முனைக்காட்டில் ஒன்றிணைந்த இளைஞர்கள் : சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை – பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

0
1337

(படுவான் பாலகன்) முனைக்காடு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் கசிப்பு உற்பத்தி இடங்களை முற்றுகை செய்து, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் இன்று(06) செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

முப்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை காவல் துறையினரின் உதவியுடன் மூன்று இடங்களை முற்றுகை செய்து, அதற்காக பயன்படுத்தப்படுகின்ற பாத்திரங்கள், கோடா, குழாய் என பல பொருட்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.

கிராமத்தின் எல்லையில் உள்ள ஆற்றாங்கரையில் காணப்படும் கண்ணா மரங்களுக்கிடையே இருந்தே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், இவற்றினை கட்டுப்படுத்துமாறு பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தல்களை வழங்கியும், தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலே இளைஞர்களாக ஒன்றிணைந்து கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டதாக கிராம இளைஞர்கள் குறிப்பிட்டனர்.