நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய்.எம்.ஏ.சுமந்திரன்M.P

0
424

ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று மாலை நடந்த, யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என்று கூறப்பட்டுள்ளது.

‘ஏக்கிய இராஜ்ய’ என்பது ஒற்றையாட்சி அல்ல.  அது ஒருமித்த நாடு என்றும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது.

ஒருமித்த நாடு என்பதற்கே நாங்கள் இணங்கினோம். ஆனால் நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டோம் என ஊடகங்கள் பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றன.

ஊடகங்கள் பொய் விளம்ப கூடாது என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க என்னை பார்த்து சிரிப்பது போலவும், மக்களை பார்த்து ஏளனம் செய்வது போலவும் ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன.

தாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்கக் கூடாது.

மேலும், சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றிபெற முடியாது  என்று சொல்கிறார்கள். ஊடகங்களுக்குப் பயந்து நாங்கள் மக்களிடம் பொய் சொல்ல இயலாது.

எவ்வளவு பலமான ஊடகங்களாக இருந்தாலும் நாங்கள் மக்களிடம் சென்று உண்மையைத் தான் சொல்வோம். பொய் சொல்லும் ஊடகங்களை பகைத்தே நாங்கள் தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.

70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் சொல்லணா துயரங்களை சந்தித்தார்கள்.

அந்த துயரங்களுக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்து கொண்டிருக்கையில், சில அரசியல் தரப்புக்களைப் போல் ஊடகங்களும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களை ஏற்காத ஒரு விடயம் கூட இடம்பெறவில்லை. எனவே ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், நீங்களாக திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள்.

மக்களாக ஊடகங்களை தூக்கி எறியும் நிலை உருவாகும்” என்றும் அவர்  தெரிவித்தார்.

Puthinappalakai