உள்ளுராட்சி மன்ற தேர்தல் அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பாக அமையும் – வேட்பாளர் வை.யோகேஸ்வரன்

0
279

உள்ளுராட்சி மன்ற தேர்தலானது எமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பாக அமையும் என தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் வாகனேரி வட்டார வேட்பாளர் வை.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியில் வாகனேரி வட்டாரத்தில் போட்டியிடும் வகையில் தனது காரியாலயத்தினை வாகனேரி பிரதேசத்தில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் பல கட்சிகள் கூறிய வார்த்தைகளை கேட்டு நம்பி அவர்களுக்கு வாக்களித்து தோல்வியுற்ற நிலையில் காணப்படுகின்றோம். அத்தோடு எமது தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையில் விரக்தியோடு பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் எமது தேவைகளை உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சரியான தலைமைத்துவத்தை நாட வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலானது எமது அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பாக அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் உங்களது வாக்குகளை போலியானவர்களுக்கு வழங்கி இம்முறையும் ஏமாற்றமடையாமல் சரியான தலைமைத்துவத்தை தெரிவு செய்து மக்களோடு நின்று சேவை செய்யக் கூடிய உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டும்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வருகை தந்து பொய்யான வார்த்தைகளை கூறிச் செல்வார்கள். ஆனால் மீண்டும் அடுத்த தேர்தல் காலங்களில் மாத்திரம் வருபவர்களை நம்பாமல் உங்களோடு என்றும் சேர்ந்து நிற்பவர்களை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.