கேப்பாபுலவு குழப்பநிலை தணிந்தது போராட்டம் தொடர்கிறது பாதை திறந்துவிடப்பட்டுள்ளது

0
257

கேப்பாபுலவு குழப்பநிலை தணிந்தது போராட்டம் தொடர்கிறது பாதை திறந்துவிடப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று(04) 339 ஆவது நாளாகவும் தொடர்கிறது

இந்நிலையில் பூர்வீக மக்கள் அகதி வாழ்வில் ஜனநாயக இலங்கையில் சுதந்திர தின விழாவா எதிர்க்கிறோம் வெறுக்கிறோம் என கேப்பாபுலவு மக்கள் தெரிவிக்கின்றனர் இதேவேளை போராட்டம் மேற்கொள்ளும் ஒருவர் கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி சுதந்திர தினத்தை எதிர்த்து உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து  133.4 ஏக்கர் காணிகள் கடந்த வருடம் மார்கழி  28 ம் திகதி  மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது கேப்பாபுலவு பகுதியில்  111.5 ஏக்கர்  காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக  133.34 ஏக்கர்  காணிகள் கையளிக்கப்பட்டது குறித்த காணிகளுக்குள் கடந்த 1 ம் திகதி மக்கள் சென்றனர்

இந்நிலையில் இன்னும் தமது காணிகளில்  விடுவிக்க வேண்டியுள்ள 104 குடும்பங்களுக்கு சொந்தமான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து  இன்று(04) 339 ஆவது நாளாகவும் போராட்டத்தை  தொடர்ந்து வருகின்றனர்

இந்நிலையில் இன்றைய தினம் இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினம் இன்று இடம்பெறும் நிலையில் சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம் வெறுக்கிறோம் என தெரிவித்து தமது போராட்ட இடமெங்கும் கறுப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை அவர்கள் கடந்தவருடம் ஜனவரி மாதம் 31 திகதி பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த போது மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டுமென கூறி கடந்த வருடம் மாசி மாதம் 4 திகதி  கேப்பாபுலவு மாதிரிக்கிராம பிள்ளையார் ஆலயத்தில் சிவபூசை ஒன்றை ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த அவர் பிலவுக்குடியிருப்பு காணி விடுவிக்கப்பட்ட கடந்தவருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு பூர்விக வாழ்விடம் முழுமையாக விடுவிக்க வேண்டுமென கோரி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தார் அவரது போராட்டம் இன்று ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி சுதந்திர தினத்தை எதிர்த்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்

இந்நிலையில் நண்பகலை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முற்ப்பட்ட வேளை குறித்த இடத்துக்கு வந்த முள்ளியவளை பொலிசார் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது என்று தெரிவித்த நிலையில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளதோடு மக்கள் இராணுவமுகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டதோடு   திறந்து விடப்பட்டிருந்த கேப்பாபுலவு பிரதான வீதியை மூடிய இராணுவம் மக்களை காட்டு வழியாக மீண்டும் செல்ல நிற்ப்பந்தித்தது  

இதன் பின்னர் குறித்த இடத்துக்கு வந்த முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததனை தொடர்ந்து மக்கள் விடுவிக்கப்பட்ட காணியில் உள்ள முருகன் ஆலயத்துக்கு அண்மையில் இருந்து மீண்டும் அவர்களது போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

இதேவேளை இராணுவத்தினர் பூட்டிய பாதையை மீண்டும் திறந்து விட்டுள்ளனர் தற்போது குழப்பம் ஏதுமின்றி போராட்டம் தொடர்கிறது காணி கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென மக்கள் தெரிவிக்கின்றனர்