பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்து

0
227

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்த காணொளி பரவியதை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உடனடியாக அவரை மினிஸ்டர் கொன்சீலர் (பாதுகாப்பு) பணியில் இருந்து இடைநிறுத்துமாறு லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா இராணுவத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவில் உள்ள அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கவுள்ளனர்” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை

இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரித்தானிய அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு லண்டன் பெருநகர காவல்துறையிடமும், பிரித்தானிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவிடம் லண்டன் பெருநகர காவல்துறை விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அவருக்குள்ள இராஜதந்திர விலக்குரிமை தடையாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதினப்பலகை