தமிழ்த் தரப்பு ஆட்சியமைக்க தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு நிபந்தனையுடனான ஆதரவு

0
979

தமிழ் மக்களுடைய தரப்பை பலப்படுத்தும் வகையிலும் கிழக்குத் தமிழர்களது பிரதிநிதித்துவத்தையும் ஆட்சி முறையையும் நிலை நிறுத்துவதற்காகவும் எமது கட்சி தமிழ் தரப்புக்கு ஆதரவை வழங்கும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மத்திய குழு தெரிவித்துள்ளது.
இக்கருத்தினை தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மத்திய குழுவின் சார்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியமைப்பு தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மட்டக்களப்பில் வைத்து  இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த துரைரெட்ணம்,
தமிழ் தேசியத்தின் நலன்களையும், தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளையும் நிறைவேற்றக் கூடியதும் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் தொடர்பான விட்டுக் கொடுப்பற்ற நியாயமான தீர்வுக்கு துணைபோகின்ற விடயங்களையும் அடிப்படையாக வைத்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாக இருந்தால் அதனை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஆரோக்கியமான நல்ல விடயங்களுக்கும் அவர்களுடைய பிரதேச அபிவிருத்திப் பணிகளுக்கும் எமது நியாய பூர்வமான நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கத் தயார்.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்களுடைய தரப்பை பலப்படுத்தும் வகையில் கிழக்குத் தமிழர்களது பிரதிநிதித்துவத்தையும் ஆட்சி முறையையும் நிலை நிறுத்தக்கூடிய வகையில் எமது கட்சி தமிழ் தரப்புக்கு ஆதரவை வழங்கலாம். கிழக்கின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவினை தமது கட்சி எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் தீர்க்கமானதும் நியாயபூர்வமான விடயங்களைத் தவிர்த்து தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிராக துரோகம் விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எமது கட்சி துணை போக மாட்டாது என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆதரவினை கட்சி விலக்கிக் கொள்ளும். அத்துடன், அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால் அதற்கெதிராகவும் குரல் கொடுக்கும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.