மனிதர்கள் மனிதர்களுடனும் இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்தலுக்கான உன்னத எதிர்பார்ப்பு

0
507

பரம்பரை பரம்பரையாகப் பட்டறிவூடாக வரித்கொண்ட அனுபவ அறிவும்; வாய்மொழி வழியிலான அறிவுப் பகிர்வும் பெருக்கமும் விஞ்ஞானபூர்வமற்றது எனக் கற்றுத்தரப்பட்டதன் வழி கேள்வியேதுமற்றது பாமரத்தனம் என ஏற்று நிராகரித்து வாழ்ந்து வரும் சமூகங்கள் மேற்படி அறிவுமுறைகளை கல்வி, கேள்விக்குட்படுத்தி மீளக்கொண்டு வருவது நிலைநிற்கும் சமூகப் பண்பாட்டு, பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்புடையது.

இன்றுவரையில் உள்ளுர் அறிவு திறன் முறைமைகள் நவீன கல்வி முறைமைகளுக்குள் கொள்ளப்படாதவை ஆகவும் தகாதவை ஆகவுமே கணிக்கவும் கையாளவும்பட்டு வருகின்றன. இலக்கியம் தொட்டு மருத்துவம் வரையிலாக இந்த நிலைமையே காணப்பட்டு வருகின்றமை கவனத்திற்குரியது.

தங்களுக்குரிய பாடவிதானங்களை வரைவு செய்துகொள்ளும் சுயாதீனம் கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்த விடயம் சார்ந்து எடுத்துக்கொண்ட முயற்சிகள் கேள்விக்கும் ஆய்வுக்கும் உரியவை.

உள்ளுர் அறிவுதிறன் சார்ந்த அறிவுமுறைமைகளுடன் சார்ந்த அறிஞர்களையும் கலைஞர்களையும் உயர்கல்வி முறைமைக்குள் உள்வாங்கப்படுவதன் முக்கியத்துவம் அறியப்படுவதும் உணரப்படுவதும் மிகவும் அவசியமாகின்றது.

பாரம்பரிய வைத்தியர்கள், பல்வகைத் தொழிற்துறைசார் தொழிநுட்ப நிபுணர்கள், வேளாண் அறிஞர்கள், புலவர்கள், பண்டிதர்கள், ”சாரிகள், அண்ணாவிமார், மாந்திரிகர்கள், மருத்துவிச்சிகள், கதைசொல்லிகள், கலிபாடிகள், உணவு தயாரிப்பு நிபுணர்கள், மூலிகை நிபுணர்கள், கலை, கைவினைக் கலைஞர்கள் என இப்பட்டியல் விரிந்து செல்லும்.

இந்த அறிவு முறைகள் உயர்கல்வி மரபுக்குள் உள்வாங்கப்படுவதும்; இக்கல்வி முறைகள் பற்றிய அறிமுகத்தையும் அறிவையும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி மரபுக்குள் கொண்டு வருவதும் சூழல்நட்புக் கொண்டதும், பொருளாதாரத்தில் தங்கிநிற்றல் நிலை நீக்கம் பெற்றதும் மக்கள் மயப்பட்டதுமான சமூக உருவாக்கங்களுடன் தொடர்புடையது என்பதும் உரையாடல்கள் மூலமான முன்னெடுப்புக்களுக்குரியன.

மேற்படி அறிவுமுறைமைகள் வாய்மொழி மூலமான அனுபவ அறிவுப் பகிர்வுக்கு உரியதாகவும் ஏடுகளில் எழுதப்பெற்று பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வருபவையாகவும் மிகப் பெரும்பாலும் காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்படி அறிவுமுறைகளைக் கையாளுவதற்கு அவசியமான அறிவும பயில்வும் தேவைப்படுகின்றது. வாய்மொழி அறிவு திறன்களை அறிந்து பதிவு செய்து புதிய ஊடகங்களுக்கு கொண்டு வருதல்; கிரகித்தலையும், நினைவில் வைத்தலையும் அடிப்படையாகக் கொண்ட அறிவுமுறைப் பயில்வு என்பன இங்கு அவசியமாகின்றன.
மேலும் ஏடுகளைப் பேணுகின்ற, பராமரிக்கின்ற அறிவுதிறனும், ஏடுகளை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு கொண்டு வருகின்ற அறிவு திறனும் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.

முதல் மொழிகளில் அதாவது தாய்மொழி மூலமாக அமையும் கல்வி முறைமையே முழுமையான கல்வித்திறத்தையும், தரத்தையும் வெளிக்கொண்டுவரவல்லது என்பது உலகறிந்த அறிவியல் முடிவு. எனவே முதல் மொழியில் அமைந்த கல்விமுறைமை என்பதம் உள்ளுர் அறிவுதிறன் முறைமைகளை உள்வாங்கிய கல்விமுறை என்பதும் பற்றிய உரையாடல், உள்வாங்கல், முன்னெடுத்தலின் அவசியம் உணரப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

உலகின் பல்வேறு அறிவு முறைமைகளையும் அந்தந்த மொழிகளுடாகவே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்ற தமிழர் சமூகங்கள் மேற்படி விடயம் சார்ந்து சிந்திப்பதும் செயற்படுவதும்; மேற்படி முன்னெடுப்புக்களுடன் உலகின் பல்வேறு சமூகங்களுடனும் தொடர்புகொண்டு இயங்குவதம் மனிதர்களை மனிதர்களுடனும், இயற்கையுடனும் ஒத்திசைந்து வாழ்வாங்கு வாழ்வதற்கான அறிவுச் செயற்பாடாக அமையும் என்பது உன்னத எதிர்பார்ப்பு. இது சமூக ஜீவியுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளின் அடிப்படை.

கலாநிதி சி. ஜெயசங்கர்.