ஏறாவூர் மக்கள் பெரும் தேசிய கட்சிகளை நம்ப வேண்டாம். அதிலும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என வந்துள்ள களுதையில் ஏறி பயணிக்கவும் வேண்டாம்

0
335

ஏறாவூர் மக்கள் பெரும் தேசிய கட்சிகளை நம்ப வேண்டாம். அதிலும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என வந்துள்ள களுதையில் ஏறி பயணிக்கவும் வேண்டாம்
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூரிலே இம்முறை மரச்சின்னத்தில் போட்டியிடாது கபட நாடகமாடியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அலி ஸாஹிர் மௌலானாவுக்குமிடையே முரண்பாடு என்பதையும் அடிப்படையாக வைத்து முன்னாள் முதலமைச்சரின் அணி யானைச்சின்னத்திலும், அலி ஸாஹிர் மௌலானாவின் அணி ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களது மூத்த சகோதரரை தலைவராகவும் றவூப் ஹக்கீமின் மைத்துனரை செயலாளராகவும் கொண்ட முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் கள நிலவரம் தொடர்பாக நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பஷீர் சேகு தாவூத் இங்கு மேலும் கருத்துக்கூறுகையில்– இத்தேர்தலில் அலி ஸாஹிர் மௌலானாவின் அணி யானைச் சின்னத்தில் சிக்கியுள்ளவர்களைவிட மிகவும் பாரதூரமான சதி வலைக்குள் அகப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சருக்கும் அலி ஸாஹிர் மௌலானாவுக்குமிடையில் நீண்டநாட்களாக முரண்பாடு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் வேட்பாளர்களை நியமிக்கும் விடயத்திலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அலி ஸாஹிர் மௌலானா தனக்குச் சார்பானவர்களை சுயேச்சைக்குழுவில் போட்டியிட வைக்கும் நோக்கத்துடன் அப்போது நடைபெற்ற பேச்சவார்த்தையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அவ்வேளை அக்கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் மௌலானாவை அழைத்து சுயேச்சைக்குழு இன்றி முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுமாறுகோரி அக்கட்சியை வழங்கியுள்ளார்.

முஸ்லிம் கூட்டமைப்பின் அடிப்டைபற்றி அப்பாவி அலி ஸாஹிர் மௌலானாவுக்குத் தெரியாது. அலி ஸாஹிர் மௌலானா முஸ்லிம் காங்கிரஸ{க்குப் புதியவர். ஹக்கீமின் ஏமாற்றுவித்தைகளை அவர் அறியவில்லை என்றார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில்– பொதுவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் வருடாந்த கூட்டத்தில் 2000 அங்கத்தவர்கள் ஒன்று கூட்டி தலைமைப் பதவி உள்ளிட்ட பதவிநிலை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதுண்டு.

ஆனால் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் தொத்தமாக 25 பேர் மாத்திரமே அங்கத்தவர்களாக உள்ளனர். அதிகமாக உறுப்பினர்களை இணைத்தால் தலைமைப் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதனால் முன்னாள் முதலமைச்சர் நஸீர் ஹாபிஸினுடைய குடும்ப உறவினர்கள் மற்றும் அவரது கம்பனிகளில் வேலை செய்பவர்களை இணைத்து கட்சி நிருவாகிகளைத் தெரிவுசெய்து கட்சியை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இந்த கட்சியில் உள்ள 25 பேரும் நினைத்தால், வருடாந்த மாநாட்டினைக் கூட்டி அதன் தற்போதைய செயலாளரை பதவி நீக்கம் செய்யமுடியும். அதையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுடைய குடும்ப உறவினரை செயலாளராக நியமிக்கலாம்.

அத்துடன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஏறாவூர் நகர சபைக்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம். மேலும் இரண்டு வாரங்களுக்குள் அந்த உறுப்பினர்களை நீக்கிவிட்டு அவர் விரும்பியவர்களை நியமிக்கும் பாரிய ஆப்பத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் அணி சிக்கியிருக்கிறது.

அலி ஸாஹிர் மௌலானா அணி இம்முறை சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டிருந்தால் நாங்கள் இந்த தேர்தலில் வேறு அணியாகப் போட்டியிட்டிருக்க மாட்டோம். அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருப்போம்.

எனவே மௌலானா அவர்கள் இப்போது அகப்பட்டிருப்பது ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களது கால்களின் பாதங்களில் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் நோக்கினால் மௌலானாவின் அணியில் யார் யார் உறுப்பனராகத் தெரிவுசெய்யப்பட்டாலும் அவர்களில் ஹாபிஸ் நஸீர் அஹமட் விரும்பியவர்கள் மாத்திரமே சபையில் பிரதிநிதித்துவம் செய்யமுடியும். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை வழிநாடத்தும் அதிகாரம் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கே உண்டு.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் தேசிய அரசியலின் முத்தாக கருதப்படுகின்ற ஏறாவூர் மண்ணையும் அரசியல் கௌரவத்தையும் ஒரு டம்மி யிடம் கையளிக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் ஏராவூர் மண்ணுக்கு ஆடிய கபட நாடகத்தின் பின்னால் போகாமல் உடனடியாக வெளியேறுமாறு அலி ஸாஹிர் மௌலானா அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏறாவூர் மக்கள் பெரும் தேசிய கட்சிகளை நம்ப வேண்டாம். அதிலும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என வந்துள்ள களுதையில் ஏறி பயணிக்கவும் வேண்டாம் என அனைவரை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.