சங்கள் இன்றைய தொழிலுலகில் இளைய சமுதாயத்தினருக்குப் பெரும் அறைகூவலாக அமைகின்றது.
இதன் பிரதிபலிப்பு வேலைத்தளங்களில் இளைஞர்கள் எதிர்நோக்கும் தாழ்வுச் சிக்கல், விரக்தி, வெறுப்பு, மன அழுத்தம் போன்றன காரணமாக பிறழ்வான நடத்தைகளிலும், சமூக முரண்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நிலைக்கு மாணவர்களது வீட்டுச் சூழல், பாடசாலைச் சூழல் மற்றும் சமூகத்தின் செல்வாக்கு என்பன காரணமாக அமைகின்றன.
அந்தவகையில் மாணவர்களது தொழில் தெரிவில் பெற்றோர்கள் பிள்ளைகளின் அறிவு மட்டம், ஆற்றல், விருப்பம் என்பவற்றைக் கருத்தில் கொள்ளாது சமூக அந்தஸ்திற்காகவும் கௌரவத்திற்காகவும் அவர்களை நெருக்கடிப்படுத்துகின்றனர். அதேவேளை பாடசாலைகளிலும் அதிபர், ஆசிரியரது விருப்பு அல்லது கட்டாயத்தின் பெயரில் மாணவர்கள் கற்கை நெறியைத் தெரிவு செய்யும் நிலையும் காணப்பாலதே. அத்தோடு  தொழில் சார் கற்கை மற்றும் பாடத் தெரிவுகளை மேற்கொள்வதில் சகபாடிகளின் செல்வாக்கு மிகையாகவே உள்ளது.
ஆரம்ப வகுப்புக்களில் ஒன்றாகப் பயின்ற மாணவர் குழாம் ஒன்றாக பாடத் தெரிவை மேற்கொள்ளும் போது இயலாமையுடைய மாணவன் புறந்தள்ளப்படுகின்றான். மேலும் மாணவர்கள் புதிய தொழில் சார் பாடங்கள் தொடர்பாக பாதகமான மனப்பாங்குகளைக் கொண்டவர்களாகவும், சமகால தொழில் வாய்ப்பு தொடர்பாக பல்துறைசார் அறிவைப் பெற்றிராமை காரணமாகவும் தவறான பாடத் தெரிவுகளையும் தொழிற்; துறைகளையும் தெரிவு செய்து தமது வாழ்வைப் பாலைவனமாக்கிக் கொள்கின்றனர்.
இத்தகைய குறைபாடுகளனைத்தையும் களைந்து சமூக அபிவிருத்திக்கான வளமான பிரஜைகளை உருவாக்க வேண்டுமாயின் பாடசாலை மட்டத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை சேவையானது வினைத்திறனுள்ள வகையில் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.
சமூக அபிவிருத்தியின் பங்குதாரர்களாக மாணவர்களை உருவாக்கும் பொருட்டு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியர், அதிபர் மற்றும் வழிகாட்டல் ஆலோசகர் ஆகியோரின் பொறுப்பு என்பதை இவர்கள் உணர வேண்டும்.  அந்தவகையில் கலைத்திட்டத்தின் மூலம் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு நடைமுறைச் செயற்பாடு கொண்ட தொழில் வழிகாட்டல் சேவையை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தலாம். இதற்காக பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில் வழிகாட்டல் தொடர்பான பயிற்சி வழங்கப்படல் வேண்டும். அத்துடன் அதனை அவர்கள் நடைமுறையில் செயற்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்யலாம்.
மேலும் பல்துறைசார் பாடநெறிகள் காணப்படுகின்றமையால் தொழில் உலகுக்குப் பொருத்தமானதும், கேள்வி நிலையிலுள்ள தொழிலைப் பெறவும் மாணவருக்கு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்க பயிற்றப்பட்ட ஆலோசகர்களை ஒவ்வொரு பாடசாலைக்கும் நியமிக்கலாம். அதிபர் பாடசாலை மட்டத்தில் தொழில்சார் வழிகாட்டலுக்கென நேரத்தை ஒதுக்கிடல் மற்றும் மாணவர்கள் தமது ஆளுமை, திறனுக்கிணங்க தொழிற் துறையைத் தெரிவு செய்வதற்கான உதவித் திட்டங்களை செயற்படுத்தலாம். அத்துடன் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக  தொழில் வழிகாட்டல் ஆலோசனையானது மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களுடன் பெற்றோருக்கும் சமூகத்தினருக்கும் பாடசாலையினூடாக வழங்கப்பட அதிபரால் சிபாரிசு செய்யப்படலாம்.
எனவே மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்துகின்ற தொழிற்சாலைகளாக இன்றி அவர்களை எதிர்கால தொழில் உலகில் பொருத்தப்பாட்டுடன் வாழக் கற்றுக் கொடுக்கும் கலாசாலைகளாக பாடசாலைகள் மிளிர வேண்டும். பாடசாலைகளில் இத்தகைய நடவடிக்கைகளுக்கூடாக  தொழில் வழிகாட்டல் ஆலோசனை  சேவை வழங்கப்படுவதன் மூலம்  அபிவிருத்தியை நோக்கிய இன்றைய மாணவ சமுதாயத்தை நாளைய நவீன தொழிற்சந்தையில் அர்த்புஷ்டியுள்ள பங்குதாரர்களாக்க முடியும்.
சஹானா சேதுராஜா,
கல்வியியல் சிறப்புக் கற்கை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.