கம்பன் கழகம் எடுக்கும் முயற்சிக்கு தமிழர் விடுதலை கூட்டணி பூரண ஆதரவு வழங்கும்

0
361

கம்பன் கழக முன்னெடுப்பில் “வடகிழக்கு சமூக பிரமுகர்கள் ஒன்றுபட்டு தமிழ் இன நன்மை நோக்கி ஒன்றுபடுங்கள்” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி எனக்கு ஆச்சரியத்தை தந்தாலும், ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு இனத்தின் வரலாறும் ஒரு நாட்டின் வரலாறும் திரிவுபடுத்தப்பட கூடாது. சரித்திர ஆசிரியர்கள் இதை ஒரு புனிதமான கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கம்பன் கழகம், சமய பெரியார்கள், கல்விமான்கள் புத்திஜீவிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் எடுக்கின்ற இம்முயற்சி காலம் கடந்தாலும் உட்சாகமூட்டக்கூடிய விடயமே. இருந்தாலும் ஒரு சில நிபந்தனைகளிற்கு கட்டுப்பட்டு செயற்படாவிட்டால் வெற்றிகாண முடியாது. ஏற்கனவே வெற்றிகரமாக 2004இல் முடிந்திருக்க வேண்டிய விடயம் சிலரின் தான்தோன்றித்தனத்தாலும், தப்பான வழிநடத்தலாலும் தோல்வி கண்டுள்ளது என தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
தண்டிக்கப்படவேண்டியவர்களும், உண்மை குற்றவாளிகளும் தப்புவதற்கு இம்முயற்சி வழிவகுத்ததோடு, சிலரை உத்தமர்களாக்கி தங்களை சுற்றவாளிகளாக காட்டிக்கொள்ளவும் உதவியது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சில, என்னைப்பொறுத்தவரை தெரிந்தோ, தெரியாமலோ என்னால் செய்யப்படவில்லை. ஆனாலும் எனது கவனத்திற்கு கொண்டுவரும் விடயங்களிற்கு மதிப்பு கொடுக்கத்தயாராக உள்ளேன். அத்துடன் பத்து ஆண்டுகளிற்கு மேல் ஒற்றுமை கோரி பலதடவை என்னால் விடுக்கப்பட்ட நிபந்தனையற்ற அழைப்புகட்கு ஒருவரிடமிருந்து கூட பதில் கிடைக்கவில்லை. இதே போன்று எமது கட்சி மாநாடுகளில் ஒன்றுமையை வலியுறுத்தி பல தீர்மானங்களும் எடுத்துள்ளோம். பயனுள்ள பல ஆலோசனைகளை காலத்திற்கு காலம் வழங்கியும் உள்ளேன். எக்கோரிக்கையும் யாராலும் செவிசாய்க்கப்படவில்லை. எமது இனத்தின் பிரச்சினை மிக மிக பெரியதாகும். இதனை பகுதி பகுதியாக தீர்க்க முடியாது. ஆகவே, பிரச்சினைக்கு தீர்வற்ற இன்றைய நிலைமையை அடித்தளமாக கொண்டு மட்டும், நீங்கள் விரும்பும் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியாது என்பதால், கடந்த காலத்தையும் உள்ளடக்க வேண்டும். இனப்பிரச்சினை தீர்வுக்கு தேடிவந்த பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.
கம்பன் கழகம் தற்போது எடுக்கின்ற அதே முயற்சி போன்று மட்டக்களப்பு மறுமலர்ச்சி கழகத்தினர் 2001-2004 ஆகிய காலப்பகுதியில் மேற்கொண்ட பெரும் முயற்சியால் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், வர்த்தக பிரமுகர்கள், யாழ் -மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் போன்றோர் அக்கறையுடன் செயற்பட்டு அயராது உழைத்து 2004ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வாய்ப்பை நாம் பயன்படுத்தியிருந்தால் ஒரே குடையின்கீழ் சகல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் பொது கொள்கையிலும், பொது சின்னத்திலும் போட்டியிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பெரு வெற்றியும் பெற்றிருப்பார்கள். இன பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் வாய்ப்பும் இருந்தது. அதே போல் யுத்தமும் நிறுத்தப்பட்டிருக்கும். பல்வேறு இழப்புக்களையும் தவிர்த்திருக்க முடியும். இதனை விடுதலை புலிகளும், அவர்களின் ஆதரவு பெற்ற தராக்கி எனும் ஊடகவியலாளரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நேரத்தில் விடுதலை புலிகள் ஆயுதம் தாங்கி போராடிய குழுக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை விரும்பியிருந்தனர். ஆனால் துரதிஸ்டவசமாக சிலருடைய சுயநல போக்கினால் 28 வருடமாக இயங்காது, ஸ்தாபகரால் செயலிழக்கப்பட்டும் வைக்கப்பட்டிருந்த “தமிழரசு கட்சி”யின் சின்னமாகிய வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 22 பேர் வெற்றியும் பெற்றிருந்தனர். இதில் வேடிக்கை யாதெனில் ஒருவர், காலையில் தோற்று மாலையில் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டதாகும். நம்ப முடியாத வகையில் சிலர் அறுபதாயிரம், ஒரு லட்சத்திற்கு மேலும் வாக்குகள் பெற்று வெற்றியீட்டியிருந்தனர். வேறு எந்த அரசியற்கட்சிகளையும் இவர்கள் விடாது தடுத்து பெற்ற வெற்றியே இதுவாகும். இச்சம்பவமே ஜனநாயகத்தை முற்று முழுதாக வட கிழக்கில் தடம்புரள வைத்தது.
மேற்குறித்த சம்பவங்களால், இன்றுவரை தலை நிமிர முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இச்சம்பவத்துடன் பாரம்பரிய ஒற்றுமையும் முறியடிக்கப்பட்டதுடன், இந்நிலைமையை அரசும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியை செயலிழக்க செய்யும் சதிகளும் இடம்பெற்றன. ஜனநாயகத்திற்கு மாறாக பாராளுமன்றத்தினுடைய கால எல்லையை ஆறு ஆண்டுகள் நீடித்தபோது, அதை ஆட்சேபித்து தமிழர் விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பதவி துறந்து ஜனநாயகத்தை காப்பாற்றிய சம்பவம்; அனைவரினது பாராட்டைபெற்ற அதே கட்சியாகிய தமிழர் விடுதலை கூட்டணியை அரசியலில் இருந்து புறந்தள்ள அனேகரால் முயற்சி எடுக்கபட்டமை குறிப்பிடதக்கது. 2004ம் ஆண்டு முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தம் 2009ம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டது. எண்கணக்கிலடங்கா பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள், போராளிகள், கல்வியலாளர்கள், சமய தலைவர்கள் உயிரிழந்ததுடன், பல கோடி ரூபா பெறுமதியான அப்பாவி மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. யார் இதற்கு பொறுப்பு கூற வேண்டுமென்பது இரகசியமானதொன்றல்ல.
அம்முயற்சி நிறைவேறியிருந்தால் பல்வேறு அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிக்கு ஏற்பட்ட முடிவு போன்று கம்பன் கழகமும், சமய பெரியார்களும் எடுக்கும் இம்முயற்சிக்கும் ஏற்பட கூடாது என்பதை மனதில்கொண்டு, அன்று விட்ட பிழையை மீண்டும் விடாது முறைப்படியான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எம்மத்தியில் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன. ஒவ்வொருவரும் தம்மைப்பற்றிய செயற்பாடுகளை மறைத்து வைத்துவிட்டு, மற்றவர்களில் பிழை கண்டு பிடிக்க கூடாது. ஆனால் ஒவ்வொரு கட்சி தலைமைக்கும் தாம்தாம் விட்ட பிழைகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்னவென நன்கு தெரியுமென்பதுடன் அவை உலகிற்கும் தெரியுமென்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அமைப்பிலிருந்தும், அவர்கள் அமுல்படுத்த விரும்பும், மக்களால் ஏற்புடையதென கருதப்படும் விடயங்கள் அனேகரிடம் கோரப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகளின்பிரதிநிதிகளை அழைத்து, அவர்களின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். எடுக்கப்படும் இறுதி முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவதாக உறுதியளிக்கப்பட வேண்டும். இவ்விடயங்கள் தொடர்பில் கம்பன் கழகம் எடுக்கும் முயற்சிகளிற்கு தமிழர் விடுதலை கூட்டணி பூரணமாக ஒத்துழைப்பு வழங்கும். -நன்றி-

வீ.ஆனந்தசங்கரி செயலாளர்நாயகம் தமிழர் விடுதலை கூட்டணி