உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கிழக்கு மாகாண பெண் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்வெளியீடு

0
223

30ஆண்டு கால யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீண்டு சற்று மூச்சு விடும் தருணத்தில் சத்தங்கள் ஓய்ந்தாலும் எமது சமூக, பொருளாதார,கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களின் இருப்பு கேள்விக்குரியதென்று. இதை மீளக் கட்டியெழுப்புவது எப்படியென்ற சிந்தனைக்கு முன்பாகவே எமது பிரதேசத்தின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்று வேட்பாளர் விஜயலட்சுமி இராமச்சநதிரன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் கிழக்கு மாகாண பெண் வேட்பாளர்களும் ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டனர்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிடும் போதே மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளரான திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திருமதி விஜயலட்சுமி இராமச்சந்திரன்,

எமக்கென தனித்துவமானதொரு அரசியற் தளத்தினைப் போடவேண்டுமெனில்,கடந்தகால அரசியலுக்கு மாறுபட்ட விதத்தில் மக்களின் சமூக, பொருளாதார,கல்வி மற்றும் பண்பாட்டில் மேம்பாட்டினைக் கொணர்வதன் ஊடாகவே இதனை அடைய முடியும். அதனால்தான் பெண்களாகிய நாம் பொறுத்தது போதுமென்ற நிலையில் நீதியையும், நியாயத்தினையும் எமது பிரதேசத்தில் நிலைநாட்ட இம்முறை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட கட்சிகள் மூலமாகவும், சுயேட்சைக் குழுக்கள் மூலமாகவும் களம் இறங்கியிருக்கின்றோம்.

நீதிக்காகப் போராடத் தயாராகின்ற பெண்களாகிய நாம் இம்முறை புதியதொரு ஜனநாயகரீதியிலான அரசியற் பண்பாட்டைப் படைக்கப் போவது உறுதி என்று தெரிவித்தார்.

இதன்போது, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண்கள் தங்களது கருத்துக்களையும் பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திருமதி ஹ.இந்துமதி தலைமையில் நடைபெற்ற இந்த புதிய தேர்தல் பெண் வேட்பாளர்கள் விஞ்ஞாபன வெளியீட்டில் அரசியல் பங்களிப்புக்காக பயிற்சிகள் மூலம் தயார் படுத்தப்பட்டு கிழக்கின் மட்டக்களப்பு, திருகோணலை மாவட்டங்களின் உள்ளுராட்சி சபைகளில் அனைத்துக் கட்சிகள் சுயேட்சைக்குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர் பங்கு கொண்டிருந்தனர்.