கிழக்கில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைந்து ஒரு கொடியின் கீழ் போட்டியிட வேண்டும்

0
360

கடந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளை படிப்பினையாகக் கொண்டு எதிர் காலத்தில் எமது மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கொடியின் கீழ் ஒரு பொதுவான சின்னத்தின் கீழ் போட்டியிட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுத்திப்படுத்தி எமது மக்களையும் பிரதேசத்தையும் பாதுகாக்க வேண்டும்

இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு – கோரகல்லிமடு மாதர் சங்கம், கோரகல்லிமடு கொலனி மாதர் சங்கம் ஆகியவற்றுக்கு கதிரைகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (05) பிற்பகல் நடைபெற்றது இந்நிகழ்வில்உரையாற்றுகையிலேயே இவ்வறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – புதிய முறையிலான உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை சந்தித்த இந்த நாடு பல உள்ளுராட்சி சபைகளில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கிலே இரண்டு சபைகளைத் தவிர எந்தவொரு சபையிலும் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட எந்தவொரு சபையையும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 127ஆயிரம் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது ஆனால் இம்முறை வெறுமனே 80 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது என்றால் இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 42 ஆயிரம் வாக்குகளைக் பெற்றுள்ளார்கள். தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு 18 ஆயிரம் வாக்குகளையும் ஐக்கிய சுதந்திர தமிழ் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை; பெற்றுள்ளன. இந்த நிலை தொடருமானால் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

2011ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி கிழக்கு மாகாணத்தில் 39.7 சதவீதம் உள்ளார்கள் முஸ்லிம் மக்கள் 37.9 சதவீதமும் மகுதி சிங்கள மக்கயும் உள்ளார்கள். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 11 ஆசனங்களையே தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற முடிந்தது.

2015ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி பங்காளிகளாக மாறி தமிழ் முதலமைச்சரை கொண்டுவர முற்பட்ட வேளையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எங்களை விட அதிகமாக இருந்த காரணத்தினால் நாங்கள் ஒரு தமிழ் முதலமைச்சரை பெற்றுக் கொள்வது சிரமமாக இருந்தது.

எதிர்காலத்தில் தமிழ் மக்கள் ஆளுக்கொரு கட்சியாகப் பிரிந்து வாக்குகளைப் பிரித்தெடுப்போமானால் 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமக்கு கிடைத்த 11 ஆசனங்கள் கூட கிடைக்காத நிலை ஏற்படும்.

கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது உயிர் உடமைகளை காணிகளை இழந்தது மாத்திரமின்றி எமது பிரதேசங்களிலுள்ள அரச காணிகளுக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டு கபழீகரம் செய்யப்பட்டுள்ளன என்றார்