போலி ஆவணத்தைக்காட்டி கட்டடத்தொகுதியை இடைநிறுத்த முயன்ற நபர். வாகரையில் சம்பவம்

0
532

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள குகனேசபுரத்தில் வாகரை பிரதேச சபையினால் பொதுமக்களின் நன்மை கருதி கடந்த 2.2.2018 வெள்ளிக்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கடைத்தொகுதி ஒன்று அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்படும்போது கடைத்தொகுதி அமைக்கும் காணியானது ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாகரை பிரதேச சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வாகரைப் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை பொலிசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் தமது கட்டிடப் பணியினை மேற்கொண்டு நடத்தமுடியாத நிலை உருவாகி காலதாமதம் ஏற்பட்டதனால் அதற்கென மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் 20 மில்லியன் ரூபாய் நிதி மேற்குறித்த கடைத்தொகுதி அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியினைக் கொண்டு தற்போது பிரதேச சபையின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் வாகரை பிரதேசசபைக்குட்பட்ட குகனேசபுரம், ஆலங்குளம், திருக்கொண்டிமடு கிராம மக்களின் நன்மை கருதி கடைத் தொகுதி ஒன்று அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக வாகரைப் பிரதேச செயலகத்தினால் அரச காணி ஒன்று வழங்கப்பட்டது. இக்காணியானது ஏற்கனவே கிறவல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பள்ளமாக காணப்பட்ட பிரதேசமாகும். தற்போது கடைத்தொகுதியின் 25 வீதமான வேலைத் திட்டங்கள் முடிவுற்ற நிலையில் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தமது காணி என உரிமைகோரி அடியாட்களை அழைத்து வந்து கட்டிடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் ஒப்பந்தகாரரையும் அச்சுறுத்தி பணியினைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வாகரைப் பிரதேச செயலாளர் குறிப்பிட்ட நபரது காணி ஆவணத்தை பரிசீலனை செய்து பார்த்தபோது அது போலி ஆவணம் என அவர்; தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர், வாகரைப் பிரதேசசபையின் செயலாளருக்கு எழுத்து மூலம் உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து கட்டிடப் பணிகள் 15.02.2018 வியாழக்கிழமை அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குழப்ப சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ஆயினும், இதற்கான பாதுகாப்பு வழங்காமையினால் இன்றைய தினம் சனிக்கிழமை (24.02.2018) பிரதேச பொதுமக்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்படி கட்டிடம் அமைக்கும் பணிக்கு; பாதுகாப்பு, ஒத்துழைப்பு வழங்குமாறு வாகரைப் பிரதேச செயலாளரினால் எழுத்து மூலம் பொலிசாரிடம் கேட்கப்பட்டபோதும், பொலிசார் இது தொடர்பாக எவ்வித ஒத்துழைப்பும் வழங்காமை குறித்து, தாம் கவலை அடைவதாக வாகரை பிரதேசசபை செயலாளர் தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (26.02.2018) மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாவும் சபை செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.