விடுதலை இயக்கத்தைச் சுக்கு நூறாக்கிவிட்டு மகிந்த ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளையாக செயற்பட்டவர் பிள்ளையான்.

0
758

‘உலகத்தையே தன்வசம் திரும்பிப் பார்க்கச் செய்த விடுதலை இயக்கத்தைச் சுக்கு நூறாக்கிவிட்டு மகிந்த ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளைகளாக  பிள்ளையான் போன்றோர் மாறினர் அதனால் தான் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு புளியந்தீவு 18 ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் அந்தோனி கிருராஜனின் தேர்தல் செயற்பாடுகளுக்காக தேர்தல் அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

இதில் அதிதியாகக் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர் மகிந்த ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளையாக இருந்தாரே ஒழிய உண்மையிலே அந்த கிழக்கு மாகாணசபையிலே உறுப்பினர்னளால் தெரிவு செய்யப்படவில்லை. ஆனால் அவருக்கு கிடைத்த ஆசீர்வாதத்தால் மட்டும் முதலமைச்சரானார்.

கிழக்கு மாகாணத்திலே 11 உறுப்பினர்களை எடுத்துக் கொண்டு முஸ்லிம் காங்கிரசை ஆளச் செய்தோம் என தம்பி பிரசாந்தன் சொல்லுகின்றார்.

ஆனால் உண்மை அதுவல்ல

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீரை உருவாக்கியவர்கள் பிள்ளையான் உள்ளிட்டவர்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது

ஹாபீஸ் நசீரை முதலமைச்சர் ஆக்கியது பிள்ளையான் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களான கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரான உதுமாலெப்பை உள்ளிட்டவர்கள் சேர்ந்து அவர்கள் 19 பேர் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தின் மூலம் முதலமைச்சராக ஆக்கப்பட்டவர்தான் ஹாபீஸ் நசீர்.

அவர் முதலமைச்சராக ஆக்கப்பட்டதன் பிறகு மத்திய அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்த்துக் கொண்டுதான் கிழக்கு மாகாணம் ஆட்சி செய்யப்படவேண்டும் என்ற நெறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதன் பின்பு எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த ஆட்சியில் பங்காளியாக மாறுவதற்கு அவசியம் ஏற்பட்டது.

ஆக அப்போது இருக்கின்ற நிலமையைப் பார்த்து இந்த நிலமையை அனுசரித்து இதனடிப்படையிலே எங்கள் மக்களுக்கு அபிவிருத்தியையும் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேதான் முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடைய கொள்கையோடு ஓரளவிற்கு செயற்படுவதால் ஓர் கட்சி என்ற அடிப்படையில் சேர்ந்து கொண்டு நாங்கள் கிழக்கு மாகாணத்திலே ஆட்சியிலே பங்காளியாக இருந்தோம்.

முதலமைச்சராக ஹாபீஸ் நசீரை உருவாக்கியவர்கள் பிள்ளையான் உள்ளிட்டவர்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது” என துரைராஜசிங்கம் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கருணாகரன், பொது சுகாதார பரிசோதகர் மனோகரன், முன்னாள் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விகிதாசார அடிப்படையில் போட்டியிடும் திருமதி லக்சலாதேவி, கமலரூபன் மற்றும் திருமதி சிந்துஜா ஆகியோருடன் வட்டார பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.