பறை யை சாதிய கருவியாக கருதிவிட முடியாது

0
592

– வயிரமுத்து துசாந்தன். –

இந்தியாவின் புத்தர் கலைக்குழுவின் தலைவரும், பறை இசைகலைஞருமான மணிமாறன் உடனான நேர்காணல்.
கேள்வி : பறை இசைக்குள் உள் நுழைவதற்கான காரணம், பரம்பரையா? ஈடுபாடா?
பதில் : மரபு ரீதியான காரணம். எனது தாத்தா அடிப்படையில் கூத்து கலைஞர். கூத்தில் பாடுவார், இசைப்பார். பப்பின் வேடம் இட்டு ஆடுவார். எனது ஆண்மாத்மான ஆசான் அழகர்சாமி வாத்தியார். தமிழ் நாட்டில் சிவகங்கை எனும் இடத்தில் சாலிகங்கை கிராமத்தினைச் சேர்ந்தவர். அவரிடம்தான் பறையினது நுட்பங்களை பழக ஆரம்பித்தேன். பொதுவாக இறப்பு வீடுகளில் நண்பர்கள் இசைப்பார்கள். அவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் தட்டிப்பார்ப்போம். அப்படிதான் பழகினேன்.
கேள்வி : இந்தியாவில் பறை இசை கற்பதற்கான கல்லூரிகள் இருக்கின்றதா?
பதில் : பறை இசையும் அங்கமாக இருக்கின்ற வகையில்தான் கல்லூரிகள் இருக்கின்றன. பறை இசைக்கென கல்லூரிகள் இல்லை. பறை இசைக்கு பிரதான முக்கியத்துவமில்லை. நாட்டுப்புறவியல் என்ற அளவில்தான் இருக்கின்றது. அதனுள்தான் மரபுசார் மண்ணின் கலைகள், அதில் ஒன்றாக பறையாட்டம் இருக்கின்றது. பறைக்கான தனிக்கல்லூரிகள் வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். எல்லா வகையான தேவைகளும், செய்திகளும் பறைக்குள் இருக்கின்றன. இதனால் கல்லூரிகளில் முதன்மை பாடமாக, படிப்பியலாக கொண்டு செல்ல வேண்டும். என்பதுதான் எமது வேண்டுகோளாக இருக்கின்றது.
கேள்வி : பறை இசையை விரும்பி கற்பதற்கான கலைஞர்கள் இருக்கின்றனரா?
பதில் : எமது கலைக்குழு புத்தர் கலைக்குழு. நாங்கள் இரண்டுவிதமான பயிற்களை நடாத்துகின்றோம். மூன்று நாட்கள் கொண்ட பறை இசை நடன முகாம்கள், ஒரு வருட படிப்பு. ஒரு வருட படிப்பு என்பது ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10மணி தொடக்கம் 12மணிவரையும் நடைபெறுவதுடன், இதன் கல்வியாண்டு யூன் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடையும். பறை இசை நடனப்பள்ளி நான்கு வருடமாக நடாத்திக்கொண்டிருக்கின்றோம். பறை இசை முகாம் 15வருடங்களுக்கு மேலாக நடாத்திக் கொண்டு வருகின்றோம். இதில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பறை இசைக்கான, கலைக்கான வரவேற்பு என்பது முன்பை காட்டிலும், பெருகி இருக்கின்றது. மக்கள் பறை இசை கருவி என்றால், மரண வீடுகளில் இசைக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் இசைக்க கூடிய கருவி என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். தற்போது ஆங்காங்கே மாற்றமடைந்து வருகின்றன.
பறை இசையினை திருமணத்திற்கு, கோயில் திருவிழாவிற்கு, பேர்கால விழாக்களுக்கு, பெண் பூப்பெய்தல் சடங்கிற்கு, மரண வீட்டிற்கு என பல காரணங்களுக்காக இசைக்கின்றோம்.
அந்தபட்டியலில் ஒன்றாகதான் இறப்பிற்கு இசைப்பது. ஆகவே இறப்பிற்கான இசையல்ல வாழ்விற்கான இசை. இந்த புரிதல், பரவலாக்கப்பட்டு கொண்டு வருகின்றன. குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்த மக்கள்தான், அருந்ததியினர் மக்கள், குதிரை வாண்ணார் சங்கத்தினது மக்கள், இந்த மக்கள்தான் இதனை இசைக்கின்றனர். அவர்கள் நன்றிற்கு உரியவர்கள், பல்வேறு நவீனம் எனும் பெயரில், உலகமயமாக்கல் என்ற பெயரில் பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், இத்தனை ஆண்டு காலம் பல்வேறு, சிரமங்களுக்கு இடையில், இடைவிடாது, கலையினை தாங்கி, வளர்த்து மேம்படுத்திய அம்மக்கள் நன்றிக்குரியவர்கள். இன்றைக்கு அதனை பல சமூகத்து மக்களும், கையிலெடுக்க முன்வந்திருக்கின்றமை மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் கூட மக்களது இசைக்கருவி, ஆதிமனிதன், ஆதி தமிழன் எமக்களித்த ஒரு இசைக்கருவி, இதனை எல்லோரும் கையிலெடுக்க வேண்டும், என்பது, எங்களது வேண்டுகோளாக இருக்கின்றது.
ஒரு மனிதன் பிறந்து இறப்பதற்குள், அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இந்த இசையை தெரியாமல் கடந்துபோக முடியாது, அறியாமல் கடந்து போக முடியாது. தமிழர் வாழ்வியலில், பின்னிப்பிணைந்த விடயமாக இருக்கின்றன. இதுவெறுமனே பறை இசை கருவியை இசைப்பது மட்டுமல்ல. பாகுபாட்டிற்கு எதிரான கருவி, விடுதலையை இசைக்கின்ற கருவி, பொழுதுபோக்கிற்கான கருவி, அவ்வாறானதொன்றை, இசைக்கருவி என்ற வட்டத்திற்குள் மட்டும் அடைத்துவிடமுடியாது. இன்றைக்கு மனிதர்கள், மனிதர்களாக திகழ்வதற்கு, ஒரு பாலமாக ஊடகமாக, நமக்கு உதவிசெய்யும் எனும் வகையில், அணிக்கொண்டிருக்கின்றோம். பறையை தொடுவது என்பது, சாதியினால் இவன் தீண்டு என ஒதுக்கி வைத்திருக்கின்ற சக மனிதனை தொடுவது. என்ற வகையிலதான் உலகளவில் ஒரு மானிடத்தினை, மானிடம் சார்ந்த தத்துவத்தினை முன்னெடுக்கின்ற, தத்துவம் சார்ந்த கருவியாகதான் இதனை பார்க்கின்றோம். உலகம் முழுவதும் இதனூடாக பயணம் செய்கின்றோம்.

கேள்வி : பறை இசை கலைஞருக்கான? கலைக்கான சமூகம் அங்கீகாரம் எப்போது கிடைத்தது?
பதில் : தொடக்கத்தில் செய்யும் போது, தீண்டதகாத தொழில் ஒன்றினை செய்வது போலவும், அருவருக்கதக்க விடயத்தினை செய்வது போன்றும், தாழ்வான பார்வை சமூகத்தில் இருந்தது. இப்போதும் முற்றிலும் மாறவில்லை. வெளிப்படையாக எங்களிடம் பேசுவதில்லை. தொடக்க காலத்தில், ஒடுக்குமுறைக்குள்தான் வாழ்க்கை இருந்தது. இன்றைக்கு அவையெல்லாம் உடைத்தெறியப்பட்டு, நானும் மனிதன், நீயும் மனிதன் அப்படியான கருத்து பரவலாக வளர தொடங்கியதில், எங்களுக்கான மதிப்பும், கூடிக்கொண்டு செல்கின்றது. தமிழக அரசு கலைச்சுடர் விருது, புதிய தலைமுறை தொலைக்காட்சி நம்பிக்கை நட்சத்திரம் விருது, அமெரிக்கா தமிழ்சங்கம் விருது, குவைத்தில் உள்ள கலைஞர்கள் சங்கம் விருது வழங்கியுள்ளது. விருதுகள் பெருகுகின்ற நபராகவும், வெளிநாட்டு வாய்ப்புக்கள் பெறும் நபராகவும், நாம் வந்திருக்கின்றேன். விதிவிலக்காக நான் வந்திருக்கிறேன். என்ன வைத்துக்கொண்டு எல்லோருக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது என்றும் சொல்லிவிட முடியாது. மணிமாறனை ஒட்டுமொத்த கலைஞர்களது பிரதிநிதியாக எடுத்துவிட முடியாது. இன்றும் எண்ணற்ற கலைஞர்கள் சாதி ஒடுக்குமுறைக்குள், மரணவீடுகளுக்குள், எந்த உரிமையும் வழங்கப்படாமல் தன்னுடைய சம்பளத்தினை தான் சம்பாதிக்க முடியவில்லை. இவ்வளவு நேரம்தான் நாங்கள் இருக்க முடியும் என்பதனை, சொல்ல முடியவில்லை. அப்படியான நிலையில்தான் கலைஞர்கள் இருக்கின்றனர். அவ்வாறானர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். முன்பிருந்த நிலையினை விட பறை இசைக்கான அங்கீகாரம், பறை இசை கலைஞர்களுக்கான அங்கீகாரம் சிறிதாக அதிகரித்திருக்கின்றது. அந்த அங்கீகாரத்தினைப்பெற்ற சில நபர்களில் மணிமாறனும் ஒருவனாக இருக்கின்றான்.
கேள்வி : வெளிநாடுகளில் நீங்கள் அவதானித்ததில் பறைக்கான வரவேற்பு எவ்வாறுள்ளது?
உழைப்பிற்கான இன்னொரு தேசம் சென்றிருக்கின்றனர். அங்கு சென்றபோதுதான், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில்தான், அவர்களுக்கான வேர்களை, விழுதுகளை பண்பாட்டு அடையாளங்களை தேடி போகின்ற போது வெற்றிடங்கள் ஏற்படுகின்ற போது, பல்வேறு விடயங்களை சாதியின் பால் சொல்லி ஒதுக்கி ஓரங்கட்டி இருக்கின்றோமே அது கூடாது. வெளிச்சமூகத்திற்கு பொதுச்சமூகத்திற்குள் போகும் போது, இதற்கான அவசியத்தினை, தேவையினை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவிற்கு செல்லும் போது, ஐந்து மாகாணங்களில், பயிற்சி நடைபெற்றது. எண்ணிக்கையளவில் பார்க்கின்ற போது, பெருவாரியாக கலந்து கொள்கின்றனர். உலகத்தவர்கள் மத்தியில் பறைக்கான அங்கீகாரம் கூடியிருக்கின்றது.
கேள்வி : இலங்கையில் நீங்கள் அவதானித்த போது பறைக்கான அங்கீகாரம் எவ்வாறுள்ளது?
பதில் : யாழ்ப்பாணத்தில், வவுனியாவில், திருகோணமலையில், மட்டக்களப்பில் பறைமுகாம்;களை நடாத்தியிருக்கின்றோம். இலங்கை பயணம் என்பது, தமிழகத்தில் 30ஆண்டு பறையின் பார்வை எப்படி இருந்ததோ, இன்றைக்கும், இலங்கையில் இருக்கின்றது. இங்கேயும் பறைக்கான, பறைக் கலைஞர்களுக்கான சமூக மதிப்பு, அங்கீகாரம் என்பது, கிடைத்ததாக தெரியவில்லை. கலைஞர்களோடு கதைக்கும் போது, அவர்கள் வெளிப்படுத்திய செய்தியின் மூலமாக கூறுகின்றேன். பறைக்கான சமூக அங்கீகாரம் இல்லை. பறையை ஒரு சாதிக்குரியதாக, மரணவீடு சம்பந்தப்பட்டதாகவே நாம் சுருக்கிவிட முடியாது. அது தமிழர்களது கருவி, பொதுவான கருவி, இசைக்கருவி இதனை எல்லோரும் எடுக்க வேண்டும். என்பற்காக பல மனிதர்கள் பாடுபட்டிருக்கின்றனர். களப்பணி செய்திருக்கின்றனர். தொண்டாற்றியிருக்கின்றனர். 1960ம் ஆண்டுகளில் திறந்து வைத்த வாசல்களில்தான் நுழைந்திருக்கின்றோம். எங்களது தொடக்கமென்று பெருமை பேசிவிட முடியாது. நாங்கள் அவர்களது தொடர்ச்சி, கலாநிதி சி.ஜெயசங்கர், பேராசிரியர் சி.மௌனகுரு, தம்பிராசா பறைக் குழுவினர், மூன்றாம்கண் அமைப்பினர் பறைக்கான, பறைஇசை கலைஞர்களுக்கான அந்தஸ்தினை பெற்றுக்கொடுப்பதற்காக போரடியிருக்கின்றனர்.
தமிழகத்தில் பறை மறுப்பு, பறை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. 1980களில் மிகத்தீவிரமாக நடைபெற்றது. மறுப்பு போராட்டம் கலவரமாக வெடித்து, துப்பாக்கி பிரயோகம் நடைபெற்று, உயிரிழந்த அனுபவங்கள் எல்லாம் உண்டு. இலங்கையிலே குறிப்பாக மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும், பறையை இனி இசைக்க மாட்டோம். என்று மறுத்து போராட்டம் இங்கு நடைபெற்றிருக்கின்றது. குறிப்பாக ஒரு பகுதியில் ஒரு கலைஞர், (தம்பிராசா இசை கலைஞர்) 180பதுதான் இசைப்பதற்கு ஊதியமாக தருகின்றீர்கள். 200ரூபாய் வழங்க வேண்டும். என்றும் கூறும் போது, “என்னடா பணத்தினை அதிகமாக கேட்கிறாய்”, அவ்வாறு வழங்க முடியாது. என்று மறுத்த போது, அவ்வாறு இசைக்க முடியாது என் மறுத்திருக்கின்றார். அதன் பிறகு அவர்கள் பணிந்து வந்தததன் பின்பு, 200போதாது இன்னும் அதிகமாக கொடு, என அவர் கேட்டிருக்கின்றார். அவ்வாறானவர்கள் செய்த களப்பணியினால்தான், நாங்கள் வருவதற்கு விதையளித்திருக்கின்றது. இப்போது வருகைதரும்போது சுலபமாக இருக்கின்றது. எங்களுக்கு ஏக்கம் என்னவாக இருக்கின்றதென்றால், இங்குள்ள பறைமேள கலைஞர்கள், பறைமேளம் இசைக்ககூடிய கலைஞர்களை அழைத்து, அவர்களை கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக, பணிநியமனம் செய்ய வேண்டும். பறைமேள கலைஞர்களுக்கு, கல்வியினை தகுதியாக வைக்காமல், பறைமேள இசையில் எவ்வளவு பாண்டித்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர், அவர்கள் எத்தனை ஆண்டு காலம் அனுபவமுள்ளவர்களாக இருக்கின்றனர். பயிற்சி அளிக்கும் முறையில், எவ்வாறு சிறப்பு தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான விடயங்களை அளவுகோலாக வைத்து, கல்லூரிகளில், பாடசாலைகளில் இக்கலையை வளர்ப்பதற்கு நியமனம் செய்ய வேண்டும். இலங்கைப்பறை வேறு, இந்தியப்பறை வேறு என்பதில்லை. தோற்றத்தில் வேறு, உயிர் ஒன்றுதான், அதனது வேரும் ஒன்றுதான், எல்லாமே பறைதான். இந்த புரிதல், எல்லோருக்கும் வேண்டும். இது விடுதலைக்கருவி, இக்கருவியை இசைத்து, மனிதர்கள் ஒருங்கிணைய வேண்டும். அந்த உணர்வை, நாம் பெற வேண்டும்.
பறையை தோள்களிலே சுமந்து 42ஆண்டுகள் கடந்து விட்டன. பிறந்ததில் இருந்து பறையோடுதான் பயணிக்கின்றேன். கடந்து வந்த பாதையில் நான்பட்ட வலிகள், வேதனைகள், கீறல்கள், காயங்கள் இவைகளிலிருந்துதான் படிப்பினை கிடைச்சிருக்கின்றது. அப்படிப்பினையில் இருந்து சில முயற்சிகள் எடுக்கின்றோம். மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்குமாறு அழைத்தனர். அப்போதான் புத்தர்கலைக்குழுவின் சார்பாக பறைப்பயிற்சி நடாத்தி வருகின்றோம்.