தவறிழைப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனை

0
373

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பினை ஏற்படுத்தும் சகலருக்கும் எந்தவித வேறுபாடுகளும்மின்றி உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான பின்னணி உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை, தியசென்புர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில்,
தவறிழைக்கும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும். ஊழல், மோசடிகளின்றி மக்களை நேசிக்கும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க உறுதியுடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை அவ்வண்ணமே நிறைவேற்றுவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டதுடன், விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைக்க முடிந்தமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

வறட்சி நிலைமைகளை எதிர்நோக்கும் வகையில் தமது விவசாய நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்வதற்கான வழிகாட்டல்களை விவசாயிகளுக்கு வழங்கி பெரும்போகம் சிறுபோகம் தொடர்பான புதிய பயிர்ச்செய்கை செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை, இரத்தினபுரி பிரதேசங்களிலிருந்து கடலுடன் கலக்கும் அளவில்லாத நீரை வடக்கிற்கும் வடமத்திய மாகாணத்திற்கும் குழாய் மூலமாக கொண்டு செல்வதற்கான செயற்திட்டமும் உருவாக்கப்படுமென்று கூறினார்.

 

இந்த நிகழ்வில் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பிரதேசமக்கள் கலந்துகொண்டனர்.