அரசின் முயற்சிகளை ஜனாதாரத்தமாக்க வேண்டியது அரச உத்தியோகத்தர்களே – மட்டு.அரசாங்க அதிபர் 

0
371

நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் அரசு எடுக்கின்ற முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதனை ஜதார்த்தமாக்கவேண்டிய தேவை அரசாங்க உத்தியோகத்தர்களாகிய எங்களையே சாரும். அதற்கு அரச உத்தியோகத்தர்கள் முதன்மையானவர்களாகவும் முன்னுதாரணமானவர்களாகவும் திகழ்தல் வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற புதிய வருட வரவேற்பு, சத்தியப்பிரமாண நிகழ்வில் உரையாற்றும் போதே மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் , உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, திணைக்களத் தலைவர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், 

ஓர் ஆண்டுக்கு விடைகொடுத்து இன்னொரு ஆண்டினை வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் 2018ஆம் ஆண்டு எங்களுடைய கடமையினை ஆரம்பிக்கின்ற இன்று, அரசாங்க சேவையினுடைய புனிதம்கருதியும், அதனுடைய அத்தியாவசியம் கருதியும் உறுதிமொழியினை நாங்கள் எடுத்திருக்கின்றோம். 

ஒரே நாட்டிலே ஒரே கொடியின் கீழ்  அனைத்து மக்களும் சமமானதொரு நிலையிலே அனைத்து மக்களுக்குமான அரசாங்கத்தினுடைய சேவையினை பக்கச்சார்பின்றி நேர்மையாகவும், பயனுறுதி மிக்கதாகவும் அர்ப்பணிப்புடனும் செய்வதற்கு திட சங்கற்பம் பூண்டிருக்கின்றோம். 

உண்மையிலே இந்த அரசாங்க சேவையினுடைய மகத்துவத்தினை உங்களுடைய சேவையை மக்களுக்கு வழங்குகின்ற பொது அவர்கள் பெற்றுக் கொள்கின்ற மன நிறைவின் ஊடாகத்தான் அளவிட்டுக் கொள்ள முடியும். 

எங்களுக்குக்கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தினை எங்களுடைய மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு  காத்திரமான முறையில் செலவிடுவது மிகவும் முக்கியமானதாகும். 2018ஆம் அண்டைப் பொறுத்தவரயில் உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்துவதற்கு முனைந்திருக்கிறது. 

சுற்றாடல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, போசாக்கு தொற்றாத நோய்கள் தொடர்பான பாதுகாப்பு, போதையற்ற நாடு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களுக்கூடாக இந்த நட்டிலே வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் பாதுகாப்பான சுமுகமான சுகாதாரமான வாழ்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலே அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுவதை நீங்கள் அறிவீர்கள். அந்த அர்ப்பணிப்புடன் அரசு எடுக்கின்ற இந்த முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதனை ஜதார்த்தமாக்கவேண்டிய தேவை அரசாங்க உத்தியோகத்தர்களாகிய எங்களையே சாரும். அதற்கு அரச உத்தியோகத்தர்கள் முதன்மையானவர்களாகவும் முன்னுதாரணமானவர்களாகவும் திகழ்தல் வேண்டும். 

அரச உத்தியோகத்தர்களுடைய பழக்க வழக்கங்கள் நடையுடை பாவனை, முன்மாதிரி, எடுத்துக்காட்டு போன்ற அரிய பழக்க வழக்கங்கள் ஊடாக இந்த நாட்டில் இருக்கின்ற நற்பிரஜைகளுடைய வாழ்க்கையிலே வளமான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். 

ஒரு தலைமைத்துவத்தினுடைய செயற்பாட்டில் ஒன்றாக இணைந்து எங்களுடைய நிறுவனத்தினுடையதும், நாட்டினுடையதும் நோக்கினை இலக்காகக் கொண்டு அந்த நோக்கத்தினைச் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்து அவற்றினை முன்னெடுக்க வேண்டியது அரசாங்க உத்தியோகத்தருடைய தலையாய கடமையாக இருக்கின்றது.

தலைமைதாங்குதல், மற்றவர்களுடன் அன்னியோன்னியமாகச் செயற்பட்டு ஒரு குழுவாக இணைந்து மக்களுடைய தேவைகளை பூரணமாக நிறைவு செய்வதில் நாங்கள் முன்னின்று உழைத்தல் வேண்டும். சுரண்டல், பதவிகளைத் துஸ்பிரயோக் செய்தல், ஊழல், மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதில் பின்தங்கியிருக்கின்ற நிலை  போன்றவற்றிலிருந்து அரச உத்தியோகத்தர்கள் விடுபடுவது மிகவும் அவசியமானதாகும். 

உங்களுக்குத் தெரியும் அரசாங்க உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரையில் கால இழுத்தடித்தல், ஊழல் ஆகிய இரண்டு பாரிய குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்படுகின்றது. இந்த இரண்டு விடயங்களில் இருந்து  நாங்கள் தவிர்த்துக் கொள்வதன் ஊடாகத்தான் எங்களுடைய மக்களின் நம்பிக்கையினை பெற்றுக் கொள்ளமுடியும். எங்களைப் பொறுத்தவரையில் எங்களுடைய வாடிக்கையாளர்கள் பொது மக்களாவர். அவர்கள் தேடிவருகின்ற சேவையை உடனுக்குடன் நிறைவு செய்வதன் ஊடாகவும், தேவையை தாமதமின்றிப் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் உதவுவதன் ஊடாகவும் மக்களுடைய நன்மதிப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும். அந்த நன்மதிப்பைப் பாதுகாப்பாதாக இருந்தால் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் சமத்துவமான போன்ற நல்லாட்சியினுடைய அம்சங்களை அரசாங்க உத்தியோகத்தர்கள் பின்பற்றி நடந்து கொள்வது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. 

எங்களை நோக்கி வருகின்ற விமர்சனங்களை நாங்கள் ஒதுக்கி விடாமல் விமர்சனங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அவ்வாறான விமர்சனங்களில் உண்மைத்தன்மை இருக்குமாக இருந்தால் அவற்றைச் செய்பவர்களுக்கு தண்டனைகளை வழங்குவது மாத்திரமல்ல அவ்வாறான விமர்சனங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் செயற்படுவது மக்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 

எங்களைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள். மிகவும் சிறப்பாக நேர்மையாக, கடுமையாக உழைக்கின்ற உத்துPயnhகத்தர்கள் என்றே நான் அறிவேன். இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் கடமையாற்ற முடிந்த பொழுது எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்களின் அருமைத்தன்மை பற்றி நான் உணர்ந்திருக்கிறேன். இந்த நல்ல பெயரினை தக்கவைத்தவர்களாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மிகவும் தேவை நாடி நிற்கின்ற, மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமாக உழைப்பதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும் என்று தெரிவித்தார்.