அடிப்படைக்கொள்கையாக சுயநலம் இருக்கக்கூடாது. சுயநலம் இருக்குமானால் எந்த விடயத்தையும் நாம் பொது நலத்துடன் செய்ய முடியாது.

0
264
கல்குடாவில் செயற்றிறனுள்ள தலைமைத்துவங்களை உருவாக்குவதே பிரதேச சபைத்தேர்தலின் இலக்கு என முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான எச்.எம்.எம்.றியாழ்  தெரிவித்தார்.

கடந்த 13.01.2018ம் திகதி சனிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒட்டகச்சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக பிரசார மாநாட்டில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
நாம் திட்டங்களை மேற்கொள்கின்ற போது எம்மிடம் ஒரு பொறிமுறை, கட்டமைப்பிருக்க வேண்டும். அந்தப்பொறிமுறை, கட்டமைப்பின் அடிப்படையில் செயற்படுகின்ற போது தான் சாதிக்க முடியும்.
அதே நேரம், ஒரு தனி நபர் சாதிப்பது, பணியாற்றுவது குறுகிய காலத்துக்கே சாத்தியப்படும். ஒரு பொறிமுறை, கட்டமைப்பை நிறுவுகின்ற பொழுது, அவைகள் செவ்வனே நடைபெறும். என்ன காரியமானாலும் இவ்வாறு தான் நான் செயற்படுகிறேன்.
எடுத்த எடுப்பில் எக்காரியத்தையும் நாம் செய்வதை விட்டு விட்டு, அதனைச் செய்வதற்குரிய பொறிமுறை, கட்டமைப்பை உருவாக்கி விடுவேன். சிலர் அதனை விளங்கிக் கொள்ளாமல் ஒரு காரியம் எடுத்த எடுப்பில் நடைபெற வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அதன் காரணமாக என்னையும் விமர்சிக்கிறார்கள்.
வினைத்திறனைக்கூட்டி விடயத்தைச் சாதிப்பதை நோக்காகக் கொண்டே செயற்பட வேண்டும். அதற்காக எம்மிடம் சில அடிப்படைக்கொள்கைகள் இருக்க வேண்டும்.
அதே நேரம், அடிப்படைக்கொள்கையாக சுயநலம் இருக்கக்கூடாது. சுயநலம் இருக்குமானால் எந்த விடயத்தையும் நாம் பொது நலத்துடன் செய்ய முடியாது.
ஆகவே, அரசியலை ஒரு சமூக சேவையாகவும் வணக்கமாகவும் கருதி அரசியலுக்கு வந்தவன் என்ற அடிப்படையில், அரசியல் தொடர்பான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்ற போது, அது என்னைச்சார்ந்து தான் இருக்க வேண்டும். நான் தான் அதனைச்செய்ய வேண்டும். அதன் மூலம் நான் பெயரெடுக்க வேண்டுமென்று எனது செயற்பாடுகளை நான் எச்சந்தர்ப்பத்திலும் அமைத்துக் கொள்வதில்லை.
அதே போலவே பிரதேச சபைக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்ற போதும் சில நிபந்தனைகளை என்னில் விதித்துச் செயற்பட்டேன்.
அதன் நோக்கம் வேட்பாளர்களாகத்தெரிவு செய்யப்படுகின்றவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக, கள்வர்களாக இருந்து விடக்கூடாதென்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தேன்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளராக இருக்கின்ற எனது தலைமையில் வேட்பாளர் தெரிவு இடம்பெறும் போது, முதல் தகைமை கள்வனாகவோ, சுயநலவாதியாகவோ, தனது பையை நிரப்பிக் கொள்பவனாகவோ அல்லது அந்த நோக்கத்தில் தேர்தலில் போட்டியிடுபவனாகவோ இருக்கக்கூடாது.
சமூக நோக்கம் கொண்டவனாக, வினைத்திறன் கொண்டவனாக, வேலை செய்யக்கூடியவனாக, சாதித்துக் காட்டக்கூடியவனாக இருப்பது அவசியமாகும். அதாவது மக்கள் பணி செய்யக்கூடியவனாக இருக்க வேண்டும்.
அத்துடன், கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுபவனாகவும்  அமைப்பாளராகிய எனக்கு விசுவாசமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறான தகமையுடையவர்களை ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆராய்ந்து கடும் கட்டுப்பாடுகளை முன்னிறுத்தியே வேட்பாளர்களைத் தெரிவு செய்தோம்.
அதே நேரத்தில், வாழைச்சேனை வேட்பாளர் தெரிவில் நான் ஒதுங்கிக் கொண்டதாக சிலர் தப்பபிப்பிராயம் கொண்டுள்ளனர். அவ்வாறல்ல. அப்பிரதேசத்தில் வேட்பாளர் தெரிவுக்கான முன்னாயத்தங்களைச் செய்து விட்டே வெளியிலிருந்து அவதானித்தேன்.
வாழைச்சேனையில் கட்சி மீது பற்றுக் கொண்டவர்கள் அதிகமென்பதால் வேட்பாளர் தெரிவிலும் குழப்ப நிலை நீடித்தது.
இந்நிலையில், ஒரு சிலர் கட்சியை விட்டு வெளியேறினாலும் அநேகமானவர்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
அதே நேரம், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் தெரிவில் ஒரு வித்தியாசமான முறையை நாம் கடைப்பிடித்தோம்.
எமக்கென ஒரு தனியான பிரதேச சபை இருப்பதால், இப்பிரதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் அதற்கான வேட்பாளர் தெரிவை நாம் வித்தியாசமான முறையில் நன்றாக ஆராய்ந்து மேற்கொண்டோம்.
அந்த வகையில், எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ள எந்த வேட்பாளரும் வெற்றி பெறமாட்டார். என்றோ தகுதியற்றவர் என்றோ எவரும் விரல் நீட்டிக்கூற முடியாது. அதை நான் சவாலாகவே விடுக்கின்றேன். அந்தளவு பொருத்தமானவர்களையே வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளேன்.
ஒரு அரசியல்வாதி நன்றாகப் பணியாற்றக்கூடிய எவரையும் தேர்வு செய்வதில்லை. குறிப்பாக எமது பிரதேசத்தில் அவ்வாறான நிலையேயுள்ளது. சுமார் பதினைந்து வருடங்களாக எமது பிரதேசத்தில் நல்ல தலைமைகள் உருவாக்கப்படவில்லை. அதற்கான எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்தப்பிரதேச சபைத்தேர்தல் முடிந்தவுடன் ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் அதனை அண்டிய தியாவட்டவான், பாலைநகர், நாவலடி போன்ற பிரதேசங்களிலிருந்து நல்ல சமூகத்தலைமைத்துவங்கள் வெளிக்கொண்டு வரப்படுவார்கள் என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதனூடாக எமது தலைவரின் பணிகள் இலகுபடுத்தப்படும். அவருக்கான பழுக்கள் குறைக்கப்படும்.
அவ்வாறு தேர்வு செய்யப்படும் தலைவர்கள் பிரதேசத்தையும் தாண்டி தேசியளவில் அரசியல் செய்யக்கூடிய தலைமைகளாக மிளிர்வார்கள் என்பது திண்ணம்.
தலைவர்களை நாம் உருவாக்கி எடுக்க வேண்டும். மரபு ரீதியாக கல்குடா முஸ்லிம் பிரதேசம் பெயர் சொல்லக்கூடிய தலைமைத்துவங்களைக் கொண்டிருக்கவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் விருப்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதுவே யாதார்த்தமும் கூட.
ஏறாவூர், காத்தான்குடி தலைமைத்துவங்களை நாம் கொண்டிருந்தோம். இது பிரதேசவாதமல்ல. கல்குடா பிரதேசமும் நல்ல தலைமைத்துவங்களைக் கொண்ட பிரதேசமாக உருவாக்கப்பட வேண்டும்.
சிறந்த குணநலன்களைக் கொண்ட செயற்பாடுள்ள தலைமைத்துவங்கள் எம்மால் உருவாக்கப்பட்ட வேண்டும். வெறுமனே நான் மாத்திரம் தான் இங்கே தலைமையாக இருக்க வேண்டுமெனும் சுயநல நோக்கம் அகற்றப்பட வேண்டும்.
இப்பிரதேச சபைத்தேர்தல் மூலம் இப்பிரதேசத்திற்கு தலைமை தாங்கக்கூடிய பிரதேசத் தலைமைகளை உருவாக்குவதே எனது பிரதான இலக்காகும்.
ஒவ்வொரு பிரதேசத்தையும் கட்டியெழுப்ப பொருத்தமான தலைமைத்துவங்கள் தேவை. எமது பிரதேசம் பல்வேறு தேவைப்பாடுகளைக் கொண்டுள்ளது. இடநெருக்கடி நிலவுகின்றது. இதற்கான தீர்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டிய பாரிய தேவை எமக்குள்ளது. அதற்கான நிலங்கள் எம்மை அண்டிய பிரதேசங்களில் காணப்படுகின்றது.
அதற்காக அப்பிரதேசத்திலும் பொருத்தமான தலைமை உருவாக்கப்பட வேண்டும். அதனூடாக அப்பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், எமது மக்கள் எதிர்நோக்கும் இடப்பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியும்.
அதற்குப்பொருத்தமான தலைமையை நான் கண்டு இப்பிரதேச சபைத்தேர்தலில் களமிறக்கியுள்ளேன். அவர் எனது நன்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கும் எனக்கு பக்கபலமாக இருப்பார் என நான் முற்றுமுழுதாக நம்புகிறேன்.
ஊழலற்ற ஒரு பிரதேச சபை உருவாகும் அதே வேளை, ஒரு நீண்ட காலத்திட்டத்தின் அடிப்படையில் நான் செயற்பட்டு வருகின்றேன். அதற்கான ஆராம்பத்தளமாகவே இத்தேர்தலைப் பயன்படுத்துகிறேன். இதனை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு விடயத்தை தனியொரு மனிதன் செய்யக்கூடாதெனும் நன்னோக்கிலே என்னைச்சுற்றி ஒரு சிலரை வைத்துக்கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறேன்.
இப்பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு திட்டங்களினால் எனக்கு பாராட்டுக்கள் வந்தாலும், இப்பணிகளில் முக்கால்வாசி பகுதியை சகோதரர் றபீக் அவர்கள் தான் இப்பிரதேசத்தில் முன்னெடுத்தார் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கின்றேன்.
அத்துடன், சகோதரர் சமீம், யசீர் அரபாத், முஹாஜிரீன் ஆசிரியர், சர்ஜூன் ஆகியோரும் ஆலோசகர்களாக இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா, பாக்கீர் ஆசிரியர் ஆகியோரும் எனக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டு வருகின்றனர்.
இதுவொரு சமூக மேம்பாட்டுக்கான போராட்டமென்பதால் எனது தாயாரின் வேண்டுகோளில் எனது சகோதரர் பாக்கீர் ஆசிரியர் எந்தவித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல், தனது தொழில்களையும் விட்டு விட்டு உதவி ஒத்தாசையாக இருக்கிறார்.
அத்துடன், மேலும் மாற்று அணியிலிருந்த சகோதரர் ஹலால்தீன், அகீல் டயர் கடை உரிமையாளர் நியாஸ் ஹாஜி போன்றோரும் எம்முடன் எமது பயணத்தில் இணைந்துள்ளனர். அதனை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். மென்மேலும் இளைஞர்கள் எம்மோடு இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
ஏனென்றால், எங்கும் எதிலும் தனி மனித செல்வாக்கு இருக்கக்கூடாது. தனி மனிதனின் கைக்குள் அதிகாரங்கள் குவிகின்ற போது, பல்வேறு உதாசீனங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே உணர்கிறேன்.
எமது பிரதேசமும் சுமார் பத்து பன்னிரெண்டு ஆண்டு காலம் ஒரு தனி மனிதன் கைகளுக்குள்ளே தனி மனிதனின் அரசியல் விளையாட்டு மைதானமாகவே இருந்து வந்திருக்கின்றது. அது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்டதன் விளைவு தான் எமது தேசியத்தலைவரின் ஒதுக்கீட்டில் நூறு மில்லியன் அபிவிருத்தித்திட்டம், 1350 கோடி ரூபாய் சுத்தமான குடிநீர்த்திட்டம், அவைகளுடன் இணைந்ததான திட்டம் தான் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஓட்டமாவடி பிரதேச சபையை நாம் கைப்பற்றுவதற்கான போராட்டம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதில் எனது எந்த சுயநலமும் இல்லை. எந்தச்சந்தர்ப்பத்திலும் சுயநலத்தை முன்கொண்டு வரப்போவதுமில்லை. இன்னொருத்தன் தலைவனாகி என்னை முழுங்கி விடுவான். என் மீது சவாரி செய்து விடுவான் என்று அச்சப்படப்போவதுமில்லை.
இறைவன் எதை யாருக்கு நாடுகின்றானோ அதே தான் நடக்கும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து வாழ்பவன். எனது சிறுபராயம் முதல் எவர் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது எனும் இறுக்கமான கொள்கையுடன் பயணிப்பவன் நான் என்பதை என் முன்னால் கூடியிருக்கும் இளைஞர் சமூகத்துக்கு இந்த பொன்னான சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதன் வெளிப்பாடு தான் இன்று நல்லவர்கள் வேட்பாளர்களாக முன்வந்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் பிரதேச சபையினை நாம் ஏன் கைப்பற்ற வேண்டுமென்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தேவையுள்ளது.
இப்பிரதேச மக்கள் முஸ்லிம் காங்கிரசையும் அமைப்பாளரையும் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை தலைமைத்துவத்திற்கு காட்ட வேண்டிய கட்டாயத்தேவையுள்ளது. அதனூடாக மென்மேலும் அபிவிருத்திகளை இப்பிரதேசத்திற்கு என்னால் கொண்டு வர முடியும்.
அதே வேளை, எம்மை ஆதரித்த மக்களுக்கான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து தர வேண்டிய நிர்ப்பந்தந்தை என்னால் தலைவருக்கு வழங்கவும் முடியும். வெறுங்கையுடன் பொய் தலைவரிடம் அபிவிருத்திகளைத் தாருங்கள் என்று கேட்க முடியாது. உங்களின் முழு ஆதரவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
தைரியமாக போய் தலைமையிடம் உங்களுக்கான அபிவிருத்தி, உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கான முழு அங்கீகாரத்தையும் இப்பிரதேச சபையை வென்றெடுப்பதன் மூலம் எனக்கு வழங்குங்கள்.
நீங்கள் எனக்கு வழங்கும் அதிகாரம், ஆதரவூடாகவே உங்களின் தேவைகளை தலைமையிடம் தைரியமாக எடுத்துச் சென்று கேட்டுப்பெற முடியும்.
அத்தோடு, எமது ஓட்டமாவடி பிரதேச சபை பாரிய வருமானமுள்ள பிரதேச சபையாகும். கடந்த காலங்களில் இப்பிரதேச சபை மூலம் கிடைக்கப்பெற்ற வருமானங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எமது அணியினர் தெளிவுபடுத்தியுள்ள அதே வேளை, அவரது தலைமையின் கீழ் அவரது கட்சி சார்பாக நியமிக்கப்பட்ட தவிசாளரே ஊழல் செய்துள்ளதை அதில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களே தெளிவாக பத்திரிகைகளுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரவித்திருந்தார்.
இதை நாம் சொல்லவில்லை. அவரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு பாரிய வருமானமுள்ள பிரதேச சபையை மக்களுக்கு பயனுள்ளதாக நடாத்த வேண்டிய பாரிய பொறுப்பு எம்மீதுள்ளது. அப்படியானால், அது நல்லவர்களின் கைகளுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அந்தச்சபையில் நானும் ஒரு அங்கமாக இருந்து இதனை செவ்வனே செய்யத் தயாராகவுள்ளேன்.
கடந்த காலங்களில் இப்பிரதேச சபை மூலம் கிடைக்கப்பெற்ற மக்களின் வரிப்பணத்தில் கடந்த காலத்தில் பிரதியமைச்சரின் ஆசியுடன் நியமிக்கப்பட்ட தவிசாளரினால் ஊழல் இடம்பெற்றுள்ளதை அவரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
தமது பைகளை நிரப்பிக் கொள்ளவும், தனது ஊழலை மறைத்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் மீண்டும் பிரதியமைச்சருடன் இணைந்து களத்தில் குதித்து நல்லவர் போன்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு தக்க பாடத்தை எதிர்வரும் தேர்தலில் மக்கள் புகட்ட வேண்டும்.
இவர் முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகிச்சென்றதை மனமார வரவேற்கின்றேன். இவ்வாறான ஊழல் பேர்வழிகளை இணைத்துக் கொண்டு ஊழலற்ற பிரதேச சபையை எம்மால் உருவாக்க முடியாது. அந்த பழியிலிருந்து நாம் காப்பற்றப்பட்டுள்ளோம்.
முன்னாள் தவிசாளரால் தற்போது சொந்த வட்டாரத்திலேயே அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதுகால வரையும் இப்பிரதேச மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையை, அமானிதத்தை வைத்துக்கொண்டு அரசியல் வியாபாரம் நடாத்தியுள்ளார்.
அத்துடன், தனது சொந்த பொருளாதாரத்தைப் பெருக்குவதிலும் மகனின் போதை மாத்திரை வியாபாரத்திற்கு அரணாகவும் செயற்பட்டுள்ளாரே தவிர தனக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன சேவைகளைச் செய்து கொடுத்து சாதித்துள்ளார்?
மக்களின் தனக்கு வழங்கிய ஆணையைப் பயன்படுத்தி கடந்த தேர்தல்களில் பிரதியமைச்சர் அமீர் அலியிடம் பணம் பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு வாக்களித்த இப்பிரதேச மக்களுக்கு என்ன சேவையை அவர் செய்துள்ளார். என்பதை மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது.
இவ்வாறானதொரு ஊழல் பேர்வழியை எதிர்காலத்திலும் இப்பிரதேச சபையின் தவிசாளாராக்க வேண்டுமா? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இப்பிரதேச சபையினை வென்றெடுப்பதனூடாக எமது பிரதேசத்துக்குத் தேவையான அபிவிருத்திகளை நாம் மேற்கொள்ளும் அதே வேளை, நாம் இழந்து போயுள்ள உரிமைகள், நிலங்கள் என்பவற்றையும் மீட்டெடுக்க முடியும்.
இதுவரை தீர்க்கப்படாமலிருக்கும் பாரிய காணிப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது தொடர்பில் சகல மேடைகளிலும் நான் பேசி வருகின்றேன். அதனை நாம் மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், வாழைச்சேனை பிரதேச செயலகம், பிரதேச சபை ஆரம்பிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் கோவைகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான எமது தேசியத்தலைவரின் ஒத்துழைப்பு இவ்விடத்தில் நன்றியுடன் நினைவுகூரத்தக்கது.
பொது மக்களுக்குத் தெளிவொன்றை வழங்க வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது. குறித்த பிரதேச செயலகம், சபைக்கான எல்லை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலைத்தீர்த்து, குறித்த பிரதேச சபையினை நிறுவிக்கொள்ள வாய்ப்பாக அதன் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளத் தேவையான முன்னெடுப்புகள் இதுவரை இடம்பெற்றுள்ளது. அவைகள் நிறைவுறும் போது, ஏனைய முன்னெடுப்புகள் மூலம் அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எனக்கான அரசியல் அங்கீகாரத்தினை இப்பிரதேச சபையினை வென்று தருவதனூடாக மக்களாகிய நீங்கள் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரம் எமது ஓட்டமாவடி பிரதேசத்துக்கு உரித்தான ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை சட்டவிரோதமாக இழந்துள்ளோம். இதனூடாக நாம் எமது விவசாய. மீன்பிடி, மேய்ச்சல், குடியிருப்புக்காணிகளையும் இழந்துள்ளோம்.
அதனையும் நாம் மீட்டெடுக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது. அதனை ஒரு வித்தியாசமான கோணத்தில் கொண்டு சென்று நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளது. அதற்கான அங்கீகாரமாக இப்பிரதேச சபையின் வெற்றி தங்கியுள்ளது.
இன்று வாழும் நாம் இவ்வாறே வாழ்ந்து விட்டு போய் விடலாம். எமது எதிர்கால சந்ததிக்கு பாரிய அச்சுறுத்தல், சவால் நிறைந்து காணப்படுகின்றது.
போதிய குடியிருப்புக்குத் தேவையான காணித்தேவையுள்ளது.
இதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், இப்பிரதேச சபையினது அதிகாரத்தை எனக்கு வழங்கும் சந்தர்ப்பத்தில் அந்த அதிகாரத்தை வைத்து நீதி வழி போராடி அதனை மீட்டுத்தருவதற்கு எனது சொந்த பணத்தைச் செலவு செய்யவும் தயாராகவுள்ளேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதியுடன் கூறிக் கொள்கின்றேன்.
அதே நேரம், இப்பிரதேசத்தில் எஞ்சியுள்ள காணிகளுக்கு இப்பிரதேச அரசியல்வாதியினால் இடம்பெறும் அநியாயங்கள் தொடர்பில் பல்வேறு ஆதாரப்பூர்வமான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
அதிகாரத்திலுள்ள ஒரு தனி மனிதனுக்கும் அந்த தனி மனிதன் சார்ந்த குடும்பத்தினருக்குமே இப்பிரதேச ஏழை மக்களுக்குரிய காணிகள் உரித்துடையதாக மாறி வரும் ஒரு அவல நிலை இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது.
இது எமதுசமூகத்தின் எதிர்காலச்சந்ததிக்கு உரித்தான காணிகளை நாம் மீட்டெடுக்க வேண்டிய தேவையுள்ளது. நாம் இவ்வாறான இழிவான செயல்களில் ஈடுபடப்போவதில்லை.
இவ்வாறான சமூக நலச்செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க நீங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி எமது பொன்னான வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தை எனக்கு வழங்கி, எமது உரிமைகளை வென்றெடுக்க உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டார்.
ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒட்டகச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக விழாவில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.