கச்சக்கொடி பாலர் ஓடை அணைக்கட்டினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திறந்து வைத்தார்.

0
253

கச்சக்கொடி பாலர் ஓடை அணைக்கட்டினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குடு;பட்ட கச்சக்கொடி சுவாமி மலை கிராமத்தின் நீர்த்தட்டுப்பாட்டைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்குடன் அமைக்கப்பட்ட கச்சக்கொடி பாலர் ஓடை அணைக்கட்டினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் திறந்து வைத்தார்.

கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் பொறியியலாளர் என். சிவலிங்கம் தலைமையில் இத்திறப்புவிழா நடைபெற்றது.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில், 7.5 மில்லியன் செலவில் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டமானது கச்சக் கொடி சுவாமிமலை உள்ளிட்ட அருகிலுள்ள பிரதேசங்களுக்கு நீர் வழங்குதல், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில், கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமி மலை குடிநீர்த்தட்டுப்பாடு, விவசாய நீர்ப்பாசனப்பிரச்சினை, யானைப்பிரச்சினை, வருமானப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ளும் பிரதேசமாகும்.

கச்சக்கொடி – பாலர் ஓடை அடைக்கட்டு அமைக்கப்பட்டதன் மூலம் சுற்றயலிலுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் 80 மில்லியனுக்கும் அதிகமான செலவில் மாவட்டத்தின் பல்வேறு குளங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயம் சார் வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.