தமிழினமே தமிழை அழிக்கும் துர்ப்பாக்கியம்

0
553

வயிரமுத்து துசாந்தன்

‘செம்மொழி’ அந்தஸ்து கொண்டது எம் ‘தமிழ்மொழி’ என்கின்ற போது, தமிழ்மொழியை பேசுகின்றவர்கள் அதன்பால் பெருமை கொள்கின்றனர், மகிழ்ச்சி கொள்கின்றனர். அவ்வாறு பெருமிதம் கொள்வதில் அர்த்தமுள்ளது உண்மைதான். உலகிலே பல ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ள போதும், ஆறு மொழிக்கே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான் தமிழினம் பெருமையுடன் கூடிய விருப்பும், மகிழ்ச்சியும் கொள்வதோடு தலைநிமிர்ந்து தம் மொழியைக் கூறுகின்றனர். ஆனாலும் இந்த நிலைத்திருப்புக்கு தமிழ்மொழி நிலைக்குமா? என்பதுதான் இன்று வினாவாக எழுந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கதான் செய்கின்றன. அழிவடைந்து செல்லும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்று கூறுகின்ற போதுதான் இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.
தமிழ்மொழி அழிவடைந்து செல்கின்றதென்பது உண்மையா? என்பதனை தமிழ் மொழியை பேசுகின்ற அனைவரும், அவர்களிடத்து உள்ளக் கிடக்கையில் கேட்க வேண்டிய முதற் கேள்வியாக உள்ளது. ஏனெனில் சமீப காலமாக தமிழ்மொழி பேசுகின்ற ஒவ்வொருவருமே தமிழை அழித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழர்களினாலேயே தமிழ்மொழி அழிந்து கொண்டிருக்கின்ற நிலை ஒருபக்கமாக இருந்தாலும் கூட, மறு புறம் தமிழ்மொழி சரியான உச்சரிப்புக்களோடு எழுதப்படாமல் அந்தஸ்து இழக்கப்படுகின்றது. இலங்கை நாட்டில் தமிழ்மொழியும் அரசகரும மொழியாக இருக்கின்றபோதும், அரச உட்பட அனைத்து அலுவலங்களிலும் அதற்கான முழுமையான அந்தஸ்து வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இன்றும் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கு, தமிழ் பிரதேசங்களிலே சகோதரமொழியில் எழுதப்பட்ட குற்றப்பத்திரம் வழங்கப்படுகின்றமை இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.
நாம் ஒரு விடயத்தில் குற்றம் காணுகின்ற போது, நாம் அந்த விடயத்தில் ஒழுக்கமானவர்களாக இருக்கின்றோமா என்பதனை சிந்திக்க வேண்டும். ஏனெனில் தமிழை மற்றவர்கள் பல சந்தர்ப்பங்களில் கேவலப்படுத்துகின்றனர் என நாம் கூறிக்கொண்டிருக்கின்றோம். அவற்றினை தட்டிக்கேட்க வேண்டும். ஆனால் நாம் அதனை செய்கின்றோமா? அதனால் எம் மொழியை காப்பாற்றுகின்றோமா? என்பவை குறித்தும் அவதானிக்க வேண்டிய நிலை இருக்கின்றது. குறிப்பாக தமிழ்மொழியை பேசுகின்றவர்களே தமிழ்மொழியை அழிக்கின்ற நிலை இலங்கை நாட்டிலே ஏற்பட்டு வருகின்றது. அவை தொடர்பிலேயே இக்கட்டுரை ஆராய்கின்றது.
பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுதலில் இருந்து கடைக்கு பெயர் வைக்கும் வரைக்கும் தமிழ், தமிழ்மொழி பேசுபவர்களினால் அழிக்கப்பட்டு வருகின்றமையை நாம் கண்கூடாக பார்த்து வருகின்றோம். தமிழ்மொழி பேசுபவர்கள் அன்றாடம் பேசும் வார்த்தைகளிலிருந்து, எழுதும் சொற்கள்வரை வேற்றுமொழி கலந்தே பிரயோகிக்கின்றனர். தமிழ்மொழியின் அழிவுக்கு பெரும்பாலும் ஆங்கில மொழியின் ஆதிக்கம்தான் காரணமாகலாம் என்பதனை தற்கால வார்த்தைப் பிரயோகங்களும், எழுத்துப் பயன்பாடும் நிரூபணமாக்குகின்றன.
இலங்கை நாட்டிலே சிங்களமொழியையும், தமிழ்மொழியையும் பேசுகின்றவர்களே பெரும்பான்மையாகவும் ஒருசிலர் வேறுமொழிகளை பேசுகின்றவர்களாக இருக்கின்றபோதும் ஆங்கிலம் என்ற மொழியின் பயன்பாடு அவசியமானதுதானா? என்ற வினா சிலரிடத்தில் எழுகின்றது. ஏனெனில் அதிகளவில் ஆங்கிலத்திலே தரவுப் படிவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலமும் சர்வதேச மொழி ஆதலால் அம்மொழி அவசியம் என்ற நிலையை இலங்கை நாட்டிலும் உருவாக்கியிருக்கின்றனர். சர்வதேசத்தில் ஆங்கிலமொழியின் ஆதிக்கம் வேரூன்றி இருந்தாலும், அதனை நாம் அவசியம் பின்பற்ற வேண்டுமா? என்ற வினாவும் தற்சமயம் எழுந்திருக்கின்றது. பல மொழிகள் இந்த உலகத்திலே பேசப்பட்டாலும் அவற்றினை அறிந்து வைத்திருப்பது எமது அறிவுக்குச் சிறந்தது. ஆனால் இலங்கையில் ஆங்கிலம், மொழியாக பார்க்கப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலும் மக்களிடத்தில் கட்டாயமானதொன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளை விட குறித்த சில விடயங்களில் ஆங்கில மொழிக்கே கூடிய அந்தஸ்து வழங்கப்படுகின்றது என்று கூறமுடியும். பல்கலைக்கழக கற்பித்தல் தொடக்கம், காட்சிப்படுத்தப்படும் சாதாரண பதாதைகள் வரை ஆங்கிலத்திலே இடப்பட்டிருக்கின்றமையை சுட்டிக்காட்டலாம்.

 
நவீன யுகத்தில் சர்வதேச மொழியான ஆங்கில மொழியை கட்டாயம் அனைவரும் கற்கவேண்டிய நிலை உருவாகியிருக்கின்றமை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். இன்று நவீனத்துவ கண்டிபிடிப்புக்களுக்குள் அனைவரும் மூழ்கி இருப்பதனால், அக் கண்டுபிடிப்புக்குள் ஆங்கிலமொழியே செல்வாக்கு பெறுவதினால், குறிப்பாக கணினி தொடக்கம் சாதாரண கைபேசிகள் வரையிலாக சமூகவலைத்தளங்கள் வரை ஆங்கிலமொழியிலேயே பெரும்பான்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் அனைவரும் ஆங்கிலத்தினை பயன்படுத்த வேண்டிய தேவை உருவாகியிருக்கின்றது. அவ்வாறான தேவைக்காக மட்டும்தான் ஆங்கிலத்தினை கற்கின்றோமா? என்றால் இல்லை என்ற வினாவும் எழத்தான் செய்கின்றது. ஆங்கிலம் கற்றால் நாகரீகம், தமிழில் பேசினால் அநாகரீகம் என்று பார்க்கின்ற சூழலைக் கூட தமிழ்மொழி பேசுபவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இவ்வாறானவர்கள் தமிழினத்தில் இருப்பது, பிறப்பது என்னவோ வேதனையான விடயம்தான். இதற்கும் விதிவிலக்கானவர்களும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. தாய்மொழியே எம்மொழி, நல்மொழி, நாகரீக மொழி என கூறி, பல மொழிகளை அறிந்து வைத்திருந்தாலும் கூட தமிழ்மொழியை மட்டுமே பேசுகின்ற பலர் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றமை தமிழ்மொழியை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு ஊன்றுகோல் என்றே குறிப்பிடலாம். தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இருவர் தம்மொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசி அவர்கள் மகிழ்ச்சி கொள்கின்ற வேதனையான சம்பவங்களும் எம்மத்தியில் இடம்பெறத்தான் செய்கின்றன. இது குறித்து அவர்கள் வெட்கித் தலைகுனியாமல் மகிழ்ச்சி கொள்வது கசப்பான தொன்றுதான். பல ரூபங்களில் தமிழை தமிழர்கள் அழித்துக் கொண்டிருந்தாலும் இந்தவாரம், வர்த்தகர்கள் தமிழில் பெயர் சூட்டாது, தமிழை அழித்துக் கொண்டிருக்கின்ற நிலை தொடர்பில் அவதானம் செலுத்துவோம்.

 
தமிழர் பண்பாட்டில் குழந்தை ஒன்று பிறந்தால், நாள், நட்சத்திரம், இராசி பார்த்து தமிழில் பெயர் சூட்டிய காலம் ஓடி ஒழிந்துள்ளமை போன்று, பால்காய்ச்சி, வழிபாடாற்றி, உறவினர்களை அழைத்து தமிழில் பெயர் சூட்டி திறக்கப்பட்ட வியாபார நிலையங்கள் மறைந்து, தமிழ்பேசும் மக்கள் வாழ்கின்ற இடங்களில் ஆங்கிலமொழியில் பெயர் வைக்கின்ற கலாசாரம் இலங்கை நாட்டிலே உருவாகி வருகின்றது.

 
வன்பொருட்கள் விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையங்களுக்கு ஹாட்வெயார் என்றும், விற்பனைக்கூடம் என்பதற்கு பதிலாக ஸ்ரோர் என்றும், பல்பொருள் விற்பனை நிலையம் என்பதற்கு பதிலாக மல்ரிசொப் என்றும், உணவகம் என்பதற்கு பதிலாக ஹோட்டல் எனவும், நகையகம் என்பதற்கு பதிலாக ஜூவலரி எனவும், தொலைபேசி விற்பனை நிலையம் என்பதற்கு பதிலாக மொபைல்சொப் எனவும், தொடர்பு நிலையம் என்பதற்கு பதிலாக கொமினிகேசன் எனவும், ஆடை விற்பனை நிலையம் என்பதற்கு பதிலாக டெக்ஸ் ரெய்ல்ஸ் எனவும், ஆடம்பர விற்பனை நிலையம் என்பதற்கு பதிலாக பென்சி ஹவுஸ் எனவும், பழுதுபார்த்தல் நிலையத்திற்கு பதிலாக சேவிஸ் சென்றர் எனவும், வெதுப்பகம் என்பதற்கு பதிலாக பேக்கரி எனவும், புத்தக நிலையத்திற்கு பதிலாக வுக் சென்றர் எனவும் தமிழ் மொழிபேசும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு பெயர் சூட்டுகின்றனர். இதுமட்டுமில்லாது இன்னும் பல தமிழ்மொழியில் அல்லாத ஆங்கிலச் சொற்களைக் கொண்டு தமிழ் எழுத்தினால் எழுதி பெயர் சூட்டியிருக்கின்றனர். ஆங்கிலப்பதத்தில் இதனை குறிப்பிட்டு அதனை தமிழ் எழுத்தினாலும் இப்பெயர்களை சூட்டியுள்ளமை வேதனையானதொன்றுதான். இதனால் தமிழ்ப் பதம் என்பதே தமிழினத்துக்கு மறந்துபோகின்றதல்லவா? இதனை யாரும் சிந்தித்துப் பார்த்ததுண்டா?
வியாபார நிலையங்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, இவ்வாறு ஆங்கில எழுத்தினால் எழுதுவது பொருத்தமானது. அதைவிடுத்து, ஆங்கில பத வடிவத்தினையே தமிழ் எழுத்தினால் எழுதுவது பொருத்தமானதா? அவ்வாறு எழுதுவதன் மூலம் அங்குவருகின்ற மக்கள் அதனையே வாசிக்கின்றனர். இதனால் வன்பொருள் நிலையம் என்றால் எது என்று தமிழில் தெரியாத சமூகமாக தமிழ்மொழிபேசும் சமூகம் வளர்க்கப்பட்டு, ஹாட்வெயார் என்றால், இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் நபர்களை உருவாக்கியிருக்கின்றனர். இதற்கு வர்த்தகர்கள் விட்ட தவறே காரணமாகவும். தமிழ்மொழியின் அழிப்புக்கு வர்த்தகர்களும் ஒரு காரணம் என்பதே இதன்மூலம் புலப்படுகின்றது. அதேவேளை ஒருசில வர்த்தகர்கள் தமிழ்ப் பெயர்களை சூட்டியுள்ளமையும் வரவேற்கதக்க ஒன்றுதான். மட்டக்களப்பு மாவட்டம் பெரும்பான்மையாக தமிழ்பேசுபவர்களை கொண்டிருந்தாலும், கிராப்புறங்களில் இருக்கும் சிறு கடையிருந்து, நகர்புறங்களிலே உள்ள பெரிய வர்த்தக நிலையங்கள் வரைக்கும் தமிழில் பெயர்சூட்டாது, ஆங்கிலத்திலே பெயரை சூட்டியிருக்கின்றனர். இதனால் தமிழில் ஆங்கிலம் அதிகம் கலக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்சொற்கள் அதன் அர்த்தத்தை இழந்து மறுபுறம் அவை மறைக்கப்பட்டுவருகின்ற துர்ப்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காலம் கடந்தால் குறித்த சில காலங்களிலேயே இலங்கையிலிருந்து தமிழ்மொழி அழிந்து, தமிழ்பேசுகின்றவர்கள் அனைவரும் வேற்றுமொழிகள் பலவற்றினை உள்வாங்கி வேறொரு மொழியாக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையேற்படும்.

 
ஆரம்பகால தமிழ்புலவர்கள் பயன்படுத்திய தமிழ்சொற்கள் மருவி இன்று மிகக் குறைந்தளவிலான தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில், விற்பனை நிலையங்களுக்கும் ஆங்கில பெயர்களை சூட்டி அழகு பார்க்கின்ற நிலையினால், எதிர்கால குழந்தைகளுக்கும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் குறைவான தமிழ்சொற்களுடன் ஆங்கிலச் சொற்களையும் கலப்படம் செய்து திணிக்கின்ற சமூகமாக தற்போதைய சமூகம் மாறிவிடக்கூடாது. தற்போதைய சூழலிலே விற்பனை நிலையங்களுக்கு தமிழ்பெயர்களை வைத்தால் பலரின் பழக்கத்திற்கு உடனடியாக வருவது என்பது கடினமானதொன்றாக இருக்கலாம். இதற்கு ஆங்கிலத்தினை இவ்வாறு சூட்டியமை காரணமாகவிருந்தாலும், விட்ட தவறினை உணர்ந்து, தமிழில் அனைத்து வர்த்தகர்களும் பெயர்சூட்டுவதற்கு முயற்சி செய்தால் எம் தாய்மொழி தமிழ்மொழியை காத்து வளர்க்க முடியும். அதேபோன்று சிறந்த தமிழ்சொற்களும் எம்முடன் இருந்து பிரிந்து செல்லாது உறாவடிக்கொள்ளும். தமிழை தமிழரே அழித்தார்கள் என்ற அவப்பெயரை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளாதவர்களாக இன்றே மாற்றத்திற்காக முயற்சிக்க வேண்டும். இதன்மூலமே எம் தாய்மொழியின் இருப்பை தக்கவைக்க முடியும்.