புதிய ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி

0
935

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், புதிதாக சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியர்களுக்கான, சேவைக்கு முன்னரான திசைமுகப்படுத்தும் பயிற்சி சனி(06), ஞாயிறு(07) ஆகிய தினங்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட குறிஞ்சாமுனை பாடசாலையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 01ம் திகதி நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையிலும், நவம்பர் மாதம் 09 திகதி தொடக்கம்; நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்விலும் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, நியமனப்பெற்று கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி முதல், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சேவையில் இணைந்து கொண்ட ஆசிரியர்களுக்கே இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்மொழி, ஆங்கிலம், கணிதம், வரலாறு, அழகியல் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட 72ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் முதல்நாள் தியானம், வலயத்தின் நிலை தொடர்பான அறிமுகம், ஆசிரியர் ஒழுக்கக்கோவை, நவீன கற்பித்தல் உத்தி முறைகள் தொடர்பில் எடுத்துக்கூறப்பட்டது. இரண்டாம் நாள், யோகாசனம்;, பாடசாலைக்கான திட்டம் தயாரித்தல்;, ஆசிரியர் சேவை பதவியுயர்வு, வழிகாட்டல் ஆலோசனை, செயற்பாட்டுத்திட்டம், வேலைத்;திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த இரு நாள் பயிற்சியிலும் வளவாளர்களாக, வலயத்தின் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.மகேந்திரகுமார், க.ஹரிகரராஜ், எஸ்.சுரநுதன், உதவிக்கல்விப் பணிப்பாளர், தொழில்வழிகாட்டல் உத்தியோகத்தர் கே.சிறிதரன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான ஜெகதரன், ஜெயதரன், த.குணரெத்தினம், மாணிக்கவாசகம் ஆகியோர் செயற்பட்டனர்.