தனுஸ்கோடி பிறேமினியின் 12வது நினைவு தினத்தையொட்டி மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்கள்.

0
291

மட்டக்களப்பு வெலிக்கந்தைப்பகுதியில் வைத்து 29.01.2006 இனம் தெரியாத ஆயுதக்குழுவினால் கடத்தி  கொலை செய்யப்பட்ட கிழக்குப்பல்கலைக்கழக கலைப்பிரிவின் இறுதியாண்டு மாணவியும், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கணக்காளருமான தனுஸ்கோடி பிறேமினியின் 12வது நினைவு தினத்தையொட்டி அவரின் மரணத்துக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், சுவரொட்டிகளும் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
கிழக்கு ஒன்றினைந்த தமிழ் பெண்கள் அமைப்பு எனும் பெயரில் இத்துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்றைய செய்தி

மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று  கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

 திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

வாகனம் ஒன்றில் வந்த ஆயுதம் தரித்த கடத்தல்காரர்கள், பணியாளர்கள் பயணித்த வாகனத்தின் குறுக்காக தங்களது வாகனத்தை நிறுத்தி 5 பேரைக் கடத்திச்சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் என்று கூறியபோதும் அவர்கள் எவ்வித ஈவிரக்கமுமின்றித் தாக்கப்பட்டு கண்களைத் துணிகளால் மூடி கதறக்கதற வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றனர்.

அவர்களுடன் பயணித்த ஏனைய பணியாளர்கள் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பதற்றத்திலும், அச்சத்திலும் யாருடனும் உடனடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பின்றி தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் கடத்தல்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள், கடத்தப்பட்டு நான்கு மணிநேரத்தின் பின்பே தப்பி வந்தவர்களால் தெரிவிக்கப்பட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவர்களில் நால்வர் தொடர்பான விவரம்:

1) சுரேந்திரன் (சிறுவர் இல்லங்களின் இணைப்பாளர்)

2) செல்வி.பிறேமினி (மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்காளார்

3) இரவி (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)

4) வசந்தன் (சிறுவர் இல்லங்களின் கணக்காளர்)

கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் தெரியவில்லை.