மொழி இன்னுமொரு இனம் அறியமுடியாதபடி பிரிந்து கிடக்கின்றது– பேராசிரியர் மௌனகுரு.

0
425
ஒரு இனத்தின், பண்பாடு, மொழி, மூச்சு, போன்றவற்றை இன்னுமொரு இனம் அறியமுடியாதபடி மொழி பிரிந்து போய்க் கிடக்கின்றது. இதற்கு பாடசாலை மட்டத்தில் முதலாம் தரத்தில் இருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளையும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். 13 ஆம் வகுப்பு முடித்து மாணவர்கள் வெளியே போகும் போது, அவர்கள் 3 மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாகப் போக வேண்டும். அப்போதுதான் மொழி மூலமாக மற்றைய இனங்களை அறிவார்கள்.

என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர், சி.மௌனகுரு தெரிவித்துள்ளார். இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும், பரஸ்பர புரிந்துணர்வையும், ஏற்படுத்தும் நோக்கில் மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசலை செவ்வாய்க கிழமை (23)  இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசலையின் அதிபர் கே.தம்பிராசா தலைமையில் நடைபெற்ற இப்பொங்கல் விழாவில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள், அம்பாறை ரஜகல தென்ன மகாவித்தியாலய சிங்கள மாவர்கள், ஆசிரியர்கள், மட்.காங்கேயனோடை அல் அக்ஸா மகாவித்தியாலய இஸ்லாமிய, மாணவர்கள் ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சகோதர சிங்கள மற்றும், இஸ்லாமிய மாணவர்களை மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசலை மாணவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். பின்னர் அங்கு நடை பெற்ற பொங்கல் விழால் கலந்து கொண்டதோடு, மூவின மாணவர்களின் காலை நிகழ்வுகளும், இதன்போது இடம்பெற்றன. இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பேராசிரியர் மௌனகுரு…..
2500 வருட பழமையை தைப்பொங்கல் எடுத்துக் காட்டி நிற்கின்றது. 2500 வருடங்களுக்கு முன்னர் சிந்துவெளி நாகரீகம் என்ற திராவிட நாகரீகத்தில் ஒரு பெண் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. அச்சிலையின் வயிற்றிலிருந்து ஒரு செடி வளர்கின்றது. இந்நிலையில் அப்பெண்ணை தெய்வமாகவும் அதிலிருந்து வளர்ந்து வரும் செடியை வளமாகவும் கொண்டு வளத்தை வணங்கிய திராவிடப் பாரம்பரியத்தின், ஒரு அம்சமாகத்தான் இந்த பொங்கல் விழா பரிணமித்திருக்கின்றது.
19 ஆம் நூற்றாண்டில் மேற்கத்தேய ஓவியர் ஒருவர் சூரியனைப் பச்சையாக வரைந்திருந்தார். சூரியன் பச்சை நிறமல்ல ஆனால் அவர் பச்சை நிறத்தில் வரைந்தார். உலகத்தைப் பச்சையாக்குகின்ற தன்மை சூரியனுக்குத்தான் உண்டு அதற்காகத்தான் நான் சூரியனைப் பச்சையாக வரைந்தேன் என அந்த ஓவியர் விளக்கமளித்திருந்தார். இது கடந்த 100 வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தது. ஆனால் 2000 வருடங்களுக்கு முன்னர் சூரியனை பச்சை தருபவனாகப் பார்கின்ற பண்பு தமிழர்களிடத்தில் உண்டாகியிருக்கின்றது. மேலும் இப்பண்பு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சிங்களவர்கள் என உலகத்தில் எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்ளோ அங்கெல்லம் சூரினை வளத் தெய்வமாக வழிபட்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான பொங்கல் இடத்திற்கு இடம் வேறு பட்டிருக்கின்றன. பொங்கலுக்கு அடுத்தனாள் பட்டிப் பொங்கல் இடம்பெறுகின்றது. பொங்கல் மனிதர்களைப்போல் மிருகங்களையும் நேசிக்கின்ற ஒரு பண்பையும் எமக்குக் கொடுத்திருக்கின்றது. ஆகவே பொங்கல் விழா மிக முக்கியமானது. மதங்களைக் கடந்து, இனங்களை இணைத்திருக்கின்றது.
கடந்த 60 வருடங்களாக இன ஒற்றுமைக்காக நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். அண்மைக்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சிந்திரிக்கா பாண்டார நாயக்க குமாரதுங்க, மற்றும் கல்வியமைச்சர், உள்ளிட்ட பலரை பல தடவைகள் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அவர்கள் அனைவரும் இன நல்லிணக்கத்திற்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவரும் சிங்களத்தில் பேசினார்கள், எனக்கு சிங்களம் விளங்கவில்லை, எனக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரைத் தாருங்கள் எனக்கேட்டேன் தந்தர்கள். இறுதியில் நான் அவர்களிடத்தில் கோரிக்கைகளை முன்வைத்தேன். மொழிப் பிரச்சனை என்பது எனக்கு மாத்திரம் காணப்படும் பிரச்சனை இல்லை இதுதான் இன்று இலங்கையில் காணப்படும் பிரச்சனையாகும்.
நச்சு விதைகளை விதத்து விட்டு நல்ல மரங்களை நாம் எதிர்பார்க்க முடியுமாக என நான் ஜனாதிபதியிடம் கேள்வி கேட்டேன் அவர் மிகவும் ஆழமாக சிந்தித்தார்.
ஒரு இனத்தின், பண்பாடு, மொழி, மூச்சு, போன்றவற்றை இன்னுமொரு இனம் அறியமுடியாதபடி மொழி பிரிந்து போய்க் கிடக்கின்றது. இதற்கு பாடசாலை மட்;டத்தில் முதலாம் தரத்தில் இருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளையும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். 13 ஆம் வகுப்பு முடித்து மாணவர்கள் வெளியே போகும் போது, அவர்கள் 3 மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாகப் போக வேண்டும். அப்போதுதான் மொழி மூலமாக மற்றைய இனங்களை அறிவார்கள்.
மாணவர்களுக்கு மொழிக்கு ஊடாக பண்பாடுகளைக் கற்பிக்க வேண்டும். மூன்று இன மக்களும் அனைவரினதும் பண்பாடுகளை அறிந்திருக்க வேண்டும் அப்போதுதான் இன ஒற்றுமை சாத்தியப்படும். இந்த சாத்தியப்பாட்டை கடந்த காலத்திலிருந்து வந்த கல்வி அமைப்பு தரவில்லை. என அவர் இதன்போது தெரிவித்தார்.