ஆட்சி மாற்றம் வந்தும் எமது மக்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் சுதந்திரமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.

0
290

(டினேஸ்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று 7 நல்லிரவுடன் முடிவிற்கு வரும் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி 13 கிராம வட்டாரத்திற்கான மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் எஸ்.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான கே.துரைராஜசிங்கம் மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா எம்.இராஜேஸ்வரன், ரீ.கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் நேற்றைய தினம் நாடு முழுவதும் சுதந்திர தினத்தை சிங்கக் கொடி ஏற்றி கொண்டாடுகின்றது அந்தவகையில் எமது தமிழர்களுக்கான உரிமைப் போராட்டமானது கடந்த 2009.05.18 ஆம் திகதி முற்றுப் பெற்றது அன்றைய தினம் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகைதந்து நிலத்தை முத்தமிட்டு வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினார்.

அன்றிலிருந்து எமது இனத்திற்கான விடுதலையும் உரிமைகளும் இற்றைவரை கிடைக்கவில்லை ராஜபக்ச அரசாங்கத்தை மாற்றியமைக்க தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கொண்டுவந்தோம் அவ்வாறு ஆட்சி மாற்றம் வந்தும் எமது மக்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் சுதந்திரமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.

ஆகையினால் இன்றைய சுதந்திர தினத்தை சிங்கள தேசமும் வேறு அரச நிறுவனங்களும் மட்டுமே கொண்டாடி மகிழ்ந்தன ஆனால் எமது தமிழ் இனத்திற்கான சுதந்திரம் இன்று வரை கிடைக்கவில்லை என்பது தான் உண்மை என கருத்துத் தெரிவித்தார்.