மட்டக்களப்பில்விவசாயத்துறை மேம்படுத்தல் திட்டத்தின் பங்குதாரங்களுக்கான கூட்டம்

0
313

கிழக்கு விவசாய அமைச்சினால் உலக வங்கி நிதியில் அமுல்படுத்தப்படவுள்ள

விவசாயத்துறை மேம்படுத்தல் திட்டத்தின் பங்குதாரங்களுக்கான கூட்டம்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் உலக வங்கியின் நிதியில் 2021ஆம் ஆண்டுவரை அமுல்படுத்தப்படவுள்ள விவசாயத்துறை மேம்படுத்தல் திட்டத்தின் பங்குதாரங்களுக்கான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

விவசாய உற்பத்திகளை அதிகரித்தல், விவசாயிகளின் செயற்திறனை மேம்படுத்துதல் , சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சிறியளவு உற்பத்திகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை ஒருங்கிணைத்துச் செயற்படச் செய்தல், விவசாயத்தை முன்நிலைப்படுத்தியதான உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விவசாயத்துறைசார்ந்து வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்றைய கூட்டத்தில், விவசாய அமைச்சின் விவசாயத்துறை மேம்படுத்தல் திட்டத்தின் பிரதித்திட்டப் பணிப்பாளர் பி.எம்.என்.தயாரத்ன, விவசாய ஆய்வாளர் எம்.ஸ்ரனிஸ்லாஸ், திட்டத்தின் பொறியியலாளர் கே.பாஸ்கரதாஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்.செழியன், பிரதேச செயலாளர்களான எஸ்.வாசுதேவன், திருமதி என்சத்தியானந்தி, செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 கொத்தணிப்பிரிவுகளைக் கொண்டதாகச் செயற்படுத்தப்படவுள்ளது. இதில், விவசாய உற்பத்திகளின் பெறுமதிகளை அதிகரித்தல், நவீன விவசாயத் தொழில் நுட்பங்களை உள்வாங்குதல், விவசாயிகளுக்கான பயிற்சிகள், வர்த்தகமயமாக்கல், விவசாயத்துறையில் செயற்படுபவர்களின் தொழிலை நிறுவனமயமாக்கல் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

3 பகுதிகளைக் கொண்ட இத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, கதிரவெளி, தும்பங்கேணி ஆகிய 3 கொத்தணி அலகுகளுக்குள் மொத்தமாக 26 கிராமங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதன்போது, கிழக்கு மாகாண திட்ட முகாமைத்துவ அலகு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட வேலைகள், அது சார்ந்து சாதக பாதக ஆய்வுகள், மற்றும் திட்டத்தின் நிறைவு வரையில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள் அடங்கிய பங்குதார்களுக்கு விளக்கமளித்தனர்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் 125 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 5 மாகாணங்களிலும் மொத்தமாக 7 மாவட்டங்களில் 21 கொத்தணிக்கிராமத் தொகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.