கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த அபிவிருத்தி என்ன? கணேசமூர்த்தி கேள்வி.

0
1517

தமிழ் மக்களுக்கு பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அந்த நெருப்பில் குளிர் காய்பவர்கள் நாங்கள் அல்ல. மக்களோடு மக்களாக தோளோடு தோள்நின்று மக்களுக்காக சேவையாற்றியவர்கள் நாங்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமாகிய சோ. கணேசமூர்த்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு – பாலையடிவட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றுகையில்,.
நான் கடந்த காலத்தில் எந்த அபிவிருத்தியினையும் செய்வில்லை என்றும், பயங்கரவாத சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்தியவன் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சரான துரைராஐசிங்கம் தெரிவித்திருக்கிறாரார். இது ஒரு முட்டாள்தனமான உரையாகும்.
கரடியாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையம் எங்கள் நாட்டின் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண சபையின் ஊடாக செய்தேன் என பிரச்சாரம் செய்கின்றார். இந்த பொய் பிரச்சாரத்தினை நம்ப மட்டக்களப்பான் தயாரில்லை. கரடியாறு விவசாய பண்ணையினை அம்பாறை மாவட்டத்துக்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயச்சியினை தடுத்து நிறுத்தியவன் நான். யுத்தத்தில் அழிக்கப்பட்ட கரடியாறு விவசாய சேவைக்கால பயிற்சி நிலையம் புனரமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியீட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டதே தவிர இவரது கிழக்கு மாகாண சபையில் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டவையல்லை.
மாகாணசபை என்பது வெள்ளை வேட்டி கட்டுவதற்காக அமைக்கப்பட்டவையல்ல. தமிழ் மக்களின் உயிர், உடமை, அவலங்கள் என சொல்லொண்ணாத் துயரங்களுடன் கட்டியமைக்கப்பட்டவைதான் இந்த மாகாண சபை முறைமையாகும். மட்டக்களப்பு மாவட்டம் விவசாய மாவட்டமாகும். கிழக்கு மாகாண சபையில் அமைச்சராக அதுவும் விவசாய அமைச்சராக இருந்து அவர் எம் மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. இது இந்த மாகாண சபையினை படைத்த மாவீரர்களுக்கு இவர் செய்யும் துரோகமாகும்.
போர்க்காலத்தில் இருந்து இன்று வரையும் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் செய்யும் போது இவர் எங்கிருந்தார்?. நித்திரையால் எழும்பியவன் போல் பொய் உரையினை மக்களுக்கு புகட்ட முடியாது. மக்கள் உங்கள் நாடகத்தினை நன்கு அறிந்துள்ளார்கள்.
நான் மட்டகக்ளப்பு கல்விக் கல்லூரியினை அமைத்துள்ளேன். இதனை அமைப்பதற்கு பல தடைகள் தமிழ் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போதைய கல்வி அமைச்சர் றிச்சேட் பத்திரண மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் எனது கோரிக்கையினை ஏற்று இதனை அமைத்தோம். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வெளியேறியுள்ளார்கள். இதில் சில நேரம் இவரின் உறவினர்கள் கற்றிருக்கலாம் அல்லது வேலைசெய்யலாம்.
இதைப்போல் புதுக்குடியிருப்பு ஆயள்வேத வைத்தியசாலை அமைத்தேன். இதிலும் இவரின் உறவினர்கள் சிகிச்சை பெற்றிருக்கலாம். ஆனால் இவருக்கு இவைகள் அபிவிருத்தி என்று தெரியாது?, யாரால் மேற்கொள்ளப்பட்;டது என்றும் தெரியாது. இவர் மட்டக்களப்பில் தமிழ் மக்களை பிhதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியா என கேட்கத் தோன்றுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த செல்லையா இராசதுரையினால் இசை நடனக்கல்லூரி கட்டப்பட்டது. இதற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால் இம் மாணவர்களின் சான்றுதழ்கள் தகைமை அற்றதாக காணப்பட்டது. அத்துடன் வேலைவாய்ப்பினைப் பெறுவதும் கஸ்ரமாக இருந்தது. அதைப்போல் திருகோணமலை வளாகம் கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படவில்லை. இவ்வாறான பிரச்சனைகளை அவதானித்த நான். உயர்கல்வி அமைச்சு, இவ் அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் திலகரட்ண மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களையும் ஒன்றினைத்து மகாநாடு ஒன்றை நடாத்தினேன். இதில் எடுக்கப்ட்ட தீர்மானத்துக்கமைய இசை நடனக்கல்லூரி, திருகோணமலை வளாகம் என்பன கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஒரு மாத காலத்துக்குள் வெளியிடவைத்தேன். ஒவ்வாரு கிராமப் பாடசாலைக்கும் கட்டிட வசதியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். மட்டக்களப்பின் கல்வி அபிவிருத்திக்காக என்ன செய்தேன் என்பது தெரியாமல் அரசியலுக்கு வந்து எதனையும் கதைக்கலாம் என நினைக்கக் கூடாது.
பயங்கரவாத தடைச்சட்டம் யாரின் சம்மதத்துடன் கொண்டு வரப்பட்டது என்பது துரைராஜசிங்கத்துக்கு தெரியாது. தற்போது எதிர்கட்சியாக இருப்பது போல் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்து அவரின் கையெழுத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்டது. சட்டத்தினை நீங்கள் உருவாக்கி தமிழ் இளைஞர்களை பலிக்காடாக்கிவிட்டு என்னிடம் இந்த கேள்வியினை கேட்கக்கூடாது.
இவ்வாறான பாரிய துரோகத்தினை தமிழ் மக்களுக்கு செய்தவர்கள் நீங்கள். ஆனால் யுத்தம் ஓய்ந்து இன்றுவரைக்கும் இச்சட்டத்தினை நீக்கமுடியவில்லை. இப்பேற்பட்ட நீங்கள் என்னிடம் அபிவிருத்தி பற்றி கேட்கின்றீர்கள். உங்களுக்கு அபிவிருத்தி என்றால் என்ன என்று வரைவிலக்கணம் தெரியுமா?
நீங்கள் செய்த ஒரோயொரு வேலை வந்தாறுமூலை பாடசாலையின் கண்காட்சி என்ற போர்வையில் மக்களின் பணத்தினை செலவிட்டது மாத்திரம்தான். எந்தவித புதிய விவசாய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றார்.