இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கெதிரான தனது நடவடிக்கைகளை ஜனாதிபதி விரைவில் முன்னெடுக்கவுள்ளார்

0
279

நாட்டில் இடம்பெற்றுள்ள இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளுக்கெதிரான தனது நடவடிக்கைகளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் முடிவுற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் பாரபட்சமின்றி முனைப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இங்கு பஷீர் சேகுதாவூத் மேலும் பேசுகையில்– இத்தேர்தல் வெறுமனே உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அல்ல. புதிய தேர்தல் திருத்தச்சட்டத்திற்கான அங்கீகாரமாக கருதப்படும் கருத்துக்கணிப்பாகும். அதனடிப்டையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். அவ்வாறு மாற்றினால் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறைவரும். இந்தத் தேர்தல் முறையை மாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்ரிக்கு மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுக்கும் விருப்பம் இருக்கிறது. தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறை நாட்டிலுள்ள பெரிய இனங்களான சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கும் தான் வாய்ப்பானது. மாறாக கடந்த முப்பது வருடகாலமாக இலங்கை அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த முஸ்லிம்களுக்கான கழுத்தறுப்பாகவே இருக்கும்.
புதிய கூட்டரசாங்கத்தில் எடுக்கப்பட்ட பல சட்ட திருத்தங்கள் மூலம் முஸ்லிம்கள் மொத்தமாக அகப்பட்டுள்ளார்கள். ஏறாவூர் முஸ்லிம் மக்கள் தனியாக அகப்பட்டு உறுஞ்சப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஏறாவூர் முஸ்லிம்களையும் இலங்கை முஸ்லிம்களையும் அரசியல் ரீதியாக படுகுழியில் புதைப்பதற்கு எடுத்த சட்ட பூர்வமான மாற்றங்களை எதிர்த்து வாக்களிக்கின்றோம் என சொல்லி எமது தலைவிதியை மாற்றுகின்ற வாக்காக வண்ணாத்திப் பூச்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது வழக்கம்போல யானைக்கு வாக்களிக்க வேண்டுமா? கை சின்னத்துக் வாக்களிக்க வேண்டுமா? அல்லது சுயேட்சைகளுக்கு வாக்களிக்க வேண்டுமா? என சிந்தித்துபாருங்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் செய்த ஊழல் தொடர்பாக இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படாவிட்டாலும் விசாரணை நடைபெற்று முடிந்து விட்டது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி சிக்குகின்ற பிணை முறை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு பல தீர்மானம் எடுத்துள்ளது. அந்த அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது. இந்த அறிக்கை வெளிவந்தவுடன் என்ன நடக்கும் என்பதுதான் கேள்வி? ஐக்கிய தேசிய கட்சி முரண்பட்டால் இந்த தேர்தல் வாக்குகளில் பாரிய மாற்றம் ஏற்படும்.

கிராமப் புறங்களில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிகமாகவும் நகரப் புறங்களில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெரும்பான்மையாகவும் அங்காங்கே தொட்டம் தொட்டமாக மைத்திரிக்கும் செல்வாக்கு உள்ளது. கடந்த காலங்களில் இரண்டு கட்சிகளிடையே போட்டி நடைபெற்றது ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சமனாக மஹிந்தவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதற்கு சற்று குறைவான ஆதரவுடன் சுதந்திர கட்சியும் உள்ளது.

இந்த நாட்டின் ஊழலை ஒழித்த நல்ல ஜனாதிபதி என நிருபிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தற்போது வாளை கையில் எடுத்திருக்கிறார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளிவந்தவுடன் அந்த வாள் சுழலும். அதன் பின்பு நாட்டின் ஒட்டுமொத்த அரசியலிலும் மாற்றம் ஏற்படும்.

மைத்திரி, ரணில் மற்றும் மஹிந்த மூன்றில் ஒரு பங்கு என்ற ரீதியில் இந்த தேர்தலில் வாக்குகளைப் பெறுவார்கள். இந்த நிலையில் மைத்திரி யாருடன் சேருவார்? ஊழல் செய்த இருவருடனும் சேர முடியாது. இந்த நிலையில் ரணில் மற்றும் மஹிந்தவுடன் இருக்கின்ற நேர்மையானவர்கள் மைத்திரிடன் இணைவார்கள் இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகிறார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவில் இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படுகின்ற மறுமலர்ச்சியும் மாற்றமும் பலருக்கு ஏமாற்றமாக அமையும். சிலருக்கு உண்மையான மாற்றமாக வரும்.

இதற்கிடையே அடுத்த வருடம் செப்டம்பர் மாத்தில் வட மாகாணசபையும் கலையும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தள்ளிவைப்பதைப் போன்று வட மாகாணசபையை தள்ளி வைக்க முடியாது.

அது சர்வதேசத்துக்குச் செல்லும்;. அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலுக்குரிய காலமாகும். 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குரிய காலம் வரும்.

தேர்தல் முறை மாற்றப்பட்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றால் தமிழர்களுக்கு நஷ்டம் ஏற்படமாட்டாது. 18 தொகுதிகளும் வெற்றிபெறுவார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கே பாதிப்பு எற்படும். தொகுதி ரீதியான தீர்மானம் எட்டப்படும்போது முஸ்லிம்கள் கைவிடப்பட்டுவிடுவோம் என்றார்.