பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு விசாரணை 

0
447
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று புதன்கிழமை முதல் ஆரம்பமாகியது. இதனையடுத்து பிள்ளையான் உட்பட 6 பேர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால்  மேல் நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதவான் எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க(வினோத்) ஆகியோரும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கின் போது சந்தேக நபர்களை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
இந்த வழக்கு விசாரணைகள் காலையில் ஆரம்பமாகி மாலை வரை நீடித்தது.
இந்த வழக்கை யொட்டி மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் பொலிசார் மேலதிகமாக குவிக்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பிள்ளையான் என்றழைக்கப்படும்  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த வருடம் 2017 ம் ஆண்டு 11 நவம்பர் 3, 4ம் திகதிகள் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இஸ்ஸதீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் 2018 ஜனவரி மாதம் 3,4ஆம் திகதிகளிலும் 7,8 ம் திகதி வரை விசாணை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து புதன்கிழமை மீண்டும் விசாரணை காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.30 மணிவரை இடம்பெற்றது.  தொடர்ந்தும் இன்று  வியாழக்கிழமை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 8.3.2017 அன்று இடம் பெற்ற வழக்கின் போது சந்தேக நபர்களுக்கு தனித்தனியே வாசித்துக் காட்டப்பட்டு சந்தேக நபகர்களிடம் கையளிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில், நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.