ஆன்மீகச்செயற்பாடுகளிருந்து விலகி பிரத்தியேக வகுப்புக்களில் அதிககவனம் கவலைக்குரியது -மாட்டு. அரச அதிபர்

0
356
(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி புகட்டும் மாணவர்களிடம் உடல்,உளவிருத்தி செயற்பாடுகள் குறைவடைவதனால் பரீட்சைப்பெறுபேறுகளின் அடைவுமட்டம் குறைவடைந்து செல்கின்றது.இதனை பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பாதுகாவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.அவ்வாறு கவனம் செலுத்தாதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விப்பெறுபேறுகளின்  அடைவுகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் -உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு இந்துக்கல்லூரியின் அதிபர் எஸ்.டீ.முரளிதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை(26.1.2018) பிற்பகல் 3.00மணியளவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அவர் தொடர்ந்து பேசுகையில் :- நான் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடைமையை பொறுப்பேற்று பங்குபற்றும் முதலாவது பாடசாலை இல்லவிளையாட்டுப்போட்டி இதுவாகும்.பாடசாலை நிருவாகம் அழைப்பு விடுத்தற்கு இணங்க இவ்விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்வது மனதுக்கு மகிழ்ச்சியைத்தருகின்றது.இப்பாடசாலையில் கல்விகற்றவர்கள் அனைவரும் தம் வாழ்விலே சிறந்த ஒழுக்கமிக்கவர்களாகவும்,உயர்பதவிகளில் அலங்கரிப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத்தருகின்றது.இவ்வாறு ஒழுக்கமிக்கவர்களாகவும்,உயர்பதவிகளில் அலங்கரிப்பதற்கான காரணம் விளையாட்டுப்போட்டியின் தார்ப்பரியமாகும்.
இப்பாடசாலையில் கடந்தகாலங்களில் விளையாட்டு வீரனாக செயற்பட்டதால் இன்று நான் அரசாங்க உயர்பதவியில் இருக்கின்றேன்.இது எனக்கு மகிழ்ச்சியைத்தருகின்றது.இன்று நமது மாவட்டம் அபிவிருத்தியிலும்,பௌதீகவளங்களுடன் காணப்பட்டாலும் கல்வி நடவடிக்கைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.அண்மைக்கால மட்டக்களப்பு மாவட்ட  பரீட்சைப்பெறுபேறுகள் திருப்திகரமாக இருந்தாலும் மாணவர்கள் உடல், உளவிருத்தி,ஆன்மீகச்செயற்பாடுகளில் விலகி பிரத்தியேகவகுப்புக்களில் அதிககவனம் செலுத்தப்படுகின்றது.இது கவலைக்குரிய விடயமாகவே நான் உணர்கின்றேன்.கல்விப்பெறுபேறுகளை பார்க்கும்போது அடைவுகள் மட்டம் அதிகரிக்காதமை மனவேதனையைத் தருகின்றது.
மாணவர்களுக்கு உடல்,உளம் என்பன ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.அத்துடன் மாணவர்கள் ஆன்மீகத்துடன் கல்விச்செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.இந்த மூன்று விடயங்களிலும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பாதுகாவலர்கள் கவனம் செலுத்தப்படவேண்டும்.கல்வி கற்கும் எம்முடைய மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல்,உளவிருத்தியில் பரிபூரணமாக கவனம் செலுத்தும்போது மாணவர்களால் பூரண மனிதனாக திகழமுடியும்.இந்தநாட்டின் அபிவிருத்திக்கு இந்தப்பருவத்திலே மனிதவளங்களை உருவாக்க முடியும்.இவ்வாறான மனிதவளங்களை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் கவனமெடுக்கவேண்டும்.நாளைய சமுதாயத்திற்குரிய நற்பிரஜையை உருவாக்குவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திடசங்கட்பம் பூணவேண்டும்.இப்பாடசாலைக்கு தேவையான அத்தனை வசதிகளையும் என்னால் செய்துகொடுப்பேன் எனத்தெரிவித்தார்.