தலைவரே மட்டக்களப்பு வந்தது போன்று இருந்தது.முன்னாள் போராளி எல்லாளனின் கீறல் – 16”

0
1024

பாகம் 16

வணக்கம், நேசமுடன் அன்புறவுகளே ….
இது எல்லாளனின் பசுமைப் பதிவின் பதின் ஆறாவது கீறல் …

நந்திக் கடலில் கரைத்து முடித்தபோது கிடைத்திராத துயரம் – ஏமாற்றம் – கோபம் – இயலாமை எல்லாம் சேர்ந்து கலந்து கட்டிய மன நிலையோடுதான் இந்த கீறலில் தற்போது உங்களை சந்திக்கிறேன் உறவுகளே … எல்லாம் இந்த நம் அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி என் சுட்டுவிரல்கள் நீழவில்லை, மாறாக நம் தமிழ் சமூகத்தின் மீதும் முதல் தடவையாக ஒட்டுமொத்த விரல்களையும் நீட்டுகிறேன் – என் இனம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது? நம் இனத்தை வேரோடும் – வேரடி மண்ணோடும் பிடுங்கிப் புதைத்தவர்கள் எம் மத்தியில் எப்படி வரவேற்கப்படுகிறார்கள் .. ? நன்றி மறந்த சமூகமா நாம்? நமக்காக சாவினை தழுவிய அந்த “சந்தணப் பேழைகள்” மன்னிக்குமா நம்மை? இப்போதும் நம்மோடிருக்கும் முன்னாள் போராளிகள்தான் மன்னிப்பார்களா? நிச்சயம் அவர்கள் மனதில் ‘இந்த இனத்துக்காகவா …?’ என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.

மட்டக்களப்பு எப்போதும் நல்ல துணிச்சல் மிக்க – நேர்மை கொண்ட ஊடகவியலாளர்களை பிரசவித்துக் கொண்டே இருந்தது. இவர்களில் தம் எழுத்துக்கள் கொண்டு ‘சங்கநாதம்’ எழுப்பியவர்களில் நித்தி அண்ணன், தராக்கி சிவராம் அண்ணன், நிமலராஜன் அண்ணன் முக்கியமானவர்கள். தேவராஜாவும், இரத்தினசிங்கமும் உயிருடன் இருந்திருந்தால் இவர்களுடன் சேர்ந்து அவர்களும் இமயத்தை தொட்டிருப்பார்கள்.

இவர்களைப் பற்றி பின்னால் விரிவாக எழுதுவேன். மறக்கக் கூடியவர்களா இவர்கள் …?

சத்தியத்தின் முன்னால் நடுநிலைமை என்பது செல்லாது என்பதே இவர்களின் சிந்தனையின் செயல்வடிவமாக இருந்தது…
***

சென்ற கீறலில் குமரப்பாவின் மட்டக்களப்பு மீள் வருகை என குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதற்கு முன் ஊடகவியலாளர்கள் பற்றி கீறவுள்ளேன். தமது இனத்துக்காக ஊடகப் பணி செய்யும் போது பலரை எமது இனம் இழந்து இருக்கின்றது. அந்த வரிசையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தேவராசா எனும் ஊடகவியலாளர் 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி அக்கரைப்பற்றில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர், பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இவரது கொலையே கிழக்கு மாகாணத்தில் 1983க்கு பின் இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மட்டக்களப்பு பிரதேசத்தில் ஊடகவியாளராக வாழ்ந்து தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்து ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து அவர்களின் அரசியல் பணிகளில் பங்கெடுத்த ஒரு ஊடகவியலாளர் பற்றியும் கிற உள்ளேன்.

1980 களில் மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்துக்கான வீரகேசரி நிருபராக பணியாற்றிய  திரு சரவணமுத்து இரத்தினசிங்கம் என்பவர் பற்றியது. அவரை ஊடகச் செய்திகளில் வவுணதீவு நிருபர் என பிரசுரிப்பார்கள். தமிழீழ ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தாம் இருந்த நிலையிலிருந்து தமது பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். இதில் சிலர் தங்களுடைய அர்ப்பணிப்போடமைந்த முழுமையான பணியைச் செய்திருக்கின்றார்கள். இந்த வகையில் பார்க்கின்றபோது, மட்டக்களப்பில் 1980 களில் பிரபல்யமான பத்திரிகையாளர்களில் ஒருவரான நித்தியானந்தன் (நித்தி அண்ணன்), மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களையும் மற்றும் சரவணமுத்து இரத்தினசிங்கம் ஆகிய மூவரையுமே இம் மாவட்டங்களில் முதன்மையாகக் குறிப்பிடமுடியும். இந்த மூவரும் 1981ஆம் ஆண்டு கிழக்கில் உருவாக்கப்பட்ட கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள்.  திரு இரத்தினசிங்கம், அன்று அரசியல் பொறுப்பாளராக இருந்த பிரான்சிஸ் அண்ணனுடன் இணைந்து தமிழீழப் விடுதலைப் புலிகளுக்கு அரசியல் வேலைகள் செய்து கொண்டு இருந்த வேளையில், அவர் 01.03.1986 அன்று வவுணதீவில் வைத்து STF இனர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வீரச்சாவடைந்தார். இவரை புலிகள் ரிப்போட்டர் என்றே அழைப்பார்கள்.

இவர் இன்று இருந்திருந்தால் சுமார் 40 வருடங்கள் ஊடகத்துறையில் பணியாற்றிய பெருமையை பெற்றிருப்பார். இவரின் 31ஆவது ஆண்டு நினைவு, அஞ்சலி கடந்த (2017) ஆண்டு வவுணதீவு பிரதேச ஊடகவியலாளர்கள், மற்றும் வவுணதீவு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில்  நினைவேந்தல் நடைபெற்றது என்பதையும் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்…
***

அடுத்து தளபதி குமரப்பாவின் மட்டக்களப்பு மீள் வருகை.

தளபதி குமரப்பா, தளபதி அருணா இருவரும் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடி, அவரின் ஆலோசனைப்படி மீண்டும் திரும்பினார் குமரப்பா. நிர்வாகங்களில் மாற்றம் செய்யப்பட்டு அருணா அண்ணன் தளபதியாகவும் குமரப்பா மட்/அம்பாறை தாக்குதல் பிரிவுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அருணா அண்ணன் இந்தியாவில் இருந்து தான் வருவதற்கு முன் குமரப்பாவை மட்டக்களப்பு சென்று அவருடைய வேலைகளை ஒழுங்கு செய்யும்படியும் தான் தனது இங்கே உள்ள வேலைகளை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி வழியனுப்பி வைத்தார். குமரப்பாவும் சில போராளிகளுடன் பின்வரும் நவீன ரக ஆயுதங்களுடன் GPMG, LMG, 60mm  மோட்டார் உட்பட பல நவீனரக ஆயுதங்களுடன் மட்டக்களப்பு வந்து சேர்ந்தார். அடுத்தடுத்து ஆயுதங்களும் வந்துகொண்டிருந்தது. இவ்வேளையில் பயிற்சிக்கு சென்ற சில போராளிகளும் வந்து கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தான் பாரிய இழப்பொன்றைச் சந்தித்தனர் புலிகள். 31.03.1986 அன்று மூதூரில் இருந்து படகுமூலம் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை ஆயுதம் களுவன்கேணியில் இருந்து மயிலவெட்டுவனை நோக்கி ஒரு உழவு இயந்திரத்தில் கொண்டு வந்துகொண்டிருந்த போது திடீர் என கவச வாகனத்தில் வந்த  STF இனர் இவர்களை கண்டு விட்டனர். இதில் இரு பகுதியினருக்கும் கடும் சண்டை நடந்தது. மேலதிக படையினர் வந்து விட, இம் மோதலில் புலிகளின் சில ஆயுதங்களை படையினர் கைப்பற்றினர். இதில் வீரவேங்கை ஸ்ரார் என்றழைக்கப்படும் (வாரித்தம்பி பொன்னம்பலம், கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்), மற்றும் வீரவேங்கை விமல் என்றழைக்கப்படும் (பொன்னுத்துரை இராஜேந்திரன், கொம்மாந்துறை, மட்டக்களப்பு) ஆகிய இரு போராளிகளும் இச் சம்பவத்தில் வீரச்சாவடைந்தனர்.

அடுத்தடுத்து பல இழப்புக்களையும் இக்கால கட்டத்தில் புலிகள் சந்திக்க நேர்ந்தது !

வீரவேங்கை நடா (தங்கராசா நடராசா,  வலையிறவு)  02.04.1986 அன்று வலையிரவில் STF இனரின் தாக்குதலிலும்,

லெப்டினன்ட் புவிராஜ் (ரா.உதயராஜன், கல்லடி, மட்டக்களப்பு)  05.04.1986 அன்று கரவெட்டிப் பகுதியில் STF இனருடன் நடந்த நேரடி மோதலிலும்,

வீரவேங்கை தூர்த்தி (தம்பிப்பிள்ளை கருணாகரன், நொச்சிமுனை, மட்டக்களப்பு)  07.04.1986 அன்று நொச்சிமுனையில் STF இனர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டிலும்,

வீரவேங்கை  நிர்மலன் (குணரட்ணம் தனபாலசிங்கம், ஏறாவூர்), 21.04.1986 அன்று மட்டக்களப்பு குடும்பிமலையில் பள்ளத்துச்சேனையில் STF இனருடான நேரடிச் சமரிலும்,

வீரவேங்கை மதன் (அருள்நாயகம், வாகரை, மட்டக்களப்பு) 25.04.1986 அன்று  வாகரை வாழைத்தோட்டத்தில்  STF இனரின் சுற்றிவளைப்பின்போதும் வீரச்சாவடைந்தனர்.

இதே கால கட்டத்தில் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் கப்டன் (Captain) தரத்துடன் மட்டக்களப்பு வந்தடைந்தார். இவர் வரும்போதே மட்/அம்பாறை மாவட்ட புலனாய்வுத் துறைப் பொறுப்பாளராக தலைவரின் நியமனம் பெற்று  வந்திருந்தார். இவர் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற இனக் கலவரக் கோரத்தைக் கண்டு சினந்தெழுந்த இளைஞர்களில் ஒருவராக மூத்த உறுப்பினர் யோகன் (பாதர்) மூலம்  விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தியாவில்  புலிகள் நடத்திய  மூன்றாவது பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்றார். அதன் பின் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக பணிபுரிந்தார். இந்திய அதிகாரிகளால் இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட புலனாய்வு பயிற்சியில் புலிகள் சார்பாக பயிற்சி பெற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருணா அவர்கள் வந்தவுடன் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த நீலன், சிந்து ஆகியோரை சந்தித்து அவர்கள் புலனாய்வு வேலைகளுக்கு தயார்படுத்தி இருந்த போராளிகளை முதற்கட்டமாகவும், முகவர்களை இரண்டாம் கட்டமாகவும் சந்தித்து இன்னும் வேகமாக வேலைகள் நடைபெற அறிவுரைகளை வழங்கினார். இந்த முதல் சந்திப்பில் நானும் முதன் முறையாக கலந்துகொண்டு புதிய பொறுப்பாளராய் வந்திருந்த  கருணா அம்மானை சந்தித்தேன். அதிலிருந்து ஒரு பெரிய புத்துணர்வு. தலைவரின் மெய்பாதுகாவலனாய் இருந்து, தலைவரால் பயிற்றுவித்து அனுப்பப்பட்ட ஒருவர் எமக்கு வழிகாட்ட வந்துவிட்டார் என்று. இனம்புரியாத ஒரு உத்வேகம்… தலைவரே மட்டக்களப்பு வந்தது போன்று இருந்தது. காரணம் நாங்கள் யாரும் எங்கள் தலைவனை பார்த்திருக்கவில்லை.

அடுத்து பொட்டம்மான் மட்டக்களப்பு வந்து சேர்ந்தார். அது, இன்னொரு விதமான புத்துணர்ச்சி. அவரும் Beirut பகுதியிலே பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தங்கினார்.

* அடுத்து அருணா அண்ணன் இந்தியாவிலிருந்து பாக்குநீரனை வழியாக  இயந்திர படகு மூலம் தாயகம் நோக்கி வந்து கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது பற்றி கீறவுள்ளேன்…