வன்முறை சக்கரத்தில் மீண்டும் இலங்கை?

0
459
நளினி ரட்ணராஜா
மனித உரிமை செயற்பாட்டாளர்
 

கிட்டதட்ட முப்பது வருடத்துக்கும் மேலான ஆயுத போரட்டத்தின் விளைவாகவும் 2009 கடைசி யுத்தத்தின் விளைவாகவும் பெருமளவிலான மக்கள் இன்னும் தங்களுக்கு நடந்த அநியாத்துக்கு பரிகாரமும் நீதியும் கிடைக்காமல் மன உளைச்சலிலும் வேதனையிலும் மனசிதைவிற்கு ஆழாகி அல்லல்பட்டு கொண்டு இருகின்றனர்.

இந்த வேளையில் முஸ்லிம் மக்களின் கடைகளை தாக்குவது – எரிப்பது, பள்ளி வாசல்களை எரிப்பது – முஸ்லிம்கள் தங்கள் வியாபாரங்களை செய்யவிடாமல் தடுப்பது – ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புதல் என்பவை சமூகங்களுக்கிடையே சந்தேகத்தையும் பிளவையும் மென்மேலும் ஏற்படுத்துகிறது.

சமூகங்கள் எப்போதும் ஒருத்தரை ஒருத்தர் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலைமை நாளுக்கு நாள் கூடிகொண்டே வருகிறது. இந்நிலை, நாட்டில் சமாதானமும் நல்லிணக்கமும் உண்டாவதை தடுக்கும் காரணியாக அமைகின்றது. இதனால் மென்மேலும் பாதிக்கபடுவது போரினால் – ஆயுத பிணக்கினால் பாதிக்கபட்ட மக்களாகும்.

இலங்கை வரலாற்றை புரட்டி பார்த்தால் காலாகாலமாக இனங்களுக்கிடையான வன்முறை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடு. 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, 1971 வில் சேகுவாரா கலவரத்தில் சிங்கள மக்கள் பெருவாரியாக பாதிக்கபட்டனர். 1988-89 காலப்பகுதிகளில் மீண்டும் ஜே வி பி கலவரத்தில் சிங்கள மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன.

இதே போன்று 1983 தமிழர்களுக்கு எதிரான மிக மோசமான கலவரம் கட்டவிழ்த்தது விடப்பட்டது. இதேநேரம் 1985 – 1986 காலப்பகுதிகளிலும் அதன் பின்னரும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டகளப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் தமிழ் கலவரம் நடந்தேறியது. இதனால் முஸ்லிம் தமிழ் மக்கள் பெருவாரியாக பாதிப்புக்கு உள்ளானர்.

முக்கியமாக உடமை உயிர் இழப்புகள் நடந்தன. அந்த பாதிப்பிலுருந்து இன்றுவரை இரு சமூகமும் மீளவும் இல்லை, நீதியை இழப்பீடை பெற்று கொள்ளவும் இல்லை. அது மட்டுமல்ல அன்று தொடக்கம் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே உள்ள பிளவு, சந்தேகம் – நம்பிக்கை இன்மை என்பன நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது. அகவே தொடந்து சமூகங்களுக்கு இடையே – இனங்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தபட்டுவருவதை காணக்கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பை எடுத்துகொண்டால் 1985 க்கு முன்னர் முஸ்லிம் மாணவர்கள் மாணவிகள் தமிழர் வீட்டில் தங்கி இருந்து பாடசாலைக்கு சென்றனர் முக்கியமாக முஸ்லிம் பெண்கள் தமிழர் வீட்டில் எந்த விதமான சந்தேகமும் இல்லமால் ஒரே குடும்பமாக வாழ்ந்ததை நான் கண்ணால் பார்த்துள்ளேன். அது மட்டுமல்ல தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களின் வீடு வாசல்கல் இருந்தன. பள்ளி வாசல்கள் இருந்தன. இன்னும் கல்லடி உப்போடைடையில் வாவிக்கு அருகே அவிலியாரின் சமாதி உள்ளது ஆண்டு தோறும் திருவிழா நடக்கும் இரு இன மக்களும் ஒன்று கூடி நெய் சோறு உண்டு வாழ்ந்த காலம் இருந்தது.

ஆனால் இப்போது அந்த நிகழ்வு பலத்த பொலிஸ் பாதுக்கப்புடன் நடப்பதை காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் அந்த சமாதி தமிழர் பிரதேசத்தில் இன்னும் உள்ளது.

இந்த தலைமுறையினர் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலை முஸ்லிம் அதிபர் ஆசிரியர்கள் என் முஸ்லிம் வலயக்கல்விகூட கிழக்கு மாகணத்தில் உருவாகி தமிழ் முஸ்லிம் மாணவர்களை அடியோடு பிரித்து வைத்துள்ளது என்பது மிகவும் வேதனை தரும் விடயமாகும்.

அண்மையில் அம்பாறையில் கொத்து ரொட்டியில் இனப்பெருக்கத்தை இல்லாதொழிக்கும் மருந்து கலக்கபட்டுள்ளதாக சிங்கள பெரும்பான்மியினரால் கதை பரப்பபட்டு தாக்குதல் நடந்தது. ஒரு சில மாதங்களுக்கு முன் ஓட்டமாவடி வாழை சேனை பகுதிகளில் இதேபோல் நடப்பதாகவும் வதந்திகள் சமூக வலை தளங்களில் பரப்பபட்டது.

இப்போது வாழைபழத்தில் முஸ்லிம்களால் மருந்து கலக்கபடுவதாகவும் அதை தமிழர்கள் வாங்கி உண்ண வேண்டாம் என்றும் இதனால் வயிற்று குத்து காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதாகவும் வதந்திகள் பரப்பபடுகின்றன. இதனால் முஸ்லிம் மக்களை தமிழ் சிங்கள இனத்தவர் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலைமையும் இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு அஸ்திவாரமாகவும் அமைகின்றது.

இதேபோல் முஸ்லிம்களுக்கு சொந்தமான பேஷன் பக், நோ லிமிட் போன்ற ஆடை அணிகலன்கள் விற்கும் கடைகளில் உடை மற்றும் இடத்தில் ரகசிய கமெராக்கள் பொருத்தபட்டுள்ளது எனவும் தமிழ் சிங்கள மக்கள் அங்கு செல்ல கூடாது எனவும் பரப்புரை செய்யப்பட்டதை மறந்து விடலாகாது.

இலங்கையை எடுத்துகொண்டால் முஸ்லிம்கள் வணிக்கர்களாக காணப்படுகின்றனர். அவர்களுடைய பொருளாதாரம் வணிகத்தையே நம்பி உள்ளது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இது ஒரு புறமிருக்க இலங்கை அரசு தமிழ் மக்களின் மேல் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைக்கு ஐ நாவில் பொறுப்பு கூறும் தருணமிது. இந்த நேரத்தில் அம்பாறையில் நடந்த வன்முறையானது இலங்கைக்கு சர்வதேச அளவில் பாரிய அழுத்தத்தையும் அவப்பேரையும் கொண்டு வரும்.

அது மட்டுமல்ல கடந்த காலங்களில் பள்ளி வாசல்கள் உடைக்கபட்டது, ஆங்காங்கே முஸ்லிம்கள் தாக்கபட்டது, பொது பலசெனாவால் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது, காலால் உணவை தடை செய்ய பரப்புரை செய்தது, அபாயா உடுத்தும் பெண்களுக்கு எதிராக பாடசாலையில் கொண்டுவரப்பட்ட தடைகள் போன்றவை ஐ நாவில் அறிக்கை இடப்படுள்ளது என்பதை ஞாபகப்படுத்தல் அவசியம்.

இலங்கை அரசு, நாட்டில் வன்முறை வெடிப்பதை உடனே நிறுத்த வேண்டும். அது மாத்திரமல்ல முஸ்லிம்களுக்கு ஆதரவு தரும் இஸ்லாமிய நாடுகளை மறந்து விடக்கூடாது. குறிப்பாக மத்தியகிழக்கு – வடக்கு ஆபிரிக்கா – தென்கிழக்காசியா போன்ற நாடுகள் இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு பொருளாதார நிதி உதவிகளை வழங்குபவர்களாக உள்ளனர். குறிப்பாக மத்திய கிழக்குக்கு வேலைக்கு செல்பவர்கள் மூலம் கிட்டதட்ட 44 வீதமான அந்நிய செலாவணி இலங்கைக்கு கிடைகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆகவே எதிர்கட்சிகளும், அரசியல் தலைவர்களும் அரசும் இவ்வாறன வன்முறைகளை தங்களுக்கு அரசியல் லாபம் தரும் ரீதியில் குளிர்காய முற்படாமல் உடனடியாக தலை இட்டு இவ்வாறன வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். முக்கியாமாக நீதித்துறை வினைத்திறனுடன் செயல்படவேண்டும்.

உருவாகும் வதந்திகள் உண்மையா இல்லையா என்பதை கண்டறிய இரசாயன பகுப்பைவுகள் செய்யப்பட வேண்டும். சரியான விசாரணைகள் செய்யப்படவேண்டும். இதற்கு முஸ்லிம் சமூகமும் ஒத்துழைத்து தங்கள் மீது படிந்துள்ள கறையை அகற்ற வேண்டும். எங்கேயாவது குற்றம் நீருப்பிக்கபட்டால் குற்றவாளி தப்பிக்க கூடாது. அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அதே போல் ஆதாரம் இல்லாத பரப்புரைகளை தமிழ், சிங்கள சமூகம் நம்பக்கூடாது – பரப்பவும் கூடாது. இதில் வேடிக்கை என்னவென்றால் படித்தவர்கள் கூட இவ்வாறான பரப்புரைகளை நம்புகின்றனர். இராசயன மருந்து பொருட்கள் எந்த உணவிலும் கலக்கபட்டால் இரசாயன பகுப்பாய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வகையான இரசாயன பாதார்த்தம் கலக்கப்பட்டிருக்குமேயானால், அது எங்கிருந்து கிடைக்கிறது – யார் அதை விநியோகிப்பது – இதற்கு பின்னால் இருக்கும் தீய சக்தி எது?  போன்றவை தொடர்பில் விசாரணை செய்து உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்துவது அரசின் முதலாவது கடமையாகும்.

இதற்கு சகல இனத்தவரும் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக சமூக வலைத்தளமோ – ஊடகங்களோ இவ்வாறான இன முரண்பாடை, அதன்மூலம் வன்முறையை தோற்றுவிக்கும் செய்திகளை தவிர்க்க வேண்டும்.  கூடவே சிவில் சமூகமும் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முக்கியாமாக இலங்கையில் மீண்டும் ஒரு இன ரீதியான வன்முறை இ கடத்தல் காணாமல் ஆக்கபடுதல் இ கொலை போன்ற மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் அநியாயங்கள் நடக்காமல் இருப்பதை யார் ஆட்சிக்கு வந்தாலும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.