முனைக்காட்டில் மீனவர்களின் வலை, தோணிகள் இனந்தெரியாதோரால் எரிப்பு

0
976

(படுவான் பாலகன்)

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் அமைந்துள்ள ஆற்றாங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் தோணி மற்றும் மீன்பிடிப்பதற்கான வலைகள் என்பன இனந்தெரியாதோரல் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் இன்று(23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளன.

வெள்ளிக்கிழமை என்பதினால், மீன்பிடிக்கு செல்லாமல் ஆற்றாங்கரையில் தோணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணிகளில் மூன்று தோணிகளும், வலைகளும் அடுக்கி வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன. அதேவேளை இன்னும் மூன்று தோணிகள் அடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டுவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கான தடயங்கள் காணப்படுகின்ற நிலையிலும் அத்தோணிகள் எரியவில்லை.

அன்றாடம் மீன்பிடித்தொழில் செய்து வாழ்கின்ற மீனவர்களின் தோணிகளும், வலைகளுமே எரிக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மீனவர்கள் குறிப்பிடுகின்ற போது,

சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் ஆற்றை அண்டிய பகுதிலும், களப்பு பகுதிகளிலும் நடைபெறுவதினால் அவ்வாறான இடங்கள் அண்மைக்காலமாக தோணிகளின் உதவியுடனே முற்றுகையிடப்பட்டன. இதன் காரணமாக தமது தோணிகள் தீயூட்டப்பட்டிருக்கலாம் எனவும் தாம் சந்தேகம் கொள்ளுவதாக தெரிவிக்கின்றனர். .