கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மாவெட்டுவான்குளம் திறப்பு

0
228

விவசாய அமைச்சினால் 30 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கமநல சேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட மாவெட்டுவான் குளம் விவசாய அமைச்சின் செயலாளர் பண்டார விஜயரெத்தின, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆகியோர் குளத்தினை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் நேற்று இடம்பெற்ற இந் நிகழ்வில், நீர் முகாமைத்துவ பிரதம பொறியியலாளர் பிரபாத் வித்தாரண மாவட்ட திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஆ.சுதாகரன் மற்றும் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ் நேசராசா மாவட்ட கமநல திணைக்கள உயர் அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறு நீர்ப்பாசனக் குளங்களை விவசாயிகளின் பாவனைக்காக புனரமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவெட்டுவான் குளம் நிர்மாணம் செய்யப்பட்டது.

பிரதம அதிதிகள், அதிதிகள் விவசாயிகளினால் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டு சமய அனுஷ்டானங்களின் பின் வான்கதவு திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம் இனிவரும் காலங்களில் இக்குளத்தினை நம்பி வாழும் 800 விவசாயக் குடும்பங்கள் 1200 ஏக்கரில் வேளாண்மை செய்ய முடியும் அத்துடன் விலங்கு வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் குடீநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது.

விவசாய அமைச்சின் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இது போன்று புழுட்டுமானோடைக் குளம், இரைச்சகல் குளம், அம்மனடி அணைக்கட்டு என பல்வேறு விவசாய நீர்ப்பாசனத்துக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.