மாய மானுக்குப் பின்னாலே சென்று தமிழர்களின் எதிர்காலத்தை இருள்மயமாக ஆக்கிவிடக் கூடாது…

0
350

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம்)

(மட்டக்களப்பு மேலதிக நிருபர்)

தற்போதுள்ள தீர்மானத்தின் அடிப்படையிலே சுமார் 36 விடயங்களை நிறைவேற்றுதற்கு இலங்கை அரசு இணைஅனுசரணை வழங்கியிருக்கின்றது. இதனை மிகத் துரிதப்படுத்தக் கூடிய கைங்கரியங்களை எல்லோரும் இணைந்து செயற்படுத்துவதை விடுத்து வேறு ஒரு இடத்திற்கு ஓடுவதாகச் சொல்லி வெறுமனே மாய மானுக்குப் பின்னாலே சென்று தமிழர்களின் எதிர்காலத்தை இருள்மயமாக ஆக்குகின்ற செயற்பாடுகளில் எமது அன்பர்கள் ஈடுபடக் கூடாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண மன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

ஐ.நா விடயம் தொடர்பில் இன்றைய தினம் புதன்கிழமை (07) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு சென்று அதனை ஐ.நாவினுடைய மனித உரிமை ஆணைக்குழுவிலே தீர்மானமாக நிறைவேற்றச் செய்கின்ற பணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக முனைப்போடு செயற்பட்டது. புலம்பெயர் எமது உறவுகளின் ஆதரவும் எமக்குக் கிடைத்தது. இந்த அடிப்படையில் முன்னைய அரசாங்கம் நியமித்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இங்கு நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற வகையில் 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த விடயங்களைக் கொண்டதாக இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

2014ம் ஆண்டு சர்வதேச விசாரணையை உள்ளடக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அது எழுத்தளவிலேயே இருக்கின்ற விடயம், உண்மையான சர்வதேச விசாரணைக்கான எவ்வித கடப்பாட்டையும் இது இலங்கை அரசின் மீது வலியுறுத்தப் போவதில்லை என்று எமது தமிழ் இயக்கங்களே அந்தத் தீர்மானங்களை எரித்திட்ட விடயங்களும் நாம் அறிந்தவையே. அவ்வாறு இருந்த போதிலும் அந்த ஆண்டின் இறுதிக் காலத்தில் இவர்கள் முன்னுக்குப் பின் முரணாகச் செயற்பட்டதையும் அறிவோம்.

2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசு அனுசரணை வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தன்னுடைய பொறுப்புக் கூறல் விடயத்தில் இணைந்து செயற்படுவதாக ஏக மனதாகக் கூறி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இரண்டு வருட அவகாசம் வழங்கப்பட்டது. இந்த இரண்டு வருடத்தின் முதலாவது அமர்வு இந்த 2018 மார்ச்சில் முடிவடையவுள்ளது, இன்னும் ஒரு வருடம் இருக்கின்றது.

இந்தக் குறிப்பிட்ட காலத்தில் இலங்கை அரசு சில விடயங்களைத் தொடங்கி இருக்கின்றது. சில விடயங்களை மிக மந்த கதியிலே செய்து கொண்டிருக்கின்றது. இது சர்வதேச நியமங்களைச் சரியான முறையில் செயற்படுத்துகின்ற நடவடிக்கை இல்லை என்கின்ற கண்டனத்தையும் இந்த அரசு பெற்றிருக்கின்றது. அண்மையில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வெளியிட்ட அறிக்கையின் படி இதனை சர்வதேச நியாயாதிக்கத்துக்குள் கொண்டு வருகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தற்போது அரசு இது தொடர்பாக கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டிய கட்டத்திற்கு வந்திருக்கின்றது. எஞ்சியிருக்கின்ற ஒரு வருட காலத்தில் இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கின்றது.

இந்த அடிப்படையிலேதான் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலக சட்டத்தை உருவாக்கி அதற்கான அலுவலகம் மற்றும் ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினம் இது வெறும் கண்துடைப்பாக அமையக் கூடாது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக உறுத்தமாக வலியுறுத்துகின்றது.

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலே சுமார் 36 விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமைக்கான ஆணைக்குழுவை அமைப்பது, காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவது, பாதிப்புக்கான ஈடுசெய்யும் அலுவலகத்தை உண்டாக்குவது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி சர்வதேச நியமங்களுடன் ஒத்துப் போகும்படியான புதிய கட்டமைப்பு ஒன்றை இயற்றுவது. காணாமலாக்கப்படுவதை குற்றமாக்குதல்; பாலியல் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவது, துன்புறுத்தல்கள் சம்பந்தமான அறிக்கைகளை விசாரிப்பது, பாதிப்புற்றோர் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டமொன்றை உருவாக்குவது, இராணுவத் தலையீட்டை நீக்குவது, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது, வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவது, இராணுவமயமாக்களை இல்லாதொழிப்பது மற்றும் புதிய அரசியலமைப்பு மூலமாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவது போன்ற பல விடயங்கள் இலங்கை அரசு இணைஅனுசரணை வழங்கியிருக்கின்ற இந்தத் தீர்மானத்திலே உள்ளடங்குகின்றது.

எனவே இந்தத் தருணத்திலே இவை அத்தனையையும் கைவிட்டுவிட்டு இலங்கை அரசினை ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று எமது அன்பர்கள் எடுக்கின்ற நடவடிக்கையானது இந்த முழு முயற்சியையும் வீணடித்து விட்டு தமிழ் மக்களின் நிலைமையை கையறுநிலைக்கு ஆளாக்குகின்ற ஒரு வழிகாட்டலாக இருக்கும் என்கின்ற விடயத்தை தமிழ் மக்கள் மனங்கொண்டு இது தொடர்பாக அவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்களின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இந்த விடயம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றால் அதனை முன்மொழிந்து எடுத்துச் செல்லக் கூடிய ஒரு நாடு முன்வர வேணடும். அவ்வாறு எந்த நாடு இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படும் என்ற விடயத்தை இவர்கள் வெளிக்காட்ட வேண்டும்.

பல்வேறு விதமான பிரயத்தனங்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமது புலம்பெயர் உறவுகளும் கைகோர்த்து நின்று செயற்பட்டதன் காரணமாக அமெரிக்காவை முன்நிறுத்தி ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணைகளை முன்கொண்டு செல்லுகின்ற முயற்சியிலே நாங்கள் ஈடுபட்டு அதனை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றோம். இதனை இந்த இடத்திலேயே கைவிட்டுவிட்டு சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுகின்ற விடயம் என்பது எமது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற விடயமாகவே இருக்கும். இதற்கு எந்த நாடும் இதற்கு முன்வரப் போவதில்லை. இரண்டாவதாக இதற்கு இருக்கின்ற கடினத் தன்மை என்னவென்றால், அவ்வாறு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் கூட அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எத்தனை நாடுகள் இதற்கு ஆதரவாக இருக்கப் போகின்றன. இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கின்ற சீனா, ரஷ்யா போன்ற வீட்டோ அதிகதாரம் கொண்ட நாடுகள் இந்தச் செயற்பாட்டை அனுவளவும் நகர விடாது தடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே தற்போதுள்ள செயற்பாடுகளை மிகத் துரிதப்படுத்தக் கூடிய கைங்கரியங்களை எல்லோரும் இணைந்து செய்திட வேண்டும். அதற்கான வழிவகைகளைக் கண்டிட வேண்டும். அதனை விடுத்து வேறு ஒரு இடத்திற்கு ஓடுவதாகச் சொல்லி வெறுமனே மாய மானுக்குப் பின்னாலே சென்று நாங்கள் தமிழர்களின் எதிர்காலத்தை இருள்மயமாக ஆக்குகின்ற செயற்பாடுகளில் எமது அன்பர்கள் ஈடுபடக் கூடாது என்று மிகவும் அன்போடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கின்றது.

உங்களுடைய சக்திகளையெல்லாம் தற்போது இணைஅனுசரணை வழங்கியிருக்கின்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் எமது தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நாங்கள் வரிசைப் படுத்தியிருக்கின்ற, ஆய்வாளர்கள் கூறியிருக்கின்ற இந்தப் பரிகாரங்களையெல்லாம் பெற்றுக் கொடுக்கப் பயன்படுத்துகின்ற அதே வேளையில் மிக முக்கியமான எமது இலக்கான அரசியற் தீர்வையும் அடைகின்ற முயற்சியில் எல்லோரும் ஒரே குரலிலே குரல் கொடுத்து, ஒரே தலைமையின் கீழ் இயங்கி எமது ஒற்றுமையை நாங்கள் பலப்படுத்திக் காட்டுவதன் மூலம் எமது மக்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தார்.