மட்டுநகரின் முதல்வர் யார்? (வேதாந்தி)

0
1206

(வேதாந்தி)

மட்டக்களப்பு மாநகர முதல்வர் யார் என்ற கேள்வி மட்டக்களப்பு நகரில் இன்று பேசப்படும் பொருளாக உள்ளது. யாழ் மாநகர சபையின் மாநகர முதல்வரின் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து மட்டுநகரின் முதல்வராக யார் வருவார் என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் யார் என்பதை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளது. இன்று முதல்வர் பதவிக்கு பலபேர் ஆசைப்பட்டுள்ளதாகவும், பல்வேறு தரப்பினர் ஊடாக கட்சியின் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் யார் முதல்வர் என்பதை தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் கருத்துக்களைப்பெற்றுக்கொண்ட பிறகே தம்மால் தீர்மானிக்க முடியும் என கட்சியின் செயலாளர் தன்னைச் சந்தித்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்று பலபேர் ஆசைப்பட்டாலும் முதல்வர் கதிரைக்கு இருவருடைய பெயர்களே தற்போது பரவலாக பேசப்படுகின்றது.மட்டக்களப்பு கருவேப்பங்கேணி 6ம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வே.தவராஐh, மற்றையவர் கல்லடியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தி.சரவணபவான்.
இதில் வே.தவராஐh கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர் என்பதுடன் மண்முனை வடக்கு கிளையின் தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்றார்.
சுரவணபவான் அண்மையில் கட்சியில் அங்கத்துவம் பெற்று மண்முனைவடக்கு கிளையின் பொருளாளராகவும் செயற்படுகின்றார். இவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என கல்லடித்தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எது எப்படி இருந்தாலும் கட்சியின் முடிவே இறுதி முடிவாக இருக்கும் எனவும் கட்சியின் உண்மையான அங்கத்தவர்கள் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வபார்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு விசுவாசமாக செயற்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி இரண்டுபேரும் விடாப்பிடியாக இருக்கும் பட்சத்தில் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்படும் அறிகுறிகளும் தென்படுகின்றது.
தமிழர்விடுதலைக்கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டி;யிட்ட தரப்பினர் தற்போது ஆதரவினை வழங்க முன்வந்துள்ள நிலையில் பிரதிமேயர் பதவி ரெலோ கட்சியினருக்கா அல்லது உதயசூரியன் தரப்பினருக்கா என்ற கேள்வியும் எழுந்துள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

மட்டுநகரின் முதல்வராக வருபவர் வெறுமனே கதிரையை அலங்கரிப்பவராக மாத்திரமன்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு   மட்டக்களப்பு நகரில்  எதிராக வாக்களித்த 30100 மக்களையும் கட்சியின் பக்கம் திசைதிருப்பக்கூடியவராக மக்கள் சேவை செய்பவராகவும் இருக்க வேண்டும் இல்லாவிடியில் எதிர்வரும் தேர்தல்களில் மட்டுநகரில் தமிழ்தேசியகூட்டமைப்பு பல பின்னடைவுகளை  எதிர்நோக்க வேண்டிவரும்.