தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் வடகிழக்கு இணைப்பை ஏற்றுக் கொண்டு எமது கொள்கைகளுடன் இணங்கி வந்தால் அவர்களை இணைப்பது தொடர்பாக சிந்திக்க முடியும்

0
491

கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியது சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி சிவநாதன் அவர்கள் பின்வருமாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்

அரசியலுக்கு அப்பால் கிழக்கு தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியில் கிழக்கு தமிழர் ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் உருவாக்க பணிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்றாலும் எமது ஒன்றியம் உருவாக்க படுவதன் நோக்கத்திற்கான அரசியல் சூழல் இன்று கிழக்கு மாகாணத்தில் உருவாகி உள்ள நிலையில் எமக்கு உடனடியாக செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது கிழக்குத் தமிழர் ஒன்றியம் பல விடயங்களை முதன்மைப் படுத்தினாலும் அதன் உருவாக்கத்தில் முக்கிய குறிக்கோல்களில் ஒன்று கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் செயற்பட வைப்பதாகும்.

அந்த வகையில் அதற்கான சூழ்நிலையினை நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் எமக்கு ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளின் ஆதரவு இன்றி ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்நிலையில் கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்குடன் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம்.

எமது சந்திப்பு சுமூகமாகவும் திருப்திகரமாகவும் அமைந்திருந்தது.

நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத இடங்களில் ஏனைய தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்குமாறு முன்வைத்த கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் ஏற்றுக் கொண்டதுடன் நாம் ஏற்கனவே மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைக்கும் முடிவை எடுத்துவிட்டோம் .

ஏறாவூர் பற்று, கோறளைப் பற்று போன்ற பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு அங்கு உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எங்களது கொள்கையுடன் இணங்கி வர மறுக்கின்றனர்.

வடகிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக தாங்கள் பரிசீலிக்க தயாராக உள்ளதாக கோரியதுடன்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் வடகிழக்கு இணைப்பை ஏற்றுக் கொண்டு எமது கொள்கைகளுடன் இணங்கி வந்தால் அவர்களை இணைப்பது தொடர்பாக சிந்திக்க முடியும் எனவும் கூறினார்.

அதனை நாம் ஏற்றுக் கொண்டதுடன் அது குறித்து நாம் சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்களுடன் சந்தித்து பேசி முடிவுகளை தெரிவிப்பதாக கூறியுள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டு தொடர்பாக மிக விரைவாக ஏனைய கட்சிகளுடன் பேசி தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த ஆட்சி உள்ளூராட்சி சபைகளில் மலர்வதற்கு நாம் எம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதுடன் அது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரை தொடர வேண்டும் என்பதையும் வலியுறுத்த உள்ளோம். என தெரிவித்தார்