ஆர்வம்செலுத்தாமையே சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு, வீழ்ச்சிக்கு காரணம். – ந.தயாசீலன். 

0
496

(படுவான் பாலகன்) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 50வீதத்திற்கும் மேலான மாணவர்கள் எமது வலயத்தில் சித்தியடையாமைக்கான காரணம் தரம் 6 தொடக்கம் 9வரையான வகுப்புக்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கத் தவறுவதேயாகும். என மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற, பரிகார கற்பித்தல் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 6 தொடக்கம் 9வரையான மாணவர்களுக்கான கணித பாடத்திற்கான பரிகாரக் கற்றல் செயலமர்வு இன்று(17) சனிக்கிழமை பல்வேறு நிலையங்களில் நடைபெற்றது. மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான குறித்த செயலமர்வு அம்பிளாந்துறை, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபம், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம் போன்ற இடங்களில் நடைபெற்றது.
இச்செயலமர்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இங்கு தொடர்ந்தும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் கூறுகையில்,
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் அனைத்து மாணவர்களையும் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சித்தியடைய வைப்பதற்காக இச்செயலமர்வினை வலயக்கல்விப் பணிப்பாளர் ஒழுங்கு செய்துள்ளார். மாணவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில், நவீன முறையில் கற்பித்தல் இடம்பெறவிருக்கின்றது. எமது வலயத்திற்குட்பட்ட மாணவர்கள் ஏனைய பாடங்களில் சித்தியெய்தியும், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் தவறியமையினால் கடந்த காலங்களில் வலயம் பின்னடவினைச் சந்தித்தது. இதற்கு மாணவர்களும் தரம் 6 தொடக்கம் 9வரையான வகுப்புக்களில் கற்பதற்கு அக்கறை காட்டமால் இருந்தமையும், பெற்றோரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதுபோன்று, தயார்படுத்த தவறியமையும் இந்நிலைக்கு காரணமாகும். இதனை நிவர்த்தி செய்ய மாணவர்களதும், பெற்றோர்களதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.