ஆனந்த சங்கரி மறுத்துள்ளார். ஊடக அறிக்கை

0
304


தமிழர் விடுதலை கூட்டணி தலைவரை நான் தாக்க முற்பட்டேன்; என்றும், முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் உண்மைக்கு மாறான பல விடயங்களை அவர் கூறியதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களிலும் வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
மிக ஆபத்தான விபத்தில் சிக்கி முள்ளந்தண்டு உட்பட பல சத்திர சிகிச்சைகளை செய்து விரைவாக தேறிக்கொண்டிருந்த எமது கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் பொ.சிவகுலதிலகசிங்கம், திரு சிவசுப்பிரமணியம் அவர்களின் முட்டாள்தனமான செயற்பாட்டால் திடீரென மரணமானார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், மரண சடங்கு ஒழுங்குகள் பற்றியும்; மட்டுமே அன்றைய செயற்குழு கூட்டம் கட்சியின் உப தலைவர் திரு.சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் அவசர அவசரமாக கூட்டப்பட்டது. அந்த நேரத்தில் இவரின் நியாயப்படுத்த முடியாத வரவு அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. திரு பொ. சிவசுப்பிரமணியம் அவர்களின் தொலைபேசி உரையாடலின் தாக்கமே கடும் சிகிச்சைக்கு ஆளாகி விரைவாக தேறிக்கொண்டிருந்த கட்சியின் சிரேஸ்ட உப தலைவரின் திடீர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. இதனால் மிகவும் சோகத்தில் இருந்த எமது செயற்குழு உறுப்பினர்கள், இவருடைய போக்கில் மிகவும் வெறுப்படைந்திருந்தனர்.
கடந்த ஆறுமாத காலமாக இவருடன் கட்சி எதுவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல, இவர் மீது சில சந்தேகங்கள் இருந்தமையால் இவரை நாம் எந்த நிகழ்விற்கும் அழைக்கவில்லை என்பதே உண்மை. இவர் கூட்டத்திற்கு சமூகம் கொடுத்தமை திட்டமிட்ட ஓர் செயல் என நான் கருதுகின்றேன். இவரை நானே வெளியேறுமாறு பணித்தேன். அவர் மறுத்தமையாலே, நிர்வாக சபை உறுப்பினர்களே அவரை வெளியில் அனுப்பி வைத்தனர். இவர் மீது என்றோ எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை, நிர்வாக குழுவின் தீர்மானத்திற்கமைய விரைவில் பொது சபையில் எடுக்கப்படும். இந்த விடயத்தில் என் தலையீடு இல்லாதிருந்திருந்தால் இவரின் அன்றைய நடத்தை பெரும் விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கும். குறித்த சம்பவங்கள் அனைத்தும் எமக்கு மகிழ்ச்சி தரும் விடயமல்ல. குறித்த நபரினால் யாழ் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கமைய செய்திகளை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருந்தால், குறித்த விடயம் தொடர்பில் போதுமான விளக்கம் என்னால் அளிக்கப்பட்டிருக்க முடியும் எனவும் குறிப்பிட்டு கூறிவைக்க விரும்புகின்றேன். எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

வீ.ஆனந்தசங்கரி

செயலாளர்நாயகம் தமிழர் விடுதலை கூட்டணி