சமூகத்திலே முன்னேற முடியாது என்ற காரணத்திற்காக அரசியல்வாதிகள் தேடிக் கொள்ளும் ஆயுதம் தான் இனவாதம்

0
260

சமூகத்திலே முன்னேற முடியாது என்ற காரணத்திற்காக அரசியல்வாதிகள் தேடிக் கொள்ளும் ஆயுதம் தான் இனவாதம் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பிரதேச சுதந்திர வலது குறைந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

இனவாதம் ஒரு நாளும் சோறு போடாது, இனவாதம் பேசி அரசியல் செய்பவர்களாக இருந்தாலும் சரி, இனவாதம் பேசி வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் சரிதான் அல்லது இனச்சாயத்தை பூசி வேறு ஏதும் செய்பவர்களாக இருந்தாலும் சரிதான் எதிர்காலத்தில் இந்த நாட்டில் அரசியலில் நிலைபேறாக இருக்க முடியாது.

கடந்த கால அரசியல் முடிவுகளில் நாங்கள் தெளிவாக பார்த்து வருகின்றோம். அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெளிவாக பார்த்து வருகின்றோம். சமூகத்திலே முன்னேற முடியாது என்ற காரணத்திற்காக தேடிக் கொள்ளும் ஆயுதம் தான் இனவாதம்.

இவர்களது அடிப்படையிலே ஏதோவொரு பிழை இருக்கின்றது. பிழை இருக்குமாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டம் இப்படித்தான் இருக்கும். இதைவிட மோசமாகத்தான் போகவுள்ளது. மாற்றம் எல்லா மாவட்டங்களிலும் வந்துள்ளது.

கடந்த கால தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றம் வந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் பேசுகின்ற, தமிழ் சோனி, சோனி தமிழ், சிங்கள சோனி என்று பேசுகின்ற சமூகத்திற்கு ஒரு புதிய செய்தியை எல்லா மாவட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டாயிரம் வலது குறைந்தோரில் குறைந்தது நான்காயிரம் பேருடைய வாழ்க்கையாவது முன்னேற்றக் கிடைக்குமாக இருந்தால் அது எனக்கு கிடைக்கும் மனத்திருப்தியான அரசியலாக நான் பார்க்கின்றேன் என்றார்.

சுதந்திர சமூக வலது குறைந்தோர் மன்றத் தலைவர் எஸ்.வரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஐ.ரி.அஸ்மி, எஸ்.கண்ணன், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.டில்லி மலர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வலது குறைந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மா அரைக்கும் இயந்திரம், சிற்றுண்டி கவர் ஒட்டும் இயந்திரம் உட்பட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது